Last Updated : 03 Oct, 2013 05:43 PM

 

Published : 03 Oct 2013 05:43 PM
Last Updated : 03 Oct 2013 05:43 PM

சனாதன தர்மம் என்று சொல்லப்படுகின்ற இந்து மதம் எந்தவகையில் சிறந்தது?

இது தான் முடிவு என்று சனாதன தர்மம் சொல்லவில்லை. இவர்தான் கடவுள் என்று சனாதன தர்மம் நிறுத்திக்கொள்ளவில்லை. இங்கே வந்து வணங்கு என்று உங்கள் பிரார்த்தனையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவில்லை. இந்த மந்திரம் சொன்னால் போதும் எல்லாமும் சரியாகும் என்ற வாக்குறுதியைத் தரவில்லை. அதனால்தான் இந்து மதத்தில் இத்தனை கோவில்கள். இத்தனை ஸ்வாமிகள். இத்தனை விக்ரகங்கள். இத்தனை வழிமுறைகள். இந்த மந்திரம் போதுமா? இல்லை. இதற்கு அப்பாலும் இருக்கிறது. அதை நான் கண்டுபிடித்திருக்கிறேன். இந்த தெய்வம் போதுமா? இல்லை. இது இப்படி இருக்கிறது. இப்படி இருந்தால் முடியாது. அப்படி இருந்தால் நடக்கும். அந்த சக்தியே பெரியது.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று பல்வேறு விதமான சக்திகளை உணர்ந்து உள்ளுக்குள்ளே அனுபவித்து அந்த சக்தியைக் கடவுளாகச் சொல்ல, அதைவிட இது, இதை விட அது என்று படிப்படியாக வளர்ந்துகொண்டிருக்கிறது. இடையறாத தேடலாக இருக்கிறது. இருட்டில், பெரும் கானகத்தில் எங்கே, எங்கே வாழ்க்கை, எங்கே கடவுள் என்று அலைந்து கொண்டிருக்கிறது. அது சொன்னதைத் திருப்பிக் கொண்டு சொல்லவில்லை. சொல்லுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று பார்க்கிறது.

சனாதன தர்மம் கடவுள் என்ற விஷயத்தை முடித்துவிடவில்லை. அதுபற்றி எப்படியும் சொல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு, விளக்க முடியவில்லையே என்ற வருத்தம் வளர்ந்துகொண்டிருக்கிறது. மற்ற மதங்களை விட சனாதன தர்மம் என்கிற இந்து மதம் எதனாலும் அழியாததற்கு இந்தத் தேடல் காரணம்.

எத்தனை பேர் முஸ்லிம்களாக மாறினாலும், எத்தனை பேர் கிறிஸ்துவர்களாக மாறினாலும், யாரெல்லாம் புத்த மதத்தைத் தழுவினாலும் இந்து மதத்தின் வலிமை குறையவே இல்லை. ஏனெனில் வலிமை என்பது எண்ணிக்கையில் இல்லை. கொள்கையில் இருக்கிறது. கொள்கை என்பது இந்து மதத் கடவுள் தேடலில் இருக்கிறது. கடவுள் தேடல் முற்றுப் பெறுதலே அல்ல. அது விதம்விதமாக வெளியே வந்துகொண்டிருக்கும். முற்றுப்பெற்றவை எண்ணிக்கையைத்தான் வளர்த்துக்கொண்டிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x