Published : 12 Jun 2014 01:15 PM
Last Updated : 12 Jun 2014 01:15 PM

குரு பெயர்ச்சி பொதுப் பலன் 19-6-2014 முதல் 14-7-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

நிகழும் ஜய வருடம் ஆனி மாதம் 5-ம் தேதி வியாழக்கிழமை (19.6.2014) கிருஷ்ணபட்சத்து, சப்தமி திதி, கீழ்நோக்குள்ள பூரட்டாதி நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த சித்தயோகத்தில் பஞ்ச பட்சியில் மயில் துயில்கொள்ளும் நேரத்தில் உத்ராயணப் புண்ணிய காலம் கிரீஷ்ம ருதுவில் பிரகஸ்பதி எனும் குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடகம் ராசிக்கு காலை மணி 9.01க்கு பெயர்ச்சி ஆகிறார்.

19.6.2014 முதல் 14.07.2015 வரை இங்கமர்ந்து தன் அதிகாரத்தைச் செலுத்துவார். பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன் உச்ச வீட்டில் குரு அமர்கிறார். முழு சுப கிரகமான குரு பகவான் வலிமையாக அமர்வதால் இந்தியாவின் அடிப்படை கட்டமைப்புகள் நவீனமாகும். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பல வசதி, வாய்ப்புகள் கிராமம் முதல் நகரம் வரை உள்ள அனைத்து மக்களுக்கும் கிட்டும்.

வருமான வரி சம்பந்தமாக புது சலுகைகள் கிடைக்கும். ரூபாய் நோட்டின் பயன்பாடு குறையும். நாடெங்கும் மின் உற்பத்தி பெருகும். நதிகளை இணைக்க பேச்சு வார்த்தை தொடங்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். வேலை வாய்ப்பு பெருகும். விலைவாசி குறையும். 4.9.2014 முதல் ஏறக்குறைய ஒன்பது மாதங்களுக்கு ஆயில்யம் நட்சத்திரத்திலேயே குரு செல்ல இருப்பதால் உணவு கலப்படத்தை தடுக்க கடுமையான சட்டம் வரும்.

கல்வித் துறை நவீனமாகும். தங்கம், வெள்ளி விலை கட்டுப்பாட்டிற்குள் வரும். அண்டை நாடுகளின் அத்துமீறல்கள் ஒடுக்கப்படும். இனி பனிரெண்டு ராசிக்காரர்களை என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.மேஷம்

உலக நடப்பை உன்னிப்பாக கவனிப்பவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களை எதிலும் ஆர்வமில்லாமல் அலைக்கழித்த குரு பகவான் 19.6.2014 முதல் 14.07.2015 வரை உங்கள் ராசிக்கு சுக வீடான 4-ம் வீட்டில் அமர்கிறார். கடந்த ஓராண்டு காலமாக இருந்த 3-ம் வீட்டை விட 4-ம் வீடு ஓரளவு நன்மையைத் தரும். உங்களின் பாக்யாதிபதியான குரு பகவான் உச்சம் பெற்று அமர்வதால் இதுவரை இருந்து வந்த தடைகள், பணப்பற்றாக்குறை, தாழ்வு மனப்பான்மை எல்லாம் நீங்கும்.

சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். வீடு மாறுவீர்கள். சிலர் பூர்வீகத்தை விட்டு விலகி வேறு ஊருக்கு மாற வேண்டிய சூழல் உருவாகும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். கருத்து மோதல்களும் வரும். வாகனங்கள் அடிக்கடி பழுதாகும். விபத்துகளும் வந்து போகும். பல வருடங்கள் நெருங்கிப் பழகியவர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். ப்ளான் அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். முறையான பட்டா இல்லாத இடத்தை வாங்க வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும்.

சின்ன சின்ன விஷயங்களைக்கூடப் போராடி முடிக்க வேண்டி வரும். தந்தையாரை பகைத்துக்கொள்ளாதீர்கள். தாரா பலன்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது அசுவினி நட்சத்திரக்காரர்களுக்குப் பணப் புழக்கம் அதிகரிக்கும். வேலை கிடைக்கும். பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அவர்களின் விருப்பத்தை மீறி எதையும் திணிக்க வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய கல்விப் பிரிவில் சேர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லி தர்மசங்கடத்தில் சிக்காதீர்கள்.

வேலைச்சுமை அதிகமாகிக்கொண்டே போகும். நேரம் தவறி சாப்பிடுவதால் அசிடிட்டி, அஜீரணக் கோளாறு வந்து நீங்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். குரு எட்டு மற்றும் பனிரெண்டாம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய தொகை முதலீடு செய்ய வேண்டாம். ஸ்டேஷனரி, மருந்து வகைகளால் லாபம் வரும். குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரிகள் உதவுவார்கள்.

இந்த குரு மாற்றம் அலைச்சலையும், பணப் பற்றாக்குறையையும் தந்தாலும் விடாமுயற்சியாலும் வி.ஐ.பி.களின் நட்பாலும் முன்னேற வைக்கும்.

