பைபிள் கதைகள் 40: கிபியோனியர்களின் புத்திசாலித்தனம்

பைபிள் கதைகள் 40: கிபியோனியர்களின் புத்திசாலித்தனம்
Updated on
2 min read

இஸ்ரவேலர்களுக்காக கடவுள் வாக்களித்த தேசம் கானான். அதனைக் கைப்பற்றி வாழ, கடவுள் அவர்களின் பக்கம் நின்றார். கானானில் இருந்த கோட்டை நகரங்களிலேயே வீழ்த்தமுடியாத ஒன்றாகப் பார்க்கப்பட்ட எரிக்கோவின் வானுயர்ந்த சுவர்களை பொலபொலவென்று உதிர்ந்துவிழச் செய்தார். இதைக்கண்டு மற்ற நகரங்களைச் சேர்ந்தவர்கள் நடுங்கினார்கள். ஆனால் இஸ்ரவேலர்களுக்கு, சிறிய நகரமான ஆயீ பட்டணத்தில் மரண அடி விழுந்தது. ஆயீ நகரத்தின் மிகச்சிறிய மக்கள் போர்ப்படை 36 இஸ்ரவேலர்களைக் கொன்று குவித்தது மட்டுமல்ல; இஸ்ரவேலர்களின் சிறப்புப் படையணியை நகரத்தின் எல்லைவரை துரத்தியடித்தது. இஸ்ரவேலர்களின் இந்த முதல் தோல்விக்கு ஆகான் காரணமாக இருந்தான் என்பதைக் கடவுள் அடையாளம் காட்டுகிறார்.

தன் சுயநலத்தால் எரிக்கோ நகரத்திலிருந்து விலக்கப்பட்ட பொருட்களை எடுத்து ரகசியமாக ஒளித்து வைத்தான். பாவங்களில் எல்லாம் கொடியது ரகசியப் பாவம். இதனால் ஆகானும் அவனது குடும்பத்தாரும் கல்லெறிந்துக் கொல்லப்பட்டார்கள். ஆகானுக்கு நேர்ந்த கதியைக் கண்டு ‘இனி ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாவிட்டால் இதே கதியே நமக்கும் நேரும்’ என்று மற்ற இஸ்ரவேலர்கள் அனைவரும் எச்சரிக்கையடைந்து சுயநலமற்ற கட்டுக்கோப்பான வாழ்வை வாழத்தொடங்கினார்கள்.

தப்புக் கணக்கும் தப்பாத கணக்கும்

இஸ்ரவேலர்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை கானானில் உள்ள மற்ற நகரங்களைச் சேர்ந்தவர்கள் அறியவில்லை. இஸ்ரவேலர்கள் தொடர்ந்து போர் செய்துவருவதால் அவர்கள் பலவீனமடைந்துவிட்டனர் என்று தப்புக்கணக்குப் போட்டார்கள். குறிப்பாக கானானின் மற்றொரு முக்கிய நகரமான எருசலேமும் அதனைச் சுற்றியிருந்த பல நகரங்களும் இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் போர் செய்து அவர்களை எளிதாகத் தோற்கடித்துவிடலாம் என்று எண்ணினார்கள்.

அதனால் இஸ்ரவேலர்களுடன் போர்புரிய தங்களைத் தயாரித்துக்கொண்டார்கள். ஆனால் எருசலேம் பக்கம் நின்ற கிபியோன் நகரத்தார் மட்டும் இஸ்ரவேலர்களை எதிர்ப்பது தவறான முடிவாக அமையும் என்று நினைத்தார்கள். இஸ்ரவேலர்களை தன் கரங்களில் வைத்துக் காப்பதுபோல் அவர்களுக்குக் கடவுள் உதவி செய்து வருவதை கிபியோனியர்கள் முழுமையாக நம்பினார்கள். எனவே இஸ்ரவேலர்களை எதிர்ப்பது கடவுளை எதிர்ப்பதற்கு இணையானது என்பதை அறிந்து மோதுவதைத் தவிர்த்து அவர்களோடு சமாதானம் பேச விரும்பினார்கள். அதற்காக புத்திசாலித்தனமாக ஒரு உபாயம் செய்தனர். கிபியோனியர்களின் அந்தக் கணக்குத் தப்பவில்லை.

