Last Updated : 27 Feb, 2014 12:00 AM

 

Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM

ஈஸ்வரனின் ஐந்து செயல்கள்

ஞானிக்கு ஆத்ம ஸ்வரூபத்தைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லை. ஒரே பரமாத்மா தான் இத்தனையாகவும் தெரிகிறது என்று கண்டு கொண்டவன் அவன். வெளியிலே தெரிகிற தோற்றத்தை மாயை என்று தள்ளிவிட்டு, எல்லாவற்றுக்கும் உள்ளேயிருக்கிற பரமாத்ம ஸ்வரூபத்தை மட்டுமே அநுபவிக்கிறவன் அவன். வெளிப் பார்வைக்குத் தெரிகிற உலகம் மாயை என்று ஆகிவிட்டதால், இந்த மாயா லோகத்தில் ஞானிக்குத் காரியம் எதுவுமே இல்லை. பார்க்கிறவன், பார்க்கப்படுகிற வஸ்து, பார்வை எல்லாம் ஒன்றாக அடங்கிப் போனவனுக்குக் காரியம் எப்படி இருக்க முடியும்? அவன் பிரம்மமாகவே இருக்கிறான் என்று உபநிஷத்து சொல்கிறது.

பிரம்மத்துக்குக் காரியம் இல்லை. ஆனால், இந்த மாய உலகத்தில் அகப்பட்டுக் கொண்டு காரியங்களைச் செய்து வருகிறவர்கள் ஈசுவரன் என்று ஒருவனைப் பூஜை செய்து தங்கள் காரியங்களை நடத்தித் தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். நல்ல காரியங்களுக்காக நல்ல மனஸோடு பிரார்த்தித்தால் ஈஸ்வரனும் அவற்றை நடத்தித் தருகிறார். இதிலிருந்து ஈஸ்வரன் காரியமே இல்லாமல் இருப்பவரல்ல என்று தெரிகிறது. நாம் பிரார்த்தித்தாலும் பிரார்த்திக்காவிட்டாலும் சகல பிரபஞ்சங்களையும் இத்தனை ஒழுங்கான கதியில் நடத்திக்கொண்டு, சகல ஜீவராசிகளுக்கும் சோறு போடுகிற பெரிய காரியத்தைச் செய்கிறார்.

காரியம் இல்லத பிரம்மம் வேறு. காரியம் செய்கிற ஈஸ்வரன் வேறு என்பதா? இல்லை. ஞானியின் பிரம்மமே தான் லோக காரியங்களை நிர்வாகிக்கிற ஈஸ்வரனாகவும் இருக்கிறது.

சிவனின் தக்ஷிணாமூர்த்திக் கோலம் பிரம்ம நிலையைக் காட்டுகிறது. அங்கே காரியமே இல்லை. ஒரே மௌனம்தான். அதே பரமசிவன் எத்தனை காரியங்களை செய்திருக்கிறார்? சிதம்பரத்தில் ஒரேடியாகக் கூத்தடிக்கிறார். தாருகாவனத்தில் பிக்ஷாடனனாக அலைந்து மோகிக்கச் செய்திருக்கிறார். தக்ஷ யக்ஞத்தில் சூரியனைப் பளீரென்று அடித்துப் பல்லை உதிர்த்திருக்கிறார்.

ஸ்வாமி எப்போதும் உள்ளே அடக்கி பிரம்மமாக இருக்கிறார். வெளியிலே சகல ககாரியமும் செய்யும் ஈஸ்வரனாக இருக்கிறார். சாதாரண ஜனங்கள் ஏரியில், சம்ஸார அலைகளில் நீந்திக் கொண்டிருக்கிறார்கள். ஞானிகள் மறுபக்கம் வயலிலே நிற்கிறார்கள். நடுவில் ஏரிக்கரை. அது குறுக்கிடுவதால் ஞானிக்கு ஏரி தெரியாது. ஸ்வாமியோ இரண்டுக்கும் மத்தியில் இருக்கிற கரைமேல் இருக்கிறார். ஏரித் தடத்தில் நிற்கிற தடஸ்தன் அவர். அவருக்கு லோகமும் தெரியும். லோக சிருஷ்டி நசித்துப்போன ஞானியின் நிலையும் தெரியும். ஏரியில் முழுகுகிறவனைத் தூக்கிப் போடு என்று வயலில் இருக்கிறவனைக் கூப்பிட்டு அவர் சொல்ல முடியும்.

எல்லாம் தாமே என்பதை ஸ்வாமி அறிந்திருக்கிறார். ஆனாலும் அவரை வேறாக நினைத்திருக்கிற ஜீவர்களை அவரும் வேறுபோலப் பார்த்து வேடிக்கையும் செய்வார். இதைப் பற்றி  நீலகண்ட தீக்ஷிதரின் சிலலீலார்ணவத்தில் ஓர் அழகான சுலோகம் உண்டு. அதன் தாத்பரியத்தைச் சொல்கிறேன். பரமேஸ்வரனின் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்த கதை எல்லோருக்கும் தெரியும். அவர் உடைப்பு அடைத்து ஒழுங்காக வேலை செய்யாததைக் கண்டு பாண்டிய ராஜா அவரைப் பிரம்பால் அடித்தான். உடனே அந்த பிரம்படி பாண்டியன் உட்பட சகல ஜீவராசிகள் மீதும் விழுந்தது. இங்கே தாமே எல்லாமும் என்பதை அவர் காட்டிவிட்டார்.

இதைப் பார்த்துக் கவி கேட்கிறார். அது சரி, உன்னைத் தவிர வேறில்லை என்ற சிவாத் வைதம் பிரம்படி படுவதற்கு மட்டும்தானா? மதுரமான பிட்டை வாங்கி வாங்கித் தின்றாயே, அப்போது மட்டும் ஏன் எல்லா ஜீவராசிகளுக்கும் அதை உண்ட ஆனந்தம் இல்லை? அடிபடும்போது ஒன்று, ஆனந்தத்தின்போது வேறு வேறா?

ஸ்வாமி உள்ளே அடங்கிய பிரம்மமாகவும், வெளியே காரியம் செய்கிற ஈசுவரனாகவும் இருப்பதை இந்த ரஸமான கேள்வி மூலம் தெரிந்துகொள்கிறோம். அவர் செய்கிற காரியங்களை ஐந்தாகச் சொல்வார்கள். பஞ்ச கிருத்யம் என்பார்கள். சிருஷ்டி, ஸித்தி, ஸம்ஸாரம் என்ற மூன்று உங்களுக்கே தெரியும். இந்த மூன்றும் மாயாலோக விஷயம்தான். இப்படி மாயையால் மறைக்கிற காரியம் திரோதானம் எனப்படும். இந்த மாயையிலிருந்து விடுவிப்பதே அவன் செய்கிற மகா பெரிய காரியம். அநுக்கிரகம் என்று அதற்கே பேர். அத்வைத ஸித்தி நமக்கு ஏற்பட வேண்டும் என்றால், அதற்கு இந்த அநுக்கிரகமின்றி வேறு வழியில்லை. இந்த அநுக்கிரத்தை வேண்டி வேண்டிச் செய்கிற உபாஸனைக்கே, நம்மை அநுக்கிரகிக்கக்கூடிய கருணை படைத்தவர் அவர் என்று நம்பி அவரிடம் நெஞ்சுருகி அன்பு செலுத்துவதற்கே பக்தி என்று பெயர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x