அஞ்சலி: காஞ்சியின் கம்பீரக் குரலோன்

அஞ்சலி: காஞ்சியின் கம்பீரக் குரலோன்
Updated on
1 min read

திவ்ய பிரபந்தப் பாசுரங்களால் புகழ் பெற்ற கலைமாமணி கரந்தை ஜி.தாமோதரன் (73) மறைந்தார். செப்டம்பர் 16 ம் தேதி வெள்ளிக்கிழமை, சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள தமது இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்தார். இவருக்கு மனைவி மோகனாம்பாள், மகன்கள் டி.கண்ணதாசன், டி.செளந்தர்ராஜன் மற்றும் டி.சாந்தலஷ்மி, டி.விஜயலஷ்மி ஆகியோர் உள்ளனர்.

இவரது படத்திறப்பு 27-ம் தேதி செவ்வாய்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இசை அஞ்சலி நிகழ்ச்சியும் பஞ்ச மோட்சப் பிரபாவமும் நடைபெறும். திவ்ய பிரபந்தத்தில் கண்ட மானுடம்

என்ற தலைப்பில் இதனை வழங்குபவர் எம். அண்ணாமலை. மறுநாள் நீத்தார் நினைவு வழிபாடும் நடைபெறவுள்ளது..

இவர், மூன்று ஆழ்வார்கள் முத்தமிழ் கீதம், அன்றைய ஆழ்வார்களும் இன்றைய கவிஞர்களும், ஆயனும் மாயனும், திருமால் பெருமை, திருமந்திர பிரபாவமும் திருவேங்கடமும், ஆயர்கள் துயர் தீர குன்றேந்தினாய், வைணவம் காட்டும் சமயமும் சமுதாயமும், திருவாய் மொழியில் திருவேங்கடம், திருமாலின் தேனிசை, ஆர்த்திப் பிரபந்தம், குழலோசை தந்திட்ட குணசீலா, ராமானுஜ நூற்றந்தாதி, திருக்குறளில் சிலத் துளிகள், ஆழ்வார்கள் அமுத கானம் ஆகிய குறுந்தகடுகளை வெளியிட்டுப் பெரும் தொண்டாற்றியுள்ளார். திரையிசைக் கவிஞர் கண்ணதாசன், அடிக்கடி இவரைப் பிரபந்தம் பாடச் சொல்லி கேட்பாராம். திவ்ய பிரபந்தத் தமிழ் கேட்ட கவிஞர் அதன் சாரம் விளங்க கவிதைகள் இயற்றுவாராம்.

வைணவ மணி என்ற இவரது முதல் விருதினை பத்மபூஷண் காஞ்சி பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ உ.வே. அண்ணங்கராச்சாரியார்,1979 ம் ஆண்டு வழங்கியுள்ளார். சுமார் ஐம்பதற்கும் மேற்பட்ட விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். காஞ்சி மகா பெரியவரின் கரங்களால் பெற்ற விருதினை தன் வாழ்நாள் பாக்கியமாகக் கருதினாராம். இல்லறத்தில் சுகமாய் வாழ்ந்து இசையில் பூவாகப் பூத்து வைணவம் தழைக்க வழிகோலிட்டவர் இவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in