நீயே கடவுள் இருப்பதற்கு நிரூபணம்

நீயே கடவுள் இருப்பதற்கு நிரூபணம்
Updated on
2 min read

கேசவ் சந்திர சென் என்பவர் சிறந்த தத்துவ அறிஞர், சிந்தனையாளர். ராமகிருஷ்ணரைச் சந்திக்கப் போனார். ராமகிருஷ்ணரை வாதுக்கு அழைத்துத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியம். பிரமாதமாக வாதிடுவார்.

கடவுளுக்கு எதிராக வாதிட்டார். சமயத்துக்கு எதிராக வாதிட்டார். ராமகிருஷ்ணருடைய முட்டாள்தனத்தைப் புட்டுப் புட்டு வைத்தார். ராமகிருஷ்ணர் சரியான முட்டாள் என்பதை நிரூபிக்க முயன்றார். கடவுள் இல்லையென்றும் யாரும் கடவுள் இருப்பதை நிரூபிக்கவில்லை என்பதையும் வாதிட்டு நிறுவ விரும்பினார்.

பேசினார். பேசிக்கொண்டே இருந்தார். கொஞ்ச நேரத்தில் அவருக்கே என்னவோ சரியில்லை என்று தோன்றியது. அவர் பேசிக் கொண்டே இருக்கவும் ராமகிருஷ்ணர் சிரித்துக்கொண்டே இருந்தார். இவர் சொல்வதைக் கவனித்துக் கேட்டார். பிறகு சிரித்தார். வெறும் சிரிப்பு மட்டுமல்ல. துள்ளிக் குதித்துச் சிரித்தார். கேசவ் சந்திர சென்னைக் கட்டுப் பிடித்துக் கொண்டு சிரித்தார். அவருக்கு முத்தம் தந்தார். ‘அருமை! இந்த வாதத்தை நான் கேட்டதே இல்லை. வெகு புத்திசாலித்தனமான வாதம். அருமை!’ என்றார்.

கேசவ் சந்திர சென்னுக்குத் தர்மசங்கடமாகாப் போய்விட்டது. அவரைப் பார்க்க ஒரு கூட்டம் வேறு கூடிவிட்டது. அவ்வளவு பெரிய தத்துவஞானி ராமகிருஷ்ணரைச் சந்திக்கப் போனால், அதைப் பார்க்க கூட்டம் சேராமலா இருக்கும்? நிறைய பேர் என்ன பேசிக்கொள்ளப் போகிறார்கள் என்பதைக் கேட்க கூட்டம் கூட்டமாகக் கூடினார்கள். அவர்களுக்குக் கூடத் தாம் அங்கே வந்தது வியர்த்தமோ என்று தோன்றியது.

‘இது என்ன விநோதமாக இருக்கிறது!’

ராமகிருஷ்ணரோ நடனமாடினார். சிரித்தார். கடவுளைப் பற்றி எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்திருந்தாலும் நீ அதைத் தொலைத்துக் கட்டிவிட்டாய். கடவுள் இல்லாமல் இவ்வளவு புத்திசாலித்தனம் எங்கே இருந்து வந்தது? நீயே நிரூபணம் கேசவ சந்திரா! நீயே கடவுள் இருப்பதற்கு நிரூபணம்’ என்றார்.

ராமகிருஷ்ணரின் சிரிப்பு

தன்னுடைய நாட்குறிப்பில் கேசவ் சந்திரா இதைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். ‘ராமகிருஷ்ணரின் சிரிப்பை என்னைத் தோற்கடித்துவிட்டது. என்றென்றைக்குமாக என்னைத் தோற்கடித்துவிட்டது. எல்லா வாதங்களும் மறந்து போயின. என்ன முட்டாள்தனம் என்று பட்டது. அவர் என்னை எதிர்த்து எந்த வாதமும் செய்யவில்லை. ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. என்னை முத்தமிட்டார். அணைத்துக் கொண்டார். சிரித்தார். நடனமாடினார். இதுவரை யாரும் பாராட்டாத அளவுக்கு என்னைப் பாராட்டினார். நானோ அவருக்கு எதிராகப் பேசிக்கொண்டிருந்தேன். அவரோ, கேசவ சந்திரா! நீயிருப்பது, உன்னுடைய இந்தப் புத்திசாலித்தனம், மேதைத்தனம், இது போதும் கடவுள் இருப்பதை நிரூபிக்க என்று சொன்னார். என்னிடமே சொன்னார்.

இப்படி எழுதிய கேசவ சந்திரா மேலும் எழுதுகிறார். ‘ஆனால் அவர் அங்கே இருந்தது, அவருடைய சிரிப்பு, அவருடைய நடனம், அவர் என்னைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டது, இவைதான் கடவுள் இருப்பதை எனக்கு நிரூபித்தன. கடவுள் இல்லையேல் அவ்வளவு அருமையான ராமகிருஷ்ணர் எப்படி வந்திருக்க முடியும்?”

படிப்பறிவில்லாத, நாட்டுப்புறத்தவரான ராமகிருஷ்ணர் மெத்தப் படித்த அறிஞரான கேசவ சந்திரரை விட ஆழமானவராக இருந்தார் என்பது நிரூபணமாகி விட்டது. என்னதான் நடந்தது? வெகு அருமையானதொன்று நடந்திருக்கிறது. ராமகிருஷ்ணர் உண்மையான ஆத்திகர். அவருக்கு ஆத்திகம் என்றால் என்ன என்று தெரிந்திருந்தது. அவருக்குத் தெய்வீகம் என்றால் என்ன என்று தெரிந்திருந்தது. வாழ்வை நடனமாடிக் கொண்டே வாழ்வது. வாழ்வைப் பாடிக் கழிப்பது. வாழ்வை அதன் அத்தனை பக்கங்களோடும் ஏற்றுக்கொள்வது. எந்தத் தீர்ப்பும் சொல்லாமல் வாழ்வை ஏற்றுக்கொள்வது. வாழ்வை எப்படி இருக்கிறதோ அப்படிக் காதலித்திருப்பது.

கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட ‘தம்மபதம்’ புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி இது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in