

நீங்கள் உண்மையிலேயே இருக்கிறீர்களா? நான் என்பது இருக்கிறதா? இதுபோன்ற கேள்விகளை நாம் அதிகம் கேட்டுக்கொள்வதில்லை. ‘நான்’ என்ற தனியான சுயம் ஒன்று இல்லை என்பதைத் திட்டவட்டமாக மறுக்கிறது ‘லிபரேஷன் அன்லீஷ்ட்’ இணையதளம். 2011-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி அன்று இலோனா சிவுநைட் மற்றும் எலினா நெலின்ஸ்கி ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த இணையதளம், தனிமனம் மற்றும் தனிச்சுயம் என்ற மாயைகளிலிருந்து விடுபடும் வழிகளை தன்னார்வலர்கள் வழியாகவும், இணையக் குழுக்களின் உரையாடல்கள், முகநூல் குழுக்கள், வலைப்பூக்கள் வழியாகவும் செய்துகொண்டிருக்கிறது. நாம் நமக்குள் பார்க்கும் தைரியமும் ஆர்வமும் இருந்தால் அதற்கான வழிகாட்டுதல்கள் இதில் உள்ளன. இந்த இணையதளத்தின் நிறுவனர் இலோனா சிவுநைட். இந்த உலகளாவிய வலைப்பின்னல் குறித்த அறிமுகம் இதோ…
லிபரேஷன் அன்லீஷ்ட் என்ன செய்கிறது?
இந்த உலகத்தின் இயற்கையிலிருந்து தாம் தனித்தவர்கள் என்ற மாயையிலிருந்து விடுபட்ட அனுபவத்தைப் பெற்ற மக்களுக்கான உலகளாவிய வலைப்பின்னல் இது. இந்த விழிப்புணர்வை அடைந்தவர்கள் பிறரோடு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் தளம் இது.
இது அல்ல அது
நேரடியாகத் துல்லியமாகப் பார்க்க வைப்பதற்குப் பதில், ஞானத்தை நோக்கிய ஒருவரின் பயணம், அடர்த்தியான எதிர்பார்ப்பு களாலும் கதைகளாலும் பின்னப்பட்டதுதான் அந்தப் பாதைக்குத் தடையாகிப் போகிறது. இந்த எதிர்பார்ப்பு அனைத்தையும் அடுக்கி அவையெதுவும் இல்லையென்பதை உணரச் செய்வதே இதன் முதல்படி.
இது அன்றாட வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்கான வழியல்ல. கூடுதலாக எதையும் பெறுவதோ சிறப்பானவராக ஆவதோ இதன் நோக்கம் அல்ல. மேலான, அதிஉன்னதமான பிரக்ஞை நிலையையும் இதனால் எட்டிவிட முடியாது. சில குறிப்பிட்ட கருத்தோட்டங்களை நம்புவதற்கு மனதைப் பழக்கும் தந்திரமும் இதில் கிடையாது. குறிப்பிட்ட அறிவை இதன் மூலம் பெறமுடியாது. இதன் மூலம் புனிதமாகவோ, அருமையானவராகவோ, ஒழுக்கமானவராகவோ நல்ல மனிதராகவோ மாறிவிட முடியாது. இது நம்பிக்கையோ, சமயமோ, தத்துவமோ, மாயாவாதமோ கிடை யாது. பணமோ பொருளோ இதனால் சேராது. இது சுய முன்னேற்றத் திட்டமும் அல்ல.
நான் ஏன் இதை விரும்பவேண்டும்?
நம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு குறைபாட்டை உணர்பவர்களாக இருக்கிறோம். ஆனால் அது சரியான உணர்வல்ல. இந்த உணர்விலிருந்து வெளியேறுவதற்கு வெவ்வேறு பாதைகளைத் தேடுகிறோம். நாம் முழுமையடைய முடியும் என்று நம்புகிறோம்.
இந்தப் பாதையில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ‘நான் யார்’ என்ற கேள்வி வரும். அது தெளிவானவுடன் இந்த உலகில், உறவுகளில், உடைமைகளில், அனுபவங்களில் எதிலும் இந்த முழுமையில்லை என்று தெரிகிறது. அப்போது தேடல் உள்ளே திரும்புகிறது.
