Last Updated : 13 Mar, 2014 11:56 AM

 

Published : 13 Mar 2014 11:56 AM
Last Updated : 13 Mar 2014 11:56 AM

நம்மாழ்வார்: வேதம் தமிழ் செய்த மாறன்

வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வார். நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் வேதம் தமிழ் செய்த மாறன் என்று புகழப்படுகிறார். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர்.

நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில் காரியார் மற்றும் உடைய நங்கைக்கு மகனாகப் பிறந்தார். உலக வழக்கப்படி குழந்தை பிறந்தவுடன் அழும். பின்னர் பால் குடிக்கும். ஆனால் இவரோ இவை எவற்றையும் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தார். எனவே அவரை மாறன் என்று அழைத்தனர்.

ஒவ்வொரு உயிரினமும் இந்நிலவுகில் பிறக்கும்பொழுது, அதன் உச்சந் தலையில் முதன் முதலாக இந்நிலவுலகக் காற்று படும். இக்காற்று பட்டவுடன், அக்குழந்தைக்கு முன் ஜென்ம நினைவுகள் மறக்கும். மீண்டும் இந்நிலவுலக மாயையில் சிக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். மாயையை உருவாக்கும் சடம் என்னும் இக்காற்று உச்சந்தலையில் படுவதாலேயே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்று சொல்லப்படுகிறது.

ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வார், சடம் என்னும் இக்காற்றை கோப மாக முறைத்ததால் சடகோபன் என்று அழைக்கப்படுகிறார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமை யால் பராங்குசன் என்று அழைக்கப் பட்டார். தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடியதால் பராங்குசநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்.

பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளிய மரத்தின் அடியில் இருந்த பொந்தில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். இவரது தவ ஓளி பல நூறு மைல் தூரம் வீசியது. இவ்வொளியை மதுர கவி ஆழ்வார் கண்டார். அவர் அப்போது வடதிசை யாத்திரை மேற்கொண்டு அயோத்தியில் இருந்தார். தெற்கு திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடையத் தென்திசை நோக்கிப் பயணித்தார்.

திருக்குருகூர் நம்பி கோவிலில் இருந்த மாறனிடமி ருந்தே அவ்வொளி வருவதைக் கண்டு உணர்ந்தார். அவரைச் சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். பின்னாளில் சடகோபனின் ஞானத்தாலும், பக்தியாலும் கவரப்பெற்ற மதுர கவி ஆழ்வார் அவருக்கே அடிமை செய்தார் என்கிறது வைணவ வரலாறு.

நம்ம ஆழ்வார் என்பதால் அவர் நம்மாழ்வார் என அழைக்கப்பட்டார். திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகிய நான்கு நூல்களை இயற்றினார். இந்த நான்கு பிரபந்தங்களில் மொத்தம் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இயற்றியுள்ளார். இவை ரிக், யஜுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்துள்ளன எனப் பெரியோர்கள் கூறுவார்கள்.

நம்மாழ்வார் பல பெயர்கள் கொண்டவர். அவை சடகோபன், மாறன், காரிமாறன், பராங்குசன், வகுளாபரணன், குருகைப்பிரான். குருகூர் நம்பி, திருவாய்மொழி பெருமாள், பெருநல்துறைவன், குமரித் துறைவன், பவரோக பண்டிதன், முனி வேந்து, பரப்ரம்ம யோகி, நாவலன் பெருமாள், ஞான தேசிகன், ஞான பிரான், தொண்டர் பிரான், நாவீரர், திருநாவீறு உடைய பிரான், உதய பாஸ்கரர், வகுள பூஷண பாஸ்கரர், ஞானத் தமிழுக்கு அரசு, ஞானத் தமிழ் கடல், மெய் ஞானக் கவி, தெய்வ ஞானக் கவி, தெய்வ ஞான செம்மல், நாவலர் பெருமாள், பாவலர் தம்பிரான், வினவாது உணர்ந்த விரகர், குழந்தை முனி, ஸ்ரீவைணவக் குலபதி, பிரபன்ன ஜன கூடஸ்தர், மணிவல்லி, பெரியன்.

சடகோபன் என்னும் நம்மாழ்வார்தான் கம்பர் இயற்றிய சடகோபர் அந்தாதி எனும் நூலின் நாயகன். பெருமாளின் பாதங்கள் பொறிக்கப்பட்ட சடாரியை வைணவக் திருக்கோவில்களில் பக்தர்களின் தலையில் வைத்து எடுப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. நம்மாழ்வார் என்னும் சடகோபனின் அம்சமே சடாரி என்று அழைக்கப்படுகிறது என்பர் பெரியோர். சடம் + ஹரி ( பாதம் ) சடாரி என்று அழைக்கப்படுவது சாலப் பொருத்தமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x