

இயல், இசை, நாட்டியம், நாடகம், கருத்தரங்கம், சொற்பொழிவுகள் எனக் கலையின் எல்லா வடிவங்களிலும் பக்தி உற்சவம், சென்னை, நாரத கான சபாவில் கடந்த 20 முதல் 23 வரை கொண்டாடப்பட்டது. பல கலைகளின் சங்கமமான இந்த நிகழ்ச்சிகளை மிகவும் நேர்த்தியாக கவசம் தொலைக்காட்சியும் கவுஸ்தப் ஊடகமும் ஏற்பாடு செய்திருந்தன.
பலவிதமான பூக்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலையாக இந்த நிகழ்ச்சிகள் பக்தி மணம் பரப்பினாலும், அவற்றில் பாரிஜாதமாய் வேளுக்குடி கிருஷ்ணனின் சொற்பொழிவு அமைந்தது.
நாரீ கவசர்கள்
புராணத்தில் ஆயிரக்கணக்கான கவசங்கள் உண்டு. அதில் சிலவற்றின் பெருமைகளையும் சிறப்புகளையும் தனக்கே உரிய விஷய ஞானத்தோடு விளக்கினார் வேளுக்குடி கிருஷ்ணன். பொதுவாக நம்மை ஆபத்தில் இருந்து காப்பதற்குப் பெயர்தான் கவசம். புராணத்தில் தங்களின் மனைவிகளையே கவசமாக்கி பகைவர்களிடமிருந்து தப்பித்த நாரீ கவசர்கள் எனப்படுபவர்களைப் பற்றி வேளுக்குடி நகைச்சுவையோடு கூறியதற்கு அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது.
கவசத்தின் பெருமை
சுவாமி தேசிகன் தொடாத துறையே இல்லை எனலாம். பகவானின் கருணையைப் பற்றிப் பேசுவது தயா சதகம் என்னும் ஸ்தோத்திரம். பாதுகா தேவியும், தயா தேவியும்தான் நம்மைப் பெருமாளிடம் அணுகச் செய்யும் தேவிகள். ஜீவனாகிய நாம் பகவானை வேண்டும்போது நமக்கு அவர் அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்பதற்குக் கருணையே காரணம். ஆனால் பெருமாளின் பொறுமையைச் சோதிப்பவர்களும் உண்டு.
ஜீவாத்மாவாகிய நாம் அடுத்தடுத்து செய்யும் பாவங்கள்தான், பகவானுக்கு செய்யும் சோதனைகள் இவை பகவானைத் துன்புறுத்தும். அதனால் பகவானுக்குக் கோபமும் வரும். கருணை என்ற கவசம், நம்முடைய துன்புறுத்தலிலிருந்து பகவானையே காப்பாற்றும். கருணை என்னும் கவசம் போட்டிருக்கும் சீனிவாசனையும் காப்பாற்றும். அவனை எதிர்த்து நிற்கின்ற நம்மையும் காப்பாற்றும் என்கிறது ஸ்தோத்திரம்.
கவசம் உடையும் தருணம்
பராசர பட்டர், ரங்கநாதரைப் பாராட்டி ஒரு கவசம் பாடி யிருக்கிறார். ஆனால் அந்த ஸ்தோத்திரம் உன்னுடைய பிராட்டி மகாலட்சுமியைப் பற்றி என்கிறார் பட்டர். உன்னுடைய பிராட்டியானவள், உன்னைவிட உயர்ந்தவள் என்று பாராட்டியிருக்கிறேன் என்கிறார். அதற்கும் பெருமாளிடமிருந்து புன்னகையே பதிலாக வருகிறது.
அந்த கிரந்தத்திற்குப் பெயரே, ஸ்ரீ குணரத்தின கோஷம். அம்பாளின் திருக்கல்யாண குணங்களை விவரிக்கும் ஸ்லோகங்கள் அவை. சரி… ஆகட்டும் பாடுங்கள் என்கிறார் பெருமாள். ஸ்தோத்திரத்தைக் கேட்பதற்கு நீங்கள் தயாராகுங்கள் பெருமாளே என்கிறார்.
எப்படித் தயாராக வேண்டும்?
“சிவன், பிரம்மா முதற்கொண்டு, முப்பது முக்கோடி தேவர்களும், முனிவர்களும் ரசிகர்களாக அமர, ஸ்தோத்திரத்தை கேட்கத் தயாராகுங்கள். அதோடு பிராட்டியின் பெருமையை நான் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல, அதில் பூரிக்கும் உங்கள் உடம்பு விரியும்போது, நீங்கள் தரித்திருக்கும் கவசம் வெடிக்க வேண்டும். மீண்டும் புதிய கவசத்தை அணிவிக்க வேண்டும். மீண்டும் அது உடைய வேண்டும். இப்படி பிராட்டியின் புகழைப் பாடப் பாட அதைக் கேட்டு நீங்கள் பூரிப்படையும் காட்சியைப் பார்த்து நாங்கள் பூரிப்படைய வேண்டும்” என்கிறார் பராசர பட்டர்.
புராணங்களிலிருந்தும் பிரபந்தங்களிலிருந்தும் பல இறைத் தொண்டர்களால் பாடப்பட்ட கவசங்களின் பெருமையை பக்தி மழையாய்ப் பொழிந்தார் வேளுக்குடி கிருஷ்ணன். இந்த மழையில் பக்தர்களின் மனம் நிச்சயம் குளிர்ந்திருக்கும்.