Last Updated : 25 Aug, 2016 12:05 PM

 

Published : 25 Aug 2016 12:05 PM
Last Updated : 25 Aug 2016 12:05 PM

வளங்கள் அருளும் தெள்ளிய சிங்கர்

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோயிலில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மர்,வரதர், கருடாழ்வார், திருமழிசை ஆழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் ஆகிய சன்னிதியில் உள்ள விக்கிரகங்கள் உட்பட கோபுர கலசங்களுக்கு அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்புற நிறைவேறியது. முன்னதாக அஷ்டபந்தனம், சொர்ண பந்தனம், ரஜத பந்தனம் ஆகியவை பொருத்தப்பட்டன. சாலை பூஜைகளையொட்டி நடைபெற்ற திருமஞ்சனம் உற்சவர்களுக்கு நடத்தப்பட்டது. உற்சவ மூர்த்தங்கள் அடுத்தடுத்து நின்ற திருக்கோலத்தில் இருக்க, ஒரே நேரத்தில் திருமஞ்சனம் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அஷ்டபந்தனம் எதற்காக?

ஒரு பீடத்தின் மீது வைக்கப்படும் சிலைகள் நகர்ந்துவிடாமல் இருக்க, ஒட்டுப் பொருளாகப் பயன்படுத்தப்படும் எட்டுப் பொருட்கள் சேர்ந்த கலவைக்கு மருந்து என்று பெயர். அவை, சுக்கான் கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி. இந்தக் கலவையே அஷ்ட பந்தனம் என்றழைக்கப்படுகிறது. இதனை சுவாமி திருச்சிலையின் திருப்பாதத்திற்கு கீழ் உள்ள சிறு பீடத்திற்கும், பெரும் பீடத்திற்கும் இடையே பூசி மெழுகுவார்கள்.

இரு பீடங்களையும் இணைக்கும் இம்மருந்து கரையாது; உதிராது; பெயர்ந்து வராது; இறுகப் பிடித்து இருக்கும். இம்மருந்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும். இதனையே அஷ்டபந்தன மகா சம்ப்ரோக் ஷணம் என்று வைணவத் திருத்தலங்களில் குறிப்பிடுவார்கள்.

சொர்ண பந்தனம் என்றால் என்ன?

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மருக்கு முதல் முறையாக அஷ்ட பந்தனத்துடன் சொர்ணபந்தனமும் பொருத்தப்பட்டுள்ளது. முதலில் அஷ்டபந்தனத்தை மெழுகாகப் பூசி, அதனுள் நவரத்தினங்கள், பொன் மற்றும் வெள்ளிக் காசுகள் ஆகியவற்றைக் காணிக்கையாக பக்தர்கள் தங்களால் இயன்றவற்றை பதிக்கிறார்கள். பின்னர் ஸ்ரீயோக நரசிம்மருக்கு அஷ்ட பந்தனத்தின் மீது தங்கத் தகடாய் சொர்ணபந்தனம் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது.

ரஜத பந்தனம்

பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் உள்ள நித்ய கருட வாகனச் சேவை அருளும் வரதராஜ பெருமாள் சன்னிதியில் அஷ்டபந்தனம் பூசப்பட்டு அதில் நவரத்தினங்கள், பொன் மற்றும் வெள்ளி காசுகள் போடப்பட்டு, அதனை வெள்ளித் தகடால் இணைத்தார்கள். இதனை ரஜத பந்தனம் அதாவது வெள்ளி பந்தனம் என்பார்கள். வெள்ளி பந்தனத்தில் ஜொலித்தார் வரதர். பின்னர் திருமழிசை ஆழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் ஆகியோருக்கு அஷ்டபந்தனம் செய்யப்பட்டது.

இந்த சன்னிதிகளுக்கு ஒரே நேரத்தில் சம்ப்ரோக் ஷணம் செய்யப்பட்டது. இதற்கு பக்தர்கள் தங்கள் இல்ல விழா போல, புத்தாடை அணிந்து, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குழுமியிருந்து நரசிம்மரை வணங்கினர். ஆவாஹன முத்திரையில் பக்தர்களை அழைத்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மர், துரிதகதியில் யோகம் அருளுவார் என்பது நம்பிக்கை.

படங்கள்: எல். சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x