

உலகிலேயே தலையாயது உயிர். உயிருக்கும் காற்றைப் போல் உருவம் கிடையாது. எந்த உடல், ஐம்பொறிகளும் மனம்,சொல், செயல் என்பனவற்றில் ஒன்றிரண்டைப் பெற்று, காற்றைச் சுவாசித்து, ஆயுள் கொண்டுள்ளதோ அதுவே உயிர் எனப்படுகிறது. “பொறியோடு உட்கரணத்துயிர்பு ஆயுஇன் நெறியின்வாழும் பொருளது சீவனாம்”_ என மேருமந்திர புராணம் கூறுகிறது. உடலோடு சேர்ந்த உயிர், உயிரினமாகிறது. உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவுவரை அறிவியல் காலத்திற்கு முன்னரே சமணம் பிரித்தது.தொல்காப்பியரும் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர், சமணக் கொள்கையின் மையக் கருத்தாகும். உயிருக்கு உணரும் தன்மை உண்டு. உணரும் தன்மை இருவகைப்படும். பொதுவாக உணர்தல் (தரிசனம்), விளக்கமாக உணர்தல் (ஞானம்).
பொதுவாக உணர்தல் என்பது நான்கு வகைப்படும் 1.கண்ணால் பார்த்து உணர்தல் (சச்சு) 2.மெய், வாய், மூக்கு, செவி மூலம் உணர்தல் (அசச்சு) 3.ஐம்பொறிகள் மற்றும் மனம் உதவியின்றி உணர்தல் (அவதி). 4. முக்காலத்தும் மூவுலகு நிகழ்வுகளை உணர்தல் (கேவல்)
விளக்கமாகப் பொருட்களை அறிதல் எட்டு வகைப்படும்.அவை மதிஞானம், சுருதிஞானம், அவதிஞானம், மனப்பர்யாயஞானம், கேவலஞானம், குமதி, குஸ்ருதி, விபங்கஞானம். முதல் ஐந்தும் நல்லவை. மற்றவை தீயஞானம். இவ்வாறு உயிர்களிடம் 12 வகை உணரும்தன்மைகள் உள்ளன.
உயிர் ஒவ்வொரு பிறப்பிலும் எதுவாகப் பிறக்கிறதோ அந்த உடலளவு உயிர் பரந்திருக்கும். ஒரு தீபத்தைச் சிறிய அறையிலோ, பெரிய அறையிலோ வைத்தாலும் அந்தந்த அறை முழுவதும் ஒளி பரவியிருப்பதுபோல உயிர் அந்தந்த உடலுக்கேற்றவாறு முழுதும் பரவியிருக்கும்.
உயிர் செயலுக்குக் கர்த்தா
உயிரானது பொருள்கள் மீது விருப்புவெறுப்புக் கொள்வதால் வினைகள் உருவாகி உயிருடன் ஒட்டுகின்றன. உயிர் வினைக்குக் கர்த்தாவாகிறது. வினையின் பயன்களை அவ்வுயிரே அனுபவிக்கிறது. அவ்வுயிரே தன்னால் உண்டான வினைகளை வெல்லவும் முடியும். உயிர், வினைகளை ஆக்கிக் காத்து அழிக்க முடியும்.அதனால்தான், “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்கிறார் கணியன் பூங்குன்றனார். இளங்கோவடிகளும் “ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்” என இயம்புகிறார்.
உயிர் சம்சார உயிர், முக்தி உயிர் என இருவகைப்படும். சம்சார உயிர் வினைச் சூறாவளியில் சிக்குண்டு மூவுலகிலும் தேவ, மனித, விலங்கு, நரக கதிகளில் வந்துவந்து பிறந்துழலும். இதை “சந்ததமும் இப்படியே நாயேன் இந்த சாகரத்திலே மூழ்கித்தயங்கலாமோ எந்தையே, முக்குடைக்கீழ் ஆதிநாதா!”யென அப்பர் கேட்கிறார்.
இது மேல் நோக்கிச் செல்லும் இயல்புடையது. இது அனைத்து வினைத் தடைகளையும் தகர்த்து, பிறவி நீங்கி முக்தி பெற்ற உயிர். மறுபிறவி இல்லா உயிர்.பொறிவாயில் ஐந்து புலன்களையும் அவித்த உயிர். பிறவிப் பெருங்கடல் நீந்திய உயிர். சித்திசிலாதலம் எனும் உலகின் உச்சியில் எப்பொழுதும் தங்கியிருக்கும் உயிர். உலகம் தொழ இறைவனான உயிர்.
எனவே, உலக உயிர்கள் எல்லாம் தன்னல உயிர்களாகி முக்தி உயிராக முயன்றால் இவ்வுலகில் அமைதியும், சகோதரத்துவமும் வளமும் உண்டாகும்.