சுயம் என்பது என்ன?
அப்போதுதான் சுயம் என்பது பற்றிய கேள்வி வருகிறது. யார் அல்லது எது இந்த முழுமையையும் விடுதலையையும் தேடுகிறது? இங்கே தான் ‘லிபரேஷன் அன்லீஷ்ட்’ தலையிடுகிறது. ஒரேயொரு கணம் உங்கள் மனதைத் தொந்தரவு செய்பவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, நீங்கள் சுயம் என்று நினைத்திருக்கும் அம்சத்தை உற்றுப்பாருங்கள். அந்தக் கற்பனை செய்யப்பட்ட மனசுயத்தை நீங்கள் நேரடியாகவும் நேர்மையுடனும் பார்த்தால், சுயம் என்பதே இல்லை என்பதோடு அப்படி ஒன்று இருந்ததே இல்லை என்பதும் தெரியவரும்.
அதை ஒரு கோட்பாட்டு சாத்தியமாக மட்டும் ஏற்றுக்கொள்ளாமல், அப்பட்டமாகப் பார்க்கும்போது ‘தனியான மனச்சுயம்’ என்பதின் மீதான நம்பிக்கை படிப்படியாக விழத்தொடங்கி விடும். நமது இயற்கையான இருப்பு நிலையை உணரமுடியும். இந்த மனச்சுயம் சார்ந்த மாயையிலிருந்து விடுபடுவதைத் தான் நாங்கள் விடுதலை என்கிறோம்.
நமக்குள் பார்ப்பது அத்தனை சிரமமா?
ஆம், இல்லை. இரண்டும்தான். ஏன் சிரமம் என்றால், அது மிகவும் எளிமையானது என்பதுதான். ஏனெனில் நமது மனம், சிக்கலை விரும்புகிறது. அது நம்மை எண்ணற்ற புதிர் விளையாட்டுகளுக்குள் செலுத்தி அலைக்கழிக்க வைக்கக் கூடியது. உண்மையைத் தெரிந்துகொள்வதற்கு உண்மையான ஆசையும், நேரடி அனுபவத்தை அப்பட்டமாகப் பார்க்கும் உந்துதலும் இருந்தால், சுயத்தின் இன்மையைப் பார்ப்பது மிகவும் எளிதானது.
சுயம் என்பதின்றி என்னால் செயல்பட முடியுமா, வாழ்க்கைக்கான உந்துதலை நான் இழந்துவிட மாட்டேனா, என்ற கேள்வி நமக்குள் வரலாம். மனச் சுயத்தின் தலையீடு அற்று எல்லாமே சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் விழிப்புணர்வு அடைந்தபிறகு எந்தப் பெரிய மாற்றமும் ஏற்படுவதில்லை.
2011-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி அன்று இலோனா சிவுநைட் மற்றும் எலினா நெலின்ஸ்கி ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த இணையத்தளம், தனிமனம் மற்றும் தனிச்சுயம் என்ற மாயைகளிலிருந்து விடுபடும் வழிகளை தன்னார்வலர்கள் வழியாகவும், இணையக் குழுக்களின் உரையாடல்கள், முகநூல் குழுக்கள், வலைப்பூக்கள் வழியாகவும் செய்துகொண்டிருக்கிறது.
இறந்த காலம் குறித்தும், எதிர்காலம் குறித்தும் கவலைப்பட்டுக் கொண்டும் கனவுகண்டும் கொண்டிருக்கும் நமது மனத்தைத்தான் ‘நான்’ என்று கருதிக்கொண்டிருக்கிறோம். மனம் என்பதற்கும் ‘நான்’ என்ற உயிர் இருப்புக்கும் தொடர்பு கிடையாது; மனம் என்பது நினைவுகள், பழக்கங்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பு என்பதை இந்த இணையத்தளத்திலுள்ள கட்டுரைகள் உணர்த்துகின்றன. மனதிலிருந்து விடுபடத்தான் ஆயிக்கணக்கான ஆண்டுகளாக சித்தர்களும் ஞானிகளும் முயன்றுவருகிறார்கள். அதற்கு இந்த இணையதளமும் நமக்குப் பயன்படலாம்.