Last Updated : 01 Jun, 2017 10:04 AM

 

Published : 01 Jun 2017 10:04 AM
Last Updated : 01 Jun 2017 10:04 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 31: திருவடியால் ஒருஅடியாவது தருவாய்

‘இறைவா! உன் அருள்பெறும் விதியில்லா விட்டாலும், திருவடியால் ஒரு அடியாவது தருவாய்!', என்று அகம்குழைந்து வழிபடும் இம்மணிவாசகம், கொடு வினைப் பயனால் அல்லலுறும் மனிதர்களுக்கு வழிகாட்டும் இன்னுமொரு விடியலாகும்.

“கொடிஇடையாள் உமையன்னையின் பங்கனே! என்அரசே! நீ முன்னம் என்னை ஆட்கொண்டபோதே என் கொடுவினையால் விளைந்த அல்லல்கள் யாவும் நீங்கிவிட்டன என்றல்லவா எண்ணியிருந்தேன்! எங்கள் சிவலோகனே! என்னை வா என்று அருளி, துன்பம் தரும் என் உடலை ஏன் இன்னும் அழிக்கவில்லை? என்னை உடையவனே! என்னைக் கூவிப் பணிகொள்ளாதிருக்க என்ன காரணமிருந்தாலும், நின் திருவடிகளால் என்னைத் தண்டித்தாலே எனக்குப் போதுமானது!” என்று இறைவனிடம் மனமுருகி விண்ணப்பிக்கின்றார் மணிவாசகர்.

அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்றிருந்தேன்!

கொடியேர் இடையாள் கூறா! எங்கோவே! ஆவா! என்று அருளிச்

செடிசேர் உடலைச் சிதையாதது எத்துக்கு? எங்கள் சிவலோகா!

உடையாய்! கூவிப் பணிகொள்ளாது, ஒறுத்தால் ஒன்றும் போதுமே!

(திருவாசகம்:33.2)

உயிர்களிடம் இறைவன் கொண்ட கருணையை உணர்ந்துகொள்ளவும், மணிவாசகரே மனித உடலைப் புகழ்ந்தும் பழித்தும் பல்வேறு இடங்களில் ஏன் பாடியுள்ளார் என்பதை அறிந்துகொள்ளவும் இத்திருவாசகம் உதவும்.

அருள்பெற்றும் துன்பங்கள் ஏன்?

“என்னை ஆட்கொண்ட இறைவனின் திருவடிகளைத் தீண்டி நான் பேரின்பம் அடைந்தேன்! இறைவன் ஆட்கொண்டதால், கொடுவினைப் பயனான துன்பங்கள் உடன் அகன்றுவிடுமே! ஆட்கொள்ளப்பட்டும், இறைவனைப் பிரிந்து, மனித உடலிலேயே துன்பத்தில் துயருருகின்றேன்; இது எங்ஙனம்?”, என்ற தன் ஆற்றாமையையே “அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்றிருந்தேன்!” என இறைவனிடம் வெளிப்படுத்துகின்றார் மணிவாசகர்.

துன்பம் தரும் உடலை அழிக்காதது எதற்காக?

அடுத்ததாக, “எங்கள் சிவலோகா! என்னை ஆட்கொண்ட பின், எனக்குப் பாவமும், துன்பமும் தரும் இவ்வுடலை அழித்து, என்னை வா என்று அருளி, உன்னுடன் அழைத்துச் செல்லாதது எதற்காக?” என்ற கேள்வியை இறைவனிடம் வைக்கிறார்; திருவாசகத் தேனில் மூழ்கி, அவ்வின்பக் கடலில் நீந்திக் குளிக்கும் நமக்கோ பரபரப்பு தொற்றிக்கொள்கின்றது!; இறைவன் மனமிரங்கி, மணிவாசகரை உடன் அழைத்துச் சென்றுவிடுவானோ திருவாசகம் இங்கு முற்றுப்பெற்றுவிடுமோ அடுத்து என்ன நடக்குமோ என்றெல்லாம் மனம் அலைபாய்கிறது! அதேவேளை, மணிவாசகரின் தவிப்பையும் இறைவன் உடனே நீக்கியருள வேண்டும் என்ற வேண்டுதலும் நம் உள்ளங்களில் ஊற்றெடுக்கின்றது. இது திருவாசகத்தில் 'நாம்' கலந்ததால் பெற்ற அன்புருவத்தின் வெளிப்பாடு! அருளுருவத்தின் பரிமாணம்!

