எது உண்மையான தங்கம்?

எது உண்மையான தங்கம்?
Updated on
1 min read

ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடர் சுவாமி அகண்டானந்தர். அவர் ஒருமுறை இமயமலைப் பகுதிகளில் யாத்திரை செய்து கொண்டிருந்தார். அவருடைய தவ வாழ்வில் அந்தப் பயணம் பல உண்மைகளைப் புரிய வைத்தது. பின்னாளில் பக்தர்களிடமும் சீடர்களிடமும் தன் யாத்திரை அனுபவங்களைச் சொன்னார். அப்படித்தான் 1937-ம் ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி ஓர் அனுபவத்தைத் தனது சீடர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

பத்ரிநாத்தில் கஞ்சப் பேர்வழி ஒருவர் இருந்தார். எப்போதும் பணம் ஒன்றே அவருடைய ஒரே சிந்தனையாக இருந்தது. எவருக்கும் எந்தச் சிறு உதவியும் செய்ததில்லை ஒரு நாள் பத்ரிநாத்துக்குத் துறவி ஒருவர் வந்தார். நல்ல உயரமும் திடகாத்திரமுமாக இருந்தார் அவர். கஞ்சப் பேர்வழியின் பேச்சையும் நடவடிக்கைகளையும் பற்றிப் பிறர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டார். சில நாட்களில் அவருக்கு அந்தக் கஞ்சப்பேர்வழியிடம் பழக்கம் ஏற்பட்டது.

மூன்றே நாளில் தங்கம்

துறவி, அந்தக் கஞ்சப் பேர்வழியிடம் “வெறும் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களிடம் இருக்கும் பணத்தையெல்லாம் கொடுங்கள். மூன்றே நாள்களில் தங்கமாக மாற்றித் தருகிறேன்.” என்றார்.

எப்போதும் பணத்தையே எண்ணிக்கொண்டிருந்த அவருக்கும் அது நல்ல திட்டமாகத் தெரிந்தது. தன்னிடம் இருந்த பெருந்தொகையைத் துறவியிடம் கொடுத்தார். மறக்காமல் மூன்று நாள்களில் அனைத்தையும் தங்கமாக மாற்றிக் கொடுத்துவிட வேண்டும்; இத்தனை நாள் பாடுபட்டுப் பாதுகாத்த பணம் என்று சொல்லித் துறவியிடம் தன் பணத்தையெல்லாம் ஒப்படைத்தார். துறவி, பணத்தைப் பெற்றுக் கொண்டு தலையசைத்துச் சென்றுவிட்டார்.

ஒவ்வொரு நாளும் அந்த மகாகருமி, தான் கொடுத்த பணத்துக்குரிய தங்கத்தைத் துறவி தருவாரா என்று எதிர்பார்த்துக்கொண்டேயிருந்தார். நாள் தவறாமல் அவரிடம் தங்கம் கிடைத்துவிடுமல்லவா என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். மூன்றாவது நாள். கஞ்சப் பேர்வழி காலையில் இருந்தே துறவியிடம் “எங்கே தங்கம்? எங்கே தங்கம்?” என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்.

தானமே தங்கம்

துறவியோ எந்தப் பதிலும் சொல்லவில்லை. மதிய நேரம் ஆயிற்று. நெடுநெடுவென வளர்ந்த அந்தத் துறவி “சரி,போகலாம் வாருங்கள்” என்றார். உடனே அவரோடு அந்தப் பேர்வழி கிளம்பினார். துறவி அவரை அருகில் இருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கே நிறைய சாதுக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கருமிக்கோ குழப்பம். அவர் முகத்தைப் பார்த்தார் துறவி. தங்கத்தை எதிர்பார்த்து வந்த கருமி குழம்பிப்போனார்.

“இதோ எங்கெங்கிருந்தோ வந்த சாதுக்கள் எல்லாம் இங்கே உங்களால் பசியாறுகிறார்கள். இந்தப் புனித சாதுக்களுக்கு உணவளிக்கும் சேவையில் உங்களிடமிருந்த பணம் எப்படித் தங்கமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். இதைவிட உயர்ந்த தங்கம் இந்த உலகத்தில் எங்கே இருக்க முடியும்?” என்றார்.

அந்தக் கஞ்சப் பேர்வழிக்குக் கிட்டிய உண்மையான தங்கத்தை எந்தத் தராசால் எடைபோட முடியும்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in