Published : 13 Apr 2017 08:14 am

Updated : 16 Jun 2017 14:28 pm

 

Published : 13 Apr 2017 08:14 AM
Last Updated : 16 Jun 2017 02:28 PM

ஏவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம்

பொதுப் பலன்

மங்களரகமான ஏவிளம்பி வருடம் வசந்த ருதுவுடன், உத்தராயணப் புண்ணியகாலம் நிறைந்த வியாழன் நள்ளிரவு (விடிந்தால் வெள்ளிக்கிழமை 12மணி 43 நிமிடத்திற்கு 13/14.4.2017 கிருஷ்ண பட்சத்தில் திருதியை திதி, விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதம், துலாம் ராசியில், மகர லக்னத்திலும், நவாம்சத்தில் கும்ப லக்னம், மிதுன ராசியிலும், சித்தி நாமயோகம், பத்தரை நாம கரணத்திலும், புதன் ஓரையிலும், நேத்திரம் ஜீவன் நிறைந்த பஞ்ச பட்சிகளில் காகம் வலுவிழந்த காலத்திலும், குரு மகாதசையில், சுக்கிர புத்தி, சுக்கிரன் அந்தரத்திலும் வெற்றிகரமான ஏவிளம்பி வருடம் பிறக்கிறது.

ஏவிளம்பி வருட வெண்பா

ஏவிளம்பி மாரியற்பமெங்கும் விலைகுறைவாம்

பூவல்விளை வரிதாம் போர் மிகுதி சாவுதிகம்

ஆகுமமே வேந்தரணியாயமே புரிவார்

வேகுமே மேதினி தீ மேல்.

என்ற இடைக்காடர் சித்தர் மகானின் பாடலின்படி இந்த வருடத்தில் மழை குறையும், ஆனால் விலைவாசியும் குறையும், உணவு உற்பத்தியாகிய விளைச்சலும் குறையும், விபத்துகளாலும், போராலும் உயிரிழப்புகள் அதிகமாகும். நாடாளுபவர்கள் மனதிலே போர்க்குணம் அதிகமாகும். போர் மூளும், உலகெங்கும் தீ விபத்துகளும் அதிகமாகும் என்கிறார்.

ஐப்பசி மாதம் வரை சுக்கிரன், கிழக்கு திசையில் நிற்பதால் கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு போதிய மழை பொழியும். விளைச்சல் அதிகமாகும். சித்தர் பெருமானின் பாடலுடன் இந்த வருடப் பிறப்பின் நட்சத்திர கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்போது ஏவிளம்பி வருடத்தின் ராஜாவாக செவ்வாய் வருவதாலும் செவ்வாய் ஏவிளம்பி வருடப் பிறப்பின்போது சுக்கிரன் வீட்டில் அமர்ந்திருப்பதாலும் சந்திரனுக்கு எட்டாம் வீட்டில் மறைந்ததாலும். நாட்டை ஆளும் மந்திரிகள் நிம்மதி இழப்பர். கறுப்புப் பணம் புது விதமாக அதிகரிக்கும். ரியல் எஸ்டேட்டில் நடைபெறும் தில்லுமுல்லுகளைத் தீர்க்கப் புதுச் சட்டங்கள் அமலுக்கு வரும்.

ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளைக் காப்பாற்றப் புதுச் சட்டங்கள் நடைமுறைக்கு வரும். குதிரைகளை வினோத நோய் தாக்கும். மந்திரியாக சுக்கிரன் வருவதாலும், சுக்கிரன் உச்சம் பெற்று வலுவடைந்ததாலும், வீட்டாதிபதி குருவின் சமசப்தமப் பார்வையைப் பெற்றதாலும், தலைமைப் பொறுப்புக்கு அடுத்திருப்பவர்கள் வலுவடைவார்கள். யானைகள் அழியும், யானைகளைக் காப்பாற்ற அரசு அதிக அக்கறை காட்டும். தங்கம், வெள்ளி விலை குறைந்து ஏறும். ரத்தினக் கற்களான வைரம், வைடூரியம், மரகதப் பச்சை கற்களின் விலை உயரும். துணி உற்பத்தி அதிகரிக்கும். வாகனங்கள், ஜவுளி வியாபாரம் சூடு பிடிக்கும்.

9.3.2017 முதல் 26.5.2017 வரை உள்ள காலகட்டத்தில் சனி, செவ்வாய் சமசப்தமமாகப் பார்ப்பதால் தமிழக அரசியலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். 9.3.2018 முதல் ஏப்ரல் முடிய சனி, செவ்வாய் சேர்வதாலும் இரண்டு சந்திர கிரகணங்கள் இந்த ஆண்டு வருவதாலும் தமிழ்நாட்டில் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கட்சி வலுவிழக்கும். புதிய கூட்டணி அமையும். திடீர் தேர்தலையும் சந்திக்க நேரிடும்.