இறைப் பேரின்பமடைந்த எவரும் மனித உடலில் வாழ்ந்ததில்லையே! அதனாலன்றோ, ‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்' என்னும் பழமொழி நிலவுகின்றது! மனித உடலிலேயே இறைப் பேரின்பத்தை நுகர்ந்த மணிவாசகரின் அநுபவத்தைத் திருவாசகமாகத் தருவதற்காக அல்லவா இறைவன் இந்தத் திருவிளையாடலை நிகழ்த்துகின்றான்! நமக்கான திருவாசகம் முழுவதையும் படைத்து முடிக்கும்வரை, மணிவாசகரின் கேள்விக்கு இறைவன் விடைதரப் போவதில்லை!

உடலைப் போற்றுவதும்! பழிப்பதும்! - மயக்கத்துக்கு விடை!

இங்கு, 'செடிசேர் உடலை' என்று பழிக்கும் மணிவாசகரே, கோயில் திருப்பதிகத்திலும், இன்னும் பல இடங்களிலும், “இறைவன் என் உடலில் இடம் கொண்டதற்கு எப்படி நன்றி செலுத்தப்போகின்றேன்!” என்ற பொருளில் “இறைவனே! நீ என் உடலிடம் கொண்டாய்! இனியுன்னை என் இரக்கேனே!” என்றும் “எந்தையே! ஈசா! உடலிடம் கொண்டாய்! யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!” என்றும் பாடியுள்ளார். இதில் எதை நாம் சரி என்று ஏற்றுக்கொள்வது என்ற மயக்கத்துக்கு இப்போது விடை காண்போம்.

அமுதமும் மலமும்

உயிர், இவ்வுடலில் வாழ, நீர், உணவு, காற்று ஆகியன, தவிர்க்க முடியாதவை என்ற வகையில் அவை உடலுக்கு அமுதாகின்றன. உடல் உட்கொள்ளும் அமுத நீர், தன் வேலை முடிந்து, எஞ்சிய கழிவுகளுடன் மூத்திரப் பையில் சேரும்போது, நஞ்சு (மலம்) ஆகின்றது; உடல் உட்கொள்ளும் அமுதமான உணவு, உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுத்துவிட்டு, எஞ்சியது மலம் ஆகின்றது. உடல் சுவாசிக்கும் அமுதமான உயிர்க் காற்று, தன் பணி முடிந்து கரியமிலவாயுவாகும்போது நஞ்சு(மலம்) ஆகின்றது. அமுதமாகும் பொருட்களின் பணி முடிந்தது எஞ்சிய பகுதிகள், மலமாகின்றன, நஞ்சாகின்றன; மலமான அவை உடலை விட்டு வெளியேறாவிட்டால், உடலையே அழிக்கும் நஞ்சாகிவிடுகின்றன.

உடல் எப்போது ஆலயமாகும்?

அதேபோல், உயிருக்கு, மரணமில்லாப் பேரின்பம் பெற உதவும் கருவியாக உடல் செயலாற்றும்போது, மறைப்பு சக்தியால் உயிருக்குத் தெரியாமலேயே இறைவன் அவ்வுடலில் வாழ்ந்து உயிருக்கு வழிகாட்டுகிறான்; இங்கு, 'ஊனுடம்பு ஆலயம்' என்ற நிலைப்பாடு எடுக்கின்றார் மணிவாசகர்.

உடல் எப்போது அழிய வேண்டும்?

பக்குமடைந்த உயிர், உடலை விட்டு நீங்கி, இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பம் எய்துகிறது. உயிர் பக்குவமடைந்தும், உடலுடன் வாழ்ந்தால், புலன் மயக்கங்களில் உயிரை ஆழ்த்தி, மீண்டும் பிறவி என்னும் படுகுழியில் வீழ்த்தும் மலமாகிறது; உயிர் இறைவனுடன் கலந்து நிலைத்த பேரின்பம் பெறத் தடையாகிறது உடல்; துன்பம்தரும் (செடி-சேர்) உடலாகிறது. “செடி-சேர் உடலைச் சிதையாதது எத்துக்கு?”, என்ற கேள்வியை பக்குவ நிலையில் கேட்கிறார் மணிவாசகர். (எரிப்பதற்காக விறகின் மேல் வைக்கப்பட்ட பிணத்தைச் 'சிதை' என்பர்; 'சிதைக்குத் தீ வைத்தல்')

ஒறுத்தால்கூடப் போதுமே!

