Published : 07 Nov 2013 12:00 AM
Last Updated : 07 Nov 2013 12:00 AM

இன்றைய நவநாகரிகப் பெண்களின் உடை பற்றிய உங்கள் கருத்து என்ன? - பாலகுமாரன் பதிலளிக்கிறார்

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அதாவது என்னுடைய பதினெட்டு வயதில் பத்திரிகைகளில் இதுபோல அபிப்ராயங்களைப் படித்திருக்கிறேன். கோவிலுக்கு கண்ணாடி இழை நூல் புடவையைக் கட்டிக்கொண்டு வருகிறார்கள். கண்ணாடிப் புடவை அங்கங்களையெல்லாம் காட்டுகிறது. இதைவிட அசிங்கம் உண்டா, இது எவ்வளவு கேவலமானது, இது தமிழர் நாகரிகத்திற்கு எதிரானது அல்லவா, இந்தியக் கலாசாரத்திற்கு புறம்பானது அல்லவா, ஏன் இப்படி பெண்கள் இருக்கிறார்கள் என்று கேட்கப்பட்டது. அலட்டிக் கொள்ளப்பட்டது. அபத்தம் என்று முடிவாயிற்று.

வேறென்ன செய்வது கலிகாலம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். தமிழர் நாகரிகத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்று கெஞ்சியிருக்கிறார்கள்.

அந்தக் கண்ணாடித் துணி என்பது இப்போது பல பெண்களாலும் அணியப்படுகின்றன சிந்தடிக் புடவைகள். நைலான், நைலக்சின் வேறு விஷயங்கள். இன்று கோட்டாவும் டஸ்சரும் வேறு சில புடவைகளும் பெண்களைக் கவர்ச்சிகரமாகத் தான் காட்டுகின்றன. அவற்றை யாரும் குறை சொல்வதில்லை. அவை நல்ல உடைதானே. நாகரிகமான உடைதானே என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன.

டீ ஷர்ட்டும், அரைபேண்டும் மிகக் கேவலமாக வர்ணிக்கப்படுகின்றன, பிதுங்கி வழிகிறது என்றெல்லாம் பத்திரிகைகள் சொல்கின்றன. பிற்பாடு இன்னும் இருபது வருடம் கழித்து ஒரு பத்திரிகையில் விவாதம் வரலாம்.

‘ஒழுங்காக ஒரு டீ ஷர்ட்டும் அரைபேண்டும் போட்டுக்கொண்டு வரக் கூடாதா, என்ன இப்படிக் கேவலமாக உடை உடுத்துகிறார்கள்’ என்று பெண்கள் அலட்டிக்கொள்ளலாம். அது என்ன மாதிரி உடை என்று என்னால் கற்பனைகூட செய்ய முடியவில்லை. எவ்வளவு ஆபாசம் என்று கணக்கிட முடியவில்லை. இருபது வருடம் வாழ்ந்துதான் அதைப் பார்த்தாக வேண்டும். அதற்கு வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை.

முந்தைய தலைமுறை இன்றைய தலைமுறையை இழிவாகப் பேசுவது காலாகாலத்திற்கும் நடந்துகொண்டிருக்கின்ற விஷயம். ஆண்களின் மனம் அலைகழிகிறது என்பது சரியான பேச்சு அல்ல. தூணுக்குப் புடவை கட்டினாலும் அலைக்கழிக்கப்படுபவன் இருக்கிறான். தெருவோரக் கடைகளில் ஜன்னல்களின் வழியே மொட்டைத் தலையோடு இருந்தாலும் அந்தப் பொம்மையின் உயரம், அகலம், திமிர் கொண்டு வாய்பிளந்து நிற்கிறான்.

ஆபாசம் என்பது பார்வையில் இருக்கிறது.

‘தன்னைவிட்டு இன்பம் புறம்பல்ல, நற்பாவம் விட்டுத் தோற்றம் புறம்பல்ல’ என்பது பெரியோர் வாக்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x