நம்ப வைத்த நடிப்பு

இஸ்ரவேலர்களின் முகாமை நோக்கி கிபியோனியர்களிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட பல ஆண்கள் வந்தார்கள். முகாமை அடைந்ததும் வெகு தூரத்திலிருந்து பயணப்பட்டு வந்திருப்பதுபோல, இஸ்ரவேலரிடம் தங்களைக் காட்டிக்கொண்டார்கள். வேண்டுமென்றே அதற்காகக் கந்தலான ஆடைகளையும் தேய்ந்துபோன காலணிகளையும் அணிந்து வந்திருந்தார்கள். தவிர கந்தலான கோணிப் பைகளை தங்கள் கழுதைகளின்மேல் சுமையாகக் கொண்டுவந்திருந்ததோடு, காய்ந்த ரொட்டிகளைப் பசியுடன் தின்பதுபோல் பாசாங்கு காட்டினார்கள்.

அவர்களைக் கண்டு இரங்கிய இஸ்ரவேலர்கள் தங்கள் தலைவராகிய யோசுவாவிடம் அவர்களை அழைத்துச் சென்றனர். அப்போது கிபியோனிய ஆண்கள் கூட்டத்தின் தலைவன், “ ஐயா! நாங்கள், வெகு தொலைவில் உள்ள ஒரு தேசத்திலிருந்து வந்திருக்கிறோம். நீங்கள் வணங்கும் உலகின் ஏக இறைவன் யகோவாவைப் பற்றிக் கேள்விப்பட்டோம். அவர் எகிப்து தேசத்தில் உங்களுக்குச் செய்த எல்லாக் காரியங்களையும் பற்றி நாங்கள் அறிந்துகொண்டோம்.

அதனால் எங்கள் தலைவர்கள் உங்களைச் சந்தித்து: “ ‘நாங்கள் உங்களுடைய வேலைக்காரர்கள்; நீங்கள் எங்களோடு போர் செய்ய வேண்டாம்’ என்று வாக்குப் பெற்றுவரும்படி அனுப்பினார்கள்” என்றான். யோசுவாவும் மற்ற தலைவர்களும் கிபியோனியரின் நடிப்பை நம்பிவிடுகிறார்கள். அவர்கள் விரும்பியபடியே, அவர்களோடு போர் செய்ய மாட்டோம் என்று வாக்குக் கொடுத்தார்கள்.

குட்டு உடைந்துபோனது

ஆனால் அடுத்துவந்த மூன்று நாட்களில் கிபியோனியர் எரிக்கோவின் அருகாமையில் வசிப்பவர்கள்தான் என்பதை அறிந்து யோசுவா கோபம் கொள்கிறார். “எதற்காகத் தூர தேசத்திலிருந்து வந்ததாகப் பொய் உரைத்தீர்கள்?” என்று கடிந்துகொண்டார். நடுங்கிப்போன கிபியோனியர், “இந்தக் கானான் தேசம் முழுவதையும் கடவுள் உங்களுக்கு அளிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். அதனால் எங்களையும் நீங்கள் கொன்று விடுவீர்களோ என்று உயிருக்குப் பயந்தே அப்படிச் சொன்னோம்” என்றனர்.

இதைக்கேட்டுக்கொண்டிருந்த கடவுள் யோசுவாவின் இதயத்தில் கனிவை மலரச்செய்தார். “கவலைவேண்டாம். நாங்கள் கொடுத்த வாக்குப்படியே உங்களைக் கொல்லமாட்டோம். அதேபோல் நீங்கள் அளித்த வாக்கின்படி எங்களுக்குப் பணியாளர்களாக இருங்கள்” என்று யோசுவா இரக்கம் காட்டினார்.

எருசலேம் எழுச்சி

இஸ்ரவேலரோடு சமாதானம் செய்துகொண்டதால் கிபியோனியர் மீது கடுங்கோபம் கொண்டான் எருசலேமின் அரசன். “அந்தக் கோழைகளை முதலில் கொன்றொழிப்போம்” என்று சூளுரைத்தான். உடனடியாக அருகிலிருந்த நான்கு நகரங்களின் அரசர்களிடமும், “ கிபியோனியரோடு போர் செய்ய என்னோடு கரம் கோர்த்துக்கொள்ளுங்கள்” என்று அழைப்பு விடுத்தான். ஆகமொத்தம் ஐந்து நகரங்களின் அரசர்களும் கிபியோன் நகரம் நோக்கி தங்கள் படைகளுடன் முன்னேறி வந்தார்கள். தங்களுக்கு எதிராக ஐந்து நகரங்கள் திரண்டதால், “சமாதானம் செய்து கொண்டதற்குப் பரிசு சாவுதானா?” என்று கேட்டு கிபியோன் மக்கள் புலம்பி அழுதனர்.

(பைபிள் கதைகள் தொடரும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in