குபேரனின் திருதியை திதியில் இந்த வருடம் பிறப்பதால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிப்பதுடன், ஓரளவு நிம்மதியையும் தருவதாக இந்த வருடம் அமையும்.

மேஷ ராசி வாசகர்களே

அன்றாட வாழ்வில் ஏற்படும் நெளிவு, சுளிவுகளை அறிந்து அதற்கேற்ப வாழக் கற்றுக் கொண்டவர்களே! உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் மன இறுக்கம் குறையும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்னியம் அதிகரிக்கும். பொது விழாக்கள், கல்யாணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள இடத்திற்கு வீட்டை மாற்றுவீர்கள்.

18.12.2017 வரை அஷ்டமத்துச் சனி தொடர்வதால் முன்கோபம் வேண்டாம். மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். முன்யோசனை இல்லாமல் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். 19.12.2017 முதல் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தந்தையின் உடல் நிலை பாதிக்கும். வழக்கில் வெற்றி உண்டு. சொந்த பந்தங்களுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும்.

26.7.2017 வரை ராகு பகவான் 5-ம் வீட்டில் தொடர்வதால் கனவுத் தொல்லை, பிள்ளைகள் விஷயத்தில் அலைச்சல் வந்து செல்லும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். அசைவ, கார உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். ஆனால், கேதுவால் திடீர் யோகங்களும், பண வரவும் உண்டாகும். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். உங்களைச் சுற்றியிருப்ப வர்களின் சுயரூபத்தை உணர்ந்து தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். 27.7.2017 முதல் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வீடு வாங்கும்போது சொத்துக்குரிய தாய்ப் பத்திரத்தைக் கேட்டு வாங்குங்கள். 10-ல் கேது அமர்வதால் புதிய பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். வேலைச் சுமை இருக்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

1.9.2017 வரை குரு பகவான் 6-வது வீட்டில் தொடர்வதால் அதுவரைக்கும் பணப் பற்றாக்குறை நீடிக்கும். ஆனால் 2.9.2017 முதல் 13.2.2018 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டிலே அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கவிருப்பதனால் சோர்ந்து கிடந்த நீங்கள் உற்சாகமாவீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தள்ளிப்போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

பெண்களுக்கு: ஆகஸ்ட் மாதம் வரை குரு மறைந்திருப்பதால் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தப் பாருங்கள். 18.12.2017 வரை அஷ்டமத்துச் சனி நீடிப்பதால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய பயம் வரும். ஆனால் செப்டம்பர் மாதம் முதல் குரு ராசியைப் பார்க்க இருப்பதால் கணவர் உங்களைப் புரிந்து கொள்வார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடகிலிருந்த தங்க நகையை மீட்பீர்கள். நாத்தனாருக்கு இருந்த பிரச்சினையைத் தீர்த்துவைப்பீர்கள். மாமனார், மாமியார் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கொழுந்தனாருக்குத் திருமணம் நிச்சயமாகும்.

ராமலிங்க சுவாமிகள் அருளிய இப்பாடலை ஸ்ரீமுருகர் படத்திற்கு முன் அமர்ந்து தினந்தோறும் மூன்று முறை படித்து தியானம் செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

அருளார் அமுதே சரணம் சரணம்

அழகா அமலா சரணம் சரணம்

பொருளா எனைஆள் புனிதா சரணம்

பொன்னே மணியே சரணம் சரணம்

மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்

மயில்வா கனனே சரணம் சரணம்

கருணா லயனே சரணம் சரணம்

கந்தா சரணம் சரணம் சரணம்ரிஷப ராசி வாசகர்களே

ஐந்தில் உழைக்கும் வாழ்க்கை தான் ஐம்பதில் மகிழ்ச்சி தரும் என்பதை முழுமையாக நம்பி அதற்கேற்ப உழைப்பவர்களே! உங்களுடைய லாப வீட்டில் சுக்ரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். மனைவி வழியில் இருந்த பனிப்போர் நீங்கும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்னியம் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகள் குறையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவிற்குப் பணம் வரும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்குக் கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்வீர்கள்.

குலதெய்வக் கோவிலுக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை உடனே முடிப்பீர்கள். ஆனால் 2.9.2017 முதல் 13.2.2018 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைவதனால் வேலைச்சுமை மற்றும் செரிமானக் கோளாறு வந்து நீங்கும். பணக் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். ஆனால் 14.2.2018 முதல் 13.4.2018 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்கிர கதியிலும் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலும் சென்று அமர்வதால் எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள்.