ரிஷபம்

எதிலும் மாற்றத்தை விரும்புபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக பணம், பதவி, செல்வாக்குடன் மகிழ்ச்சியையும் தந்த குரு பகவான் 19.6.2014 முதல் 14.07.2015 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்கிறார். 3-ல் குரு முடக்குவாரே என்றெல்லாம் அஞ்ச வேண்டாம். உங்கள் ராசிநாதனான சுக்ரனுக்கு எதிர் கதிர்வீச்சுடைய குரு 3-ல் மறைவதால் உங்கள் முன்னேற்றம் தொடரும்.

குரு மறைவதால் பயணங்கள் அதிகரிக்கும். நியாயமான செலவுகளும் கூடும். உறவினர், நண்பர்கள் வீட்டுத் திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்த வேண்டி வரும். வேலைச்சுமை கூடும். உங்கள் யோகாதிபதிகளான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்திலும், புதனின் ஆயில்யம் நட்சத்திரத்திலும் குரு பயணிப்பதால் குழந்தை பாக்யம் உண்டு. வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சலுகைகள், வீடு கட்ட அனுமதி எல்லாம் உடன் வந்து சேரும்.

போலி நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். உறவினர்களின் உள்மனதையும் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்புகள் வரும். முயற்சி ஸ்தானமான 3-ம் வீட்டில் குரு அமர்வதால் எந்த வேலையையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. பண விஷயத்தில் கறாராக இருங்கள். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வீடு, மனை விற்பது, வாங்குவதில் கவனம் தேவை. குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். தாம்பத்யம் இனிக்கும். குரு 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும். குடும்ப வருமானம் உயரும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும்.

மூத்த சகோதரர் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார். உயர் கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். காலில் நகக்கண்ணில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. மூச்சுப் பிடிப்பு வரக்கூடும். எனவே எடை மிகுந்த பொருட்களைத் தூக்க முயற்சிக்க வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான வகையில் வரும் உதவிகளை ஏற்றுக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. பெரிய முதலீடுகள் வேண்டாம். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் கருத்து மோதல் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் தொடர் விடுப்பாலும், புது அதிகாரியின் கெடுபிடியாலும் வேலைச்சுமை அதிகரிக்கும்-. சம்பள உயர்வு உண்டு.

இந்த குருமாற்றம் பயணங்களையும், செலவினங்களையும் அதிகரிக்க வைத்தாலும் வெற்றியையும் தருவதாக அமையும்.

மிதுனம்

அழுத்தமான கொள்கை, கோட்பாடு உள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்குள் நுழைந்து உங்களை நாலாவிதத்திலும் அலைக்கழித்த குரு பகவான் 19.6.2014 முதல் 14.07.2015 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்கிறார். ராசியை விட்டு குரு விலகுவதால் வாடி வதங்கியிருந்த உங்கள் முகம் இனி மலரும். சாதாரண விஷயத்தில்கூடச் சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி தன்னிச்சையாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பல்வேறு காரணங்களால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

‘வேலைக் கிடைத்தும் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! இனி உங்கள் ரசனைக்கேற்ற வேலை அமையும். மகளுக்கு உறவினர்கள் மெச்சும்படி திருமணத்தை முடிப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். விலகிச் சென்ற உறவினர்களும், நண்பர்களும் வலிய வந்து பேசுவார்கள். தாழ்வு மனப்பான்மையும், தடைகளும் நீங்கும். எதிர்பார்த்த தொகை வரும். ஷேர் மூலம் பணம் வரும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கோபம் குறையும். சாதுர்யமாகப் பேசும் வித்தையைக் கற்றுக்கொள்வீர்கள். முதலீடு செய்து சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அடகிலிருந்த நகை மற்றும் வீட்டு பத்திரங்களை மீட்பீர்கள். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள்.

ஊர் பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாடு செல்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். சகோதரங்களுக்குள் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். பாகப் பிரிவினை நல்ல முறையில் முடிந்து பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனையையும் அறிந்து அதற்கேற்ப தொழிலை மாற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கடையை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் பணியில் சேருவார்கள். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்யோகத்தில் மறுக்கப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி உண்டு. தொல்லை கொடுத்த அதிகாரி மாறுவார்.

இந்த குரு மாற்றம் சமூகத்தில் ஒரு அந்தஸ்தையும், பணவரவை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.

கடகம்

மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சிந்தனை உடையவர்களே! கடந்த ஓராண்டு காலமாக எதைத் தொட்டாலும் நட்டத்தையும், இழப்புகளையும், ஏமாற்றங்களையும் அடுக்கடுக்காக தந்து உங்களை அலைக்கழித்தாரே குரு பகவான். இப்போது 19.6.2014 முதல் 14.07.2015 வரை உங்கள் ராசிக்குள் நுழைகிறார். “ஜென்மத்திலே ராமர், வனத்திலே சீதையை சிறை வைத்தது” என்றொரு பாடல் இருக்கின்றது.