“என்னை உடையாய்! நீ என்னைக் கூவியழைத்துப் பணியாளாக வைத்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை! சினம்கொண்டு, உன் திருவடிகளால் எனக்குத் தண்டனையாவது தா! அதுவே எனக்குப் போதும்!” என்னும் கடைசி வரி, உள்ளத்தை உருக்கிக் குழைக்கும் மணிவாசகம்!

'ஆயுள் பதினாறு' என்ற விதி முடிந்ததால், சிவபெருமானின் திருவடிகளைச் சரணடைந்திருந்த மார்க்கண்டேயனை நோக்கிப் பாசக்கயிற்றை வீசி, சிவபெருமானின் திருவடிகளால் உதைபட்டு வீழ்ந்தான் காலன். 'சிவபெருமானின் எதிரிலேயே வந்து, சிவபூசையில் ஈடுபட்டிருந்த மார்க்கண்டேயரின் உயிரை எடுக்கமுயன்று, இறைவனின் தாமரை மலர்த் திருவடிகளால் தண்டனை பெற்ற, கூற்றுவனின் கொள்கையைப் போன்றது என் கொள்கை' என்னும்,

ஏற்று வந்து எதிர், தாமரைத் தாள் உறும்

கூற்றம் அன்னது ஓர் கொள்கை,

என் கொள்கையே!

(திருவாசகம்:5.5.3-4)

மணிவாசகமும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடமைக்குப் பரிசு!

தன் தலைவன் சிவபெருமானின் திருவுள்ளக்குறிப்புக்கு எதிரானது என்று தெரிந்தும், கடமையைச் செய்யத் துணிந்தான் காலன். உதைபட்டாலும், சிவபெருமானின் திருவடிகளால் தீண்டப்பட்டதால், மார்க்கண்டேயருடன், காலனும் நிலைத்த வீடுபேறு பெற்றான். “அனைத்து தேவர்களிலும் உயர்ந்தவர்களான, நான்முகன் மேலும்மேலும் உயரச் சென்றும், திருமால் ஏழுலகுக்குக் கீழ் சென்றும், அறிய முடியாத இறைவனின் திருவடிகளை, சிவ வழிபாடு செய்த பாலன் மார்க்கண்டேயனிடம் சென்று, பாசக்கயிற்றை வீசிய காலன் எளிதில் அறிந்தான்” என்று வியக்கிறார் நாவுக்கரசர் பெருமான்.

மேலும் அறிந்திலன்!,

நான்முகன் மேல் சென்று; கீழ் இடந்து

மாலும் அறிந்திலன்! மால் உற்றதே;

வழிபாடு செய்யும்

பாலன்மிசைச் சென்று,

பாசம் விசிறி, மறிந்து சிந்தைக்

காலன் அறிந்தான்!,

அறிதற்கு அரியான் கழல்அடியே!

(தமிழ் மறை: அப்பர்: தனி விருத்தம்)

இறைவன் திருவடிகளால் பெற்ற “உதை” கடுந்தண்டனையாக நமக்குத்தோன்றினாலும், எமனுக்கு இன்பமயமான திருவடிப் பேறானதால், “காலன் அறிந்தான், அரிதற்கு அரியான் கழலடியே!!” என்கின்றார் அப்பர் பெருமான்.

கிறித்துவ அருட்தந்தையின் திருவாசகக் காதல்!

நம் ஆத்தும விடுதலைக்காக, நம் அனைவரின் கொடுவினைகளாம் சிலுவைகளைத் தன் தோளில் சுமந்து, நமக்கான திருவாசகம் படைத்த மணிவாசகருக்கு நாம் என்றென்றும் நன்றி செலுத்துவோம்! மணிவாசகரிடம் இயேசுபிரானைக் கண்டுகொண்ட அருட்தந்தை ஜி.யூ.போப் அவர்கள் திருவாசகத்தில் உருகியதும், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உரையெழுதியதும் இயல்பே அல்லவா! உண்மையையும், இறைவனையும் தேடும் அருளாளர்களுக்கு மொழியேது? மதமேது?, சின்னங்கள் ஏது? “ஓர் நாமம்! ஓர் உருவம்! ஒன்றுமிலா ஈசனுக்கு! ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!” என்ற திருவாசகம் தெளிவோம்! அன்பில் மலர்வோம்!

தந்தையிடம் உரிமையுடன் வாதாடும் மகனைப்போல, இறைவனிடம் உரிமையுடன் வாதாடி, அருள் வேண்டும் சுவாரசியமான மணிவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x