

இறையுணர்வுடன் வாழ வேண்டும் என்பது இறை நம்பிக்கை உள்ளவர்களின் விருப்பம். இந்த வாழ்க்கையே இறைவன் தந்த வரம். இந்தப் பிரபஞ்சம், உலகம், அதன் உயிர்கள், வசதிகள், அதன் அழகான அம்சங்கள் என எல்லாமே இறைவன் தந்தது. அல்லது எல்லாமே ஆதியந்தமற்ற இறை சக்தியின் வெளிப்பாடுகள். இத்தகைய இறை சக்தியின் முன் பணிந்து வணங்குவதும் அந்த இறை உணர்வில் லயிப்பதும் பெரும் பேறு.
ஆனால் இந்த வாழ்க்கை இன்பமாக மட்டும் இல்லை. துன்பமும் கலந்தே இருக்கிறது. சுகம் மட்டுமல்ல, கஷ்டமும் சேர்ந்தே இருக்கிறது. கஷ்டப்பட்டு வேலை செய்தால்தான் பணம் கிடைக்கிறது. பணம் இருந்தால்தான் வாழ்க்கையை நடத்த முடியும்.
அப்புறம் இருக்கவே இருக்கிறது, உறவுகள், பந்த பாசம், குடும்பம், குழந்தைகள், கடமைகள்…
இல்லறத்தை சம்சார சாகரம் என்று சொல்லியிருக்கிறார்கள். அது ஒரு கடல். தொடர்ந்து நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். அதுவும் எதிர்நீச்சல். அலையில் மூழ்கிவிடாமல் நீந்த வேண்டும். மிகப் பெரிய போராட்டம் இது. இந்தப் போராட்டத்துக்கு இடையில் இறை உணர்வைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி? இறையுணர்வுக்கு நேரம் ஒதுக்குவது எப்படி?
அதற்காகத்தான் சிலர் எல்லாவற்றையும் துறந்துவிட்டுத் தனியே வசிக்கிறார்கள். இல்லறம் என்னும் கடலிலிருந்து கரை ஒதுங்கி அவர்கள் துறவறம் என்னும் தீவில் வசிக்கிறார்கள். இதன் மூலம் அலைகளின் குறுக்கீடு இன்றி இறையியல் என்னும் அமைதியான அனுபவத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.
ஆனால் எல்லோராலும் இப்படிக் கரை ஒதுங்கிவிட முடியுமா? அது சாத்தியமும் அல்ல, இயல்பானதும் அல்ல.
எல்லாரும் துறவியாவது அவசியமா?
பெரும்பாலான மனிதர்கள் ஆசாபாசங்களும், பந்தபாச உணர்வுகளும் கோபதாபங்களும் நிறைந்தவர்கள்தாம். எல்லோராலும் இவற்றைத் துறந்துவிட முடியாது.
ஒரு வாதத்துக்காக எல்லோரும் அப்படித் துறந்துவிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த உலகம் எப்படி இயங்கும்? உணவு முதலானவை மனிதர் களுக்கு எப்படிக் கிடைக்கும்? பொருள்கள் எப்படி உருவாகும்? வண்டிகள் எப்படி ஓடும்?
வாழ்க்கையின் அடிப்படையே இயக்கம்தான். அந்த இயக்கத்தின் அச்சே இல்லறவாசிகள்தாம்.
ஆனால், அந்த இல்லறவாசி களோ இல்லறக் கடலில் மூழ்கிவிடாமல் போராட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கும் இறையுணர்வு இருக்கும் அல்லவா? இறையுணர்வில் ஈடுபடவும் முக்தி பெறவும் அவர்களுக்கும் விருப்பம் இருக்கும் அல்லவா?
இல்லறப் போராட்டத்துக்கு நடுவில், ஆசாபாசங்களுக்கு நடுவில், பந்த பாசம், போட்டி பொறாமை, வெற்றி தோல்வி ஆகியவற்றுக்கு மத்தியில் இறைவனை நினைப்பது சாத்தியமா? இறை உணர்வில் ஒன்றுவது சாத்தியமா?
இதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் எளிமையான ஒரு வழியைச் சொல்கிறார். பலாப்பழத்தை உரிக்கும்போது கையில் பிசுபிசுப்பு ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காகக் கையில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு பிறகு உரிப்பார்கள் அல்லவா? அதுபோலவே ஈஸ்வர சிந்தனையை முதலில் மனதில் இருத்திக்கொண்டு பிறகு உலக காரியங்களில் ஈடுபடலாம் என்கிறார் பரமஹம்ஸர். அப்படிச் செய்தால் உலக பந்தங்கள், பாவ புண்னியங்கள், உணர்ச்சிகள் ஒட்டாது. உலக வாழ்க்கையில் ஈடுபட்டபடியே இறை உணர்வில் திளைக்கலாம் என்கிறார் ராமகிருஷ்ணர்.