

கொடுக்கும் குணம் கொண்ட நீங்கள் விளம்பரத்தை ஒருபோதும் விரும்ப மாட்டீர்கள். உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டில் குருபகவான் நின்றுகொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தள்ளிப்போன வேலைகள் நல்ல விதத்தில் முடிவடையும். குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள், பிரச்சினைகளெல்லாம் குறையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் பொறுப்பற்ற போக்கு மாறும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும்.
பண நெருக்கடி கொஞ்சம் கொஞ்சமாக குறையும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களெல்லாம் உங்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்களை தரக்கூடியதாக இருக்கும். செவ்வாயின் போக்கு கொஞ்சம் சரியில்லாததால் சகோதர உறவுகளிடையே மனத்தாங்கல் அதிகமாகும். இடைவெளி விட்டு பழகுவது நல்லது. சொத்துப் பிரச்சினையில் அவசர முடிவுகள் வேண்டாம். வழக்குகள் தாமதமாகும். செப்டம்பர் மாதத்திலிருந்து சொத்துப் பிரச்சினை சுமுகமாகும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் கடந்த ஆண்டைவிட பணவரவு திருப்திகரமாக இருக்கும். தவிர்க்க முடியாத செலவினங்கள் அதிகமாகும்.
நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் சிறப்பாக பேசப்படுவீர்கள். உங்களுடைய ராசிநாதன் சனிபகவான் ஜூலை 13-ம் தேதி வரை ராகுவுடன் நிற்பதால் தொடர்ந்து ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. நோய்த் தொற்று, ஒவ்வாமை, தோலில் நமைச்சல் வந்து நீங்கும்.
பங்குச் சந்தை மூலம் பணம் வரும். வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு கட்டத் தொடங்குவீர்கள். கேது ஜூலை 13-ம் தேதி வரை சாதகமாக இருப்பதால் பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். பழுதான எலக்ட்ரானிக் சாதனங்களை மாற்றுவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பீர்கள். யோகா, தியானத்தில் ஈடுபாடு வரும். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்து சிக்கிக்கொண்டீர்களே! கடன் பிரச்சினையிலிருந்து மீள்வீர்கள். வெளிநாடு அல்லது வெளி மாநிலத்தில் இருப்பவர் பங்குதாரராக அமைவார். கட்டுமானம், பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நிம்மதியற்ற போக்கு மாறும். அதிகாரிகளுடன் இருந்த விவாதங்கள் நீங்கும். கூடுதல் சலுகைகள் கிடைக்கும்.
வழிபாடு - ஐயப்பன்
மதிப்பெண் - ஜனவரி - ஜூன் - 70/100, ஜூலை - டிசம்பர் - 60/100