

பொறுத்தார், பூமியாள்வார் என்பதை அறிந்தவர்களே! உங்கள் ராசியை உங்கள் ராசிநாதனான குரு பார்க்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வருமானம் உயரும். வாடகை வீட்டில் இருக்கும் சிலர் சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். வாகனமும் புதிதாக வாங்குவீர்கள். வழக்குகளிலிருந்து விடுதலையடைவீர்கள். குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் இருவருக்குமிடையே குழப்பங்கள் ஏற்படுத்தியவர்களை விலக்குவீர்கள்.
உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் சுக்கிரன் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் மனைவியின் ஆதரவும் ஆறுதலான வார்த்தையும் உங்களை மேலும் பலப்படுத்தும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பழைய மனக்கசப்புகளெல்லாம் நீங்கும். இழுபறியாக இருந்த பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். நீங்கள் எதிர்பார்த்த பாகம் உங்களுக்கு கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள்.
வருடத்தின் முற்பகுதியில் பிள்ளைகளால் உங்களுடைய அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். ஜூன் 18-ம் தேதி முதல் குரு 8-ல் சென்று மறைவதால் செலவுகள் அதிகமாகிக்கொண்டே போகும். திடீர் பயணங்களால் அலைச்சலும் அதிகரிக்கும். ஆனால் குரு உச்சமாவதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிட்டும். எதிர்பார்த்திருந்த அயல்நாட்டுப் பயணம் அமையும். சிலர் வெளிநாட்டு குடியுரிமை பெறுவீர்கள். வேற்றுமதத்தவர்கள், அண்டை மாநிலத்தவர்களால் பயனடைவீர்கள்.
வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். பங்குதாரர்களால் இருந்த பிரச்சினைகள் தீரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேற்கொண்டு படித்து உங்களுடைய அறிவுக் கூர்மையை வளர்த்துக்கொள்வீர்கள். அதிகாரிகளுடன் இருந்த நிழல் யுத்தம் நீங்கும். சக ஊழியர்களும் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள்.
வழிபாடு - லட்சுமி நரசிம்மர்
மதிப்பெண் - ஜனவரி - அக்டோபர் - 75/100, நவம்பர் - டிசம்பர் - 55/100