

தன் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் சுவாமி விவேகானந்தர் கேத்ரி அரசருக்குப் பேலூர் மடத்திலிருந்து 22 நவம்பர் 1898 அன்று ஒரு கடிதம் எழுதினார்.
“மிக முக்கியமான எனது சொந்தப் பிரச்சினை ஒன்றைக் குறித்து நான் இந்தக் கடிதத்தில் எழுதுகிறேன். என் மனத்தில் உள்ளதை உங்களிடம் திறந்து சொல்ல எனக்கு எந்த வெட்கமும் இல்லை. இந்த வாழ்க்கையில் உங்களை மட்டுமே நான் என்னுடைய நண்பராகக் கருதுகிறேன்.
என் மனத்தை அரித்துக்கொண்டிருக்கிற மகா பாவம் ஒன்று உள்ளது. உலகத்துக்குச் சேவை செய்வதற்காக நான் என் தாயைப் புறக்கணித்ததே அது. எனவே இனிச் சில வருடங்களாவது என் தாய்க்குச் சேவை செய்ய வேண்டும் என்பது என் கடைசி விருப்பமாக உள்ளது. நான் என் தாயுடன் வாழ விரும்புகிறேன்.
இது எனது இறுதி நாட்களையும் என் தாயின் இறுதி நாட்களையும் மனத்துக்கு இதமானதாக ஆக்கும். அவர் இப்போது ஒரு சிறு குடிசையில் வசிக்கிறார். அவருக்கு அடிப்படை வசதிகள் கொண்ட ஒரு சிறிய வீடாவது கட்டுவதற்கு விரும்புகிறேன்.
ஸ்ரீ ராமனின் ராஜ பரம்பரையில் வந்த ஒருவர் தாம் நேசிக்கின்ற, தாம் நண்பன் என்று அழைக்கின்ற ஒருவருக்கு ஏதாவது செய்வது பெரிய காரியமா?
வேறு யாரிடம் கேட்பது என்று எனக்குத் தெரிய வில்லை. ஐரோப்பாவிலிருந்து கிடைத்த பணம், ‘பணி’க்காகத் தரப்பட்டது. ஏறக்குறைய அதன் ஒவ்வொரு பைசாவும் கொடுக்கப்பட்டுவிட்டது. எனக்காக வேறு யாரிடமும் கேட்கவும் என்னால் இயலாது.
எனது குடும்ப விஷயங்களை உங்களிடம் மனம் திறந்து கூறிவிட்டேன். இது வேறு யாருக்கும் தெரியக் கூடாது. நான் களைத்துவிட்டேன். இதயம் துவண்டுவிட்டது. உயிர் ஓய்ந்துகொண்டிருக்கிறது.
நீங்கள் எனக்கு எவ்வளவோ தாராளமாகச் செய்திருக்கிறீர்கள். இந்த ஒன்றையும்கூடச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
(சுவாமி ததாகதானந்தர் எழுதிய ‘விவேகானந்தரும் அவரது அன்னையும்’ என்ற புத்தகத்திலிருந்து)
தகவல் உதவி: பி. மனோன்மணி, ராமநாதபுரம்.