

கானானில் உள்ள அனைத்து நகரங்களைச் சேர்ந்தவர்களும் எரிகோவைத் தோற்கடிக்க முடியாது என்று நினைத்தார்கள். ஆனால் எரிகோ முற்றிலுமாக வீழ்த்தப்பட்ட பின்னர், இஸ்ரவேலர்களின் தலைவராகிய யோசுவாவின் புகழ் கானான் தேசம் முழுவதும் பரவியது. பாவக்கோட்டையாக விளங்கிவந்த எரிகோ, அதன் பிறகு தலையெடுக்கவே கூடாது என்று கடவுள் விரும்பினார். “எரிகோவை மீண்டும் கட்டியெழுப்புகிற எவனும் கடவுளால் அழிவைக் காண்பான். இந்த நகரின் அஸ்திவாரத்தை இடுபவன், தனது தலைமகனை இழப்பான். நகர வாயிலை அமைப்பவன், தனது கடைசி மகனை இழப்பான்” என யோசுவா எரிகோவைச் சபித்தார்.
ஆயீ நகரத்தில் விழுந்த அடி
எரிகோவைத் தோற்கடித்த பின் பெத்தேல் நகரத்துக்குக் கிழக்காக இருந்த ஆயீ நகரத்தைத் தோற்கடிக்க யோசுவா விரும்பினார். இதனால் சில உளவாளிகளை அங்கே அனுப்பி, அந்த நகரத்தின் பலவீனங்களை அறிந்துவரும்படி அனுப்பினார். அவ்வண்ணமே உளவறிந்து திரும்பிய அவர்கள் யோசுவாவிடம் வந்து, “அதுவொரு பலவீனமான பகுதி. அதைத் தோற்கடிக்க மூவாயிரம் பேரை மட்டும் அனுப்பினால் போதும். நம்மை எதிர்த்துப் போர்புரிய அங்கே சில மனிதர்களே உள்ளனர்” என்றார்கள்.
இதை நம்பிய யோசுவா, மூவாயிரம் பேரை மட்டும் ஆயீக்கு அனுப்பினார். ஆனால் ஆயீயின் மக்கள் மிக ஆக்ரோஷமாகப் போரிட்டு இஸ்ரவேலர்களில் 36 பேரைக் கொன்று குவித்தனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத எஞ்சிய இஸ்ரவேல் வீரர்கள் சிதறி ஓடினர். நகரின் மலைச்சரிவு வரையிலும் அவர்களைத் துரத்தியடித்தார்கள். எரிக்கோவையே வீழ்த்திய தங்களுக்கு ஒரு சிறு நகர மக்கள் தோல்வியைப் பரிசாகக் கொடுத்து அனுப்பிய செய்தி யோசுவாவின் காதுகளை எட்டியது.
அதைக் கேட்டதும் துயருற்று தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்ட யோசுவா உடனடியாகக் கடவுளை வழிபடும் ஆசாரிப்புக் கூடாரத்துக்குச்சென்று அங்கிருந்த பரிசுத்தப் பெட்டியின் முன்பு விழுந்து வணங்கிக் கண்ணீர் சிந்தினார். பொழுது சாயும்வரை கடவுளைத் துதித்தபடி தண்ணீர் அருந்தாமல் அங்கேயே இருந்தார். இஸ்ரவேலர்களின் பன்னிரெண்டு கோத்திரத்தாருக்குரிய தலைவர்களும் யோசுவாவின் இந்த நிலையைக் கண்டு ஆசாரிப்புக் கூடாரத்தின் வாசலிலேயே காத்திருந்தார்கள்.
ரகசிய பாவம் செய்தவன்
பரலோகத் தந்தையாகிய யகோவா, யோசுவாவின் நிலையைக் கண்டு மனமிரங்கினார். அவர் யோசுவாவை நோக்கி, “உன் முகத்தைத் தரையில் கவிழ்த்து ஏன் விழுந்து கிடக்கிறாய்? எழுந்து நில்! எரிகோவில் அழித்துவிடும்படி நான் கட்டளையிட்ட பொருட்களை இஸ்ரவேல் மக்களில் ஒருவன் எடுத்து வைத்திருக்கிறான். தனக்காக அவன் அவற்றை எடுத்து வைத்திருக்கிறான். இச்செயல் எனக்கு விரோதமானது. அதனால்தான் இஸ்ரவேலரின் படை, போரில் புறமுதுகு காட்டி ஓடிவந்தது. நீங்கள் பொய் கூறியதாலேயே அவ்விதம் நடந்தது. அழிக்க வேண்டுமென நான் கட்டளையிட்டவற்றை அழிக்காவிட்டால் நான் உங்களோடு இருக்க மாட்டேன். இதன் பின்னர் உங்கள் பகைவர்களை ஒருபோதும் நீங்கள் வெல்ல முடியாது” என்றார்.
அகப்பட்டுக்கொண்ட ஆகான்
கடவுள் யோசுவாவிடம் குறிப்பிட்டபடியே, மறுநாள் காலை ஆசாரிப்பு கூடாரத்தின் முன் இஸ்ரவேல் கோத்திரத்தாரின் அனைத்துக் குடும்ப ஆண்களையும் யோசுவா கூட்டினார். யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஆகானைக் கடவுள் அடையாளம் காட்டினார். இனி எதையும் மறைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த ஆகான், “நமது கடவுளாகிய யகோவாவுக்கு எதிராக நாம் பாவம் செய்தது உண்மை. நாம் எரிகோவைக் கைப்பற்றியபோது பாபிலோனிலிருந்து தருவிக்கப்பட்ட அழகிய மேலாடை ஒன்றையும், சுமார் ஐந்து பவுண்டு வெள்ளி, ஒரு பவுண்டு தங்கப் பாளம் ஆகியவற்றையும் கண்டேன்.
அவற்றின்மீது இச்சை கொண்டு, யாருக்கும் தெரியாது என்று எண்ணி அவற்றை ரகசியமாக என் கூடாரத்திற்கடியிலுள்ள நிலத்தில் புதைத்து வைத்திருக்கிறேன்” என்று வாக்குமூலம் தந்தான். இதனால் ஆகானிடமிருந்து கைப்பற்றப்பட்ட மேலாடை, வெள்ளி, தங்கம் உள்ளிட்ட அவனது மற்ற அனைத்து உடமைகளோடு ஆகான், அவனது குடும்பத்தினர் அனைவரையும் ஆகோர் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவனது பொருட்கள் அனைத்தையும் எரித்த பின் ஆகானையும் அவனது குடும்பத்தினரையும் கல்லெறிந்து கொன்றனர்.
மன்னிக்கமுடியாத பாவம்
உலகப்பொருட்களின் மீது இச்சை கொண்டு, ஆகான் அவற்றைப் புதைத்து வைத்ததை வெளிப்படுத்திய கடவுள் அவனை மன்னிக்கவில்லை. தான் பிடிபடும் வரை உண்மையை அவன் மறைத்து வைத்ததே ஆகான் மீதான கடவுளின் கோபம் குறையாமல் போனதற்கான காரணம். தனக்குச் சொந்தமில்லாத பொருளை அபகரித்த ஆகான் அதைக் கடவுளுக்கு விரோதமாகச் சேர்த்துவைத்த பேராசை அவனை மட்டுமல்ல; அவன் குடும்பத்தையும் அழித்தது. ஆகானின் அழிவுக்குப் பின்னர் இஸ்ரவேல் மக்களுக்குக் கடவுள் வெற்றிகளைத் தந்தார். ஆயியையும் அவர்கள் கைப்பற்றினார்கள்.
(பைபிள் கதைகள் தொடரும்)