

பல்லாண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றிற்கு அருகில் வசித்துவந்த ஏழைப் பெரியவர் ஒருவர் அம்மனைத் தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டுவந்தார். தன் உள்ளத்தில் குடிகொண்டுள்ள அம்மனுக்கு இந்தப் பூமியில் குடில் ஒன்று அமைத்துத் தர வேண்டும் என நீண்ட நாளாக ஆவல் கொண்டிருந்தார். ஆனால் அவரோ ஏழை. ஏழைகளால் கனவு காண மட்டும்தானே முடியும். தினமும் கோயில் கட்டுவதைப் பற்றி ஏக்கத்துடன் கனவு காண்பார்.
அப்படி ஒருநாள் கோயில் கட்ட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் உறங்கியவரின் கனவில் அம்மன் தோன்றினாள். தாமிரபரணி நதிக்கரையில் மூன்று அத்திமரங்கள் ஒன்றாக இருக்கும் பகுதியைச் சுட்டிக்காட்டி அவ்விடத்தில்தான் இருப்பதாகக் கூறினாள். அம்மனின் கனவில் வந்து சொன்னததைக் கண்டு பரவசமடைந்த அந்த ஏழைப் பெரியவர் அம்மன் சொன்ன இடத்தில் வலையை வீசினார். அப்போது அந்த வலைக்குள் அம்மன் சிலை உருவில் எழுந்தருளினாள். தாமிரபரணியாற்றின் கரையிலேயே சிறிய குடிசை அமைத்து அம்மனை பிரதிஷ்டை செய்தார். அந்த அம்மனே தற்போது பக்தர்களுக்கு அருள்புரிந்து காத்து வருகிறாள். பெரியாற்றில் கிடைத்ததால் ‘பேராற்றுச் செல்வி’ என்று அழைக்கப்படுகிறாள்.
கோயில் குடிகொண்ட தெய்வங்கள்
திருநெல்வேலியில் உள்ள வண்ணாரப்பேட்டையில் உள்ள இந்தக் கோயிலில் பேராற்றுச் செல்வி எட்டு கைகளிலும் ஆயுதங்களோடு வடக்கு திசை நோக்கி காட்சி தருகிறாள். வரப்பிரசாதியான இவள் சாந்தமானவள் என்பதால் ‘சாந்தசொரூப காளி’ என்றும் அழைக்கப்படுகிறாள். அம்மன் சந்நிதிக்குப் பின்னால் இரட்டைப் பிள்ளையார்கள் தரிசனம் தருகின்றனர். இவர்களுக்கு இடது புறத்தில் இரண்டு நந்திகள் இருப்பது சிறப்பு. பிராகாரத்தில் சங்கிலி பூதத்தார், நல்லமாடன் ஆகியோர் பீட வடிவில் காட்சி தருகின்றனர். தளவாய் பேச்சி தனிச் சந்நிதியில் அருள்புரிகிறாள். வளாகத்தில் லிங்கேஷ்வரர், சக்கர விநாயகர் அருள்புரிகின்றனர்.
தீர்த்த சிறப்பு
காசியை ஆட்சி செய்த மன்னன் ஒருவன், இங்கு நீராடி, குஷ்ட நோய் நீங்கப் பெற்றான். எனவே இத்தீர்த்தத்திற்கு ‘குட்டகுறை தீர்த்தம்’ என்ற பெயரும் உண்டு. இவ்விடத்தில் தாமிரபரணி நதிக்கு ‘உத்திரவாகினி’ என்று பெயர். பொதுவாக வடக்கு நோக்கிச் செல்லும் நதிகள் புண்ணியமானதாகக் கருதப்படும். எனவே இங்கு நீராடி அம்மனை வழிபட அனைத்து நலன்களும் உண்டாகும். திருமணம், புத்திர பாக்கியம் உள்ளவர்கள் அம்மனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, மாவிளக்கு ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.
விசேஷ மாதம்
ஆடி மாதத்தில் இரண்டாம் செவ்வாய்க் கிழமை ‘முளைப்பாரி விழா’ சிறப்பாக நடக்கிறது. இதுதவிர சித்திரை மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை ‘கொடை விழா’, புரட்டாசியில் ‘பாரி வேட்டை’ ஆகிய விசேஷங்களும் நடக்கின்றன.