அனுபவ அறிவைப் பயன்படுத்தி சில பிரச்சினைகளுக்கு யதார்த்தமான தீர்வு காண்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தள்ளிப்போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வேற்று மதத்தினர், மொழியினர் உதவுவார்கள். வழக்கால் பணம் வரும். இந்த வருடம் முழுக்கச் சனியின் போக்கு சரியில்லாததாலும், 19.12.2017 முதல் அஷ்டமத்துச் சனி தொடங்குவதாலும் கணவன், மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். ரத்தத்தில் ஹிமோகுளோபின் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

குடும்பத்தில் அமைதியில்லையே எனப் புலம்புவீர்கள். பண விஷயத் தில் கறாராக இருங்கள். நெருங்கியவர் களாக இருந்தாலும் குடும்ப விஷயங் களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். திடீர் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம்.

பெண்களுக்கு : ஆகஸ்ட் மாதம் வரை குரு சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற விஷயங்கள் சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். மாமனார், மாமியார் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். ஆனால் செப்டம்பர் முதல் குரு மறைவதாலும், கண்டகச் சனி, அஷ்டமத்துச் சனி அடுத்தடுத்து தொடர்வதாலும் தங்க நகை இரவல் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். கணவரை அனுசரித்துப் போங்கள்.

அபிராம பட்டர் அருளிய இப்பாடலை அருள்மிகு அம்பாள் படத்திற்கு முன் அமர்ந்து தினந்தோறும் ஐந்து முறை படித்து தியானம் செய்யுங்கள்; நினைத்தது நிறைவேறும்.

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா

மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களேமிதுன ராசி வாசகர்களே

வாக்குறுதி என்பது சத்தியத்திற்கும் மேலானது, என்பதை உணர்ந்தவர்களே! உங்கள் ராசிக்கு 5-ல் சந்திரன் நின்றுகொண்டிருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிள்ளைகள் உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள். அவர்களின் வருங்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு உடனே திருமணம் முடியும். எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லி ஏமாந்தீர்களே! இனி யாரிடத்தில் என்ன பேச வேண்டும் என்ற தெளிவு பிறக்கும். உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சுக்ரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மறதி, சோம்பல் விலகும். சுறுசுறுப்பாவீர்கள். புதிய காரியங்களெல்லாம் கைகூடும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.

18.12.2017 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-வது வீட்டிலேயே வலுவாக இருப்பதால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்குக் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.

19.12.2017 முதல் சனி 7-வது வீட்டில் அமர்வதால் கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. மனைவி வழி உறவினர்களுடன் கருத்துமோதல்கள் வரக்கூடும். மகனுக்கோ, மகளுக்கோ வாழ்க்கைத் துணை தேடுபவர்கள் நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் அதிகம் இடைவெளி தராமல் உடனே முடிப்பது நல்லது.

1.9.2017 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் தொடர்வதால் தாயாருக்குக் கை, கால் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். பண வரவு தாமதமாகும். உறவினர்கள், நண்பர்களுடன் பகை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதப்படுத்த வேண்டாம். புதியவர்களை நம்பி பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சித்தர்களைச் சந்தித்து அருளாசி பெறுவீர்கள். ஆனால் 2.9.2017 முதல் 13.02.2018 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலே குரு அமர்வதனால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள்.

நீண்ட காலமாகத் தடைப்பட்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். அவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்குக் குடிபுகுவீர்கள். சொத்து விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்களுக்கு அதிரடியான தீர்வு காண்பீர்கள். மூத்த சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

ஆனால் 14.2.2018 முதல் 13.04.2018 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலே வக்கிரத்திலும், அதிசாரத்திலும் சென்று மறைவதனால் பணப் பற்றாக்குறை ஏற்படும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர் களிடையே குடும்ப விஷயங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். 26.7.2017 வரை ராகு 3-ம் வீட்டில் நிற்பதால் தைரியம் கூடும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். திடீர் பணவரவு உண்டு. இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும்.

பெண்களுக்கு: 18.12.2017 வரை சனிபகவான் சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் உங்களை மதிப்பார்கள். உங்களுக்கு இருந்துவந்த தைராய்டு தொந்தரவு குறையும். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிட்டும். மாமியார், மாமனாரின் ஆதரவு கிடைக்கும். செப்டம்பர் மாதம் முதல் குரு 5-ல் அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். 19.12.2017 முதல் கண்டகச் சனியாக வருவதால் கணவர் உங்களின் தவறுகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய இப்பாடலைப் பெருமாள் படத்திற்கு முன் அமர்ந்து தினந்தோறும் ஐந்து முறை படித்து தியானம் செய்யுங்கள்; ஆசைகள் நிறைவேறும்.

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே.

கங்கையில் புனிதமாய காவேரி நடுவுபட்டு

பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்

எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டு

எங்ஙனம் மறந்து வாழ்வேன் ஏழையேன் ஏழையேனே

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ராசிபலன்பொதுப்பலன்கள்புத்தாண்டு பலன்கள்புத்தாண்டு ராசிபலன்தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்ஏவிளம்பி ராசிபலன்தி இந்து ராசிபலன்ஏவிளம்பி ஆண்டு பலன்கள்ஜோதிடர் வேங்கடசுப்பிரமணியன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author