அதன்படி கணவன்-மனைவிக்குள் உப்புப் பொறாத விஷயத்திற்கெல்லாம் சண்டை, சச்சரவு வர வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக 4.9.2014 முதல் ஏறக்குறைய ஒன்பது மாதங்களுக்கு ஆயில்யம் நட்சத்திரத்திலேயே குரு செல்ல இருப்பதால் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பதறினால் சிதறிவிடும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சாப்பாட்டில் காரம், உப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி அன்றாடம் அவசியமாகிறது. மஞ்சள் காமாலை, காய்ச்சல், சளித் தொந்தரவு வரக்கூடும். முடிந்தவரை வெளி உணவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான குரு பகவான் உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஆரோக்கியத்தை பாதித்தாலும் உச்சமடைவதால் பண வரவு அதிகரிக்கும். சின்னச் சின்ன கடனை பைசல் செய்வீர்கள். வீடு, மனை வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

உங்கள் பிரார்த்தனைக் கேற்ப குழந்தை பாக்யம் கிடைக்கும். சிலர் ஊர் மாறுவீர்கள். குலதெய்வக் கோவிலைப் புதுப்பிப்பீர்கள். மகனுக்கு நல்ல மணமகள் அமையும். வேலையும் கிடைக்கும். பழைய நகையை மாற்றுவீர்கள். குரு முக்கியமான வீடுகளைப் பார்வையிடுவதால் உங்களின் அந்தஸ்து ஒரு படி உயரும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். பெரிய நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதுப் போல் தோன்றும். குழம்பாதீர்கள். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் நஷ்டத்தைச் சரிக்கட்ட வேலையாட்களைக் குறைப்பீர்கள்.

பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்கப் புதுச் சலுகைகளை அறிவிப்பீர்கள். உணவு, துணி, வாகன வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயல்வார்கள். சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மேலதிகாரிகள் உங்களை நம்பி சில கூடுதல் வேலைகளை ஒப்படைப்பார்கள்.

ஆகமொத்தம் இந்த குரு பெயர்ச்சி ஒருவித படபடப்பையும், வேலைச் சுமையையும் தந்தாலும் கடந்தாண்டைவிட வளர்ச்சியையும், செல்வாக்கையும் தரும்.

சிம்மம்

குறிக்கோளை அடையும்வரை அயராமல் பாடு படுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக குரு பகவான் உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களுடைய அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தினார். அதிகாரப் பதவியிலும் உங்களை அமர வைத்து அழகு பார்த்தார். எதிர்த்தவர்களையெல்லாம் அடக்கினார். இப்போது 19.6.2014 முதல் 14.07.2015 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் முன்னேற்றம் தடைப்படாது. ஆனால் அலைச்சல் இருக்கும். அத்துமீறிய செலவுகளால் அக்கம்பக்கம் கடன் வாங்க வேண்டி வரும்.

ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்காமல் அனைத்திலும் நீங்கள் நேரடி கவனம் செலுத்துவது நல்லது. கூடாப் பழக்கமுள்ள நண்பர்களின் நட்பைத் தவிர்ப்பது நல்லது. அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். முன்கோபத்தையும் கொஞ்சம் கட்டுப்படுத்துவது நல்லது. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். விருந்தினர், உறவினர் வருகையால் வீடு களை கட்டும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசத்தை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்த வேண்டிவரும். தூக்கம் குறையும்.

நீண்ட நாட்களாக நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குரு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் புதிதாக வாகனம், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குரு 8-வது வீட்டை பார்ப்பதால் பயணங்கள் உண்டு. அயல்நாடு சென்று வருவீர்கள். வேற்றுமாநிலத்தில், வெளிநாட்டில் வேலை கிடைக்கும். உயர் கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள்.

வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு என்றாலும் பெரிய அளவில் புது முதலீடுகள் செய்ய வேண்டாம். கமிஷன், வாகன உதிரி பாகங்கள், துரித உணவு வகைகளால் லாபமடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் வேலைச் சுமை இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

இந்த குரு மாற்றம் சுபச் செலவுகளையும், பயணங்களால் திருப்பங்களையும் தரும்.

கன்னி

யதார்த்தமான பேச்சால் எல்லோரையும் வசீகரிப்பவர் களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு மரியாதைக் குறைவையும், தோல்வியையும், அடுக்கடுக்காக ஏமாற்றங்களையும், காரியத் தடைகளையும் தந்த குரு பகவான் இப்போது 19.6.2014 முதல் 14.07.2015 வரை உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும்.

தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாகத் தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக்கொண்டு மனக் கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்களை சரியாகப் புரிந்துக் கொண்டு பேசத் தொடங்குவார்கள்.

விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். புதுப் பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடிவரும். பங்குச் சந்தை மூலமாகப் பணம் வரும். குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை பார்ப்பதால் துணிச்சலாக முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

அவர்களின் உயர் கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மனைவி உங்களின் புது முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள்.

வி.ஐ.பி.களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட அவமானங்கள், தொந்தரவுகள், எதிர்ப்புகள் நீங்கும். இனி உங்கள் கை ஓங்கும். புதுப் பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும்.

இந்த குரு மாற்றம் ஒதுங்கி ஓரமாய் இருந்த உங்களுக்கு முதல் மரியாதையைத் தருவதுடன், வசதியையும் தருவதாக அமையும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x