Published : 27 Nov 2014 13:31 pm

Updated : 27 Nov 2014 13:31 pm

 

Published : 27 Nov 2014 01:31 PM
Last Updated : 27 Nov 2014 01:31 PM

அரண்மனைப் பணிப் பெண்

தமிழுக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் அரும்பெரும் இலக்கியங்கள், இலக்கணங்கள், நிகண்டுகள், நீதி நூல்கள் போன்றவற்றை அளித்தருளிய சமணக் கோயில்கள் தமிழகத்தில் பல உள்ளன. அவற்றுள் ஒன்று கொங்கு வேளிர் கட்டிய விஜயமங்கலம் வாலறிவன் சந்திரப்பிரபுவை மூலவராகக் கொண்ட ஜைன ஆலயம்.

விஜயமங்கலம், ஈரோட்டிலிருந்து கோயம்புத்தூர் சாலையில் இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு கொங்கு நாட்டை ஆண்ட அரசர் கொங்கு வேளிர். புரவலரும் புலவருமான அவர் தமிழில் ‘பெருங்கதை’ எனும் காப்பியம் படைத்து ஜைன ஆலயத்தில் அரங்கேற்றிப் பெருமை பெற்றவர். தமிழ்ச் சங்கம் ஒன்றை ஏற்படுத்தியவர்.


ஆலயத்தின் புரவலர்கள்

இந்தச் சமணக் கோவிலை வீரசங்காதப் பெரும்பள்ளி என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. குலோத்துங்கச் சோழனும் இக்கோயிலுக்குத் தானம் செய்ததாகவும் உள்ளது. கோயிலின் முன் மானஸ்தம்பம் இருக்கிறது. இதன் அடிப்பகுதியின் கிழக்கே குந்து தீர்த்தங்கரர் யட்சன் கந்தர்வரும் தெற்கே மகாவீரரும் மேற்கே சுவாலாமாலினி அம்மனும் வடக்கே பிரமதேவரும் வடிக்கப்பட்டுள்ளனர். நுழைவாயிலில் கோபுரமுள்ளது. கோயில் மண்டபத்தின் உட்பகுதியில் அணியா அழகர் ஆதிபகவன் வாழ்க்கை வரலாறு சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. நேமிநாதர், மகாவீரர், கூஷ்மாண்டினி தேவி ஆகியோர் சிலைகள் உள்ளன. இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களின் சிலைகள் வரிசையாகச் செதுக்கப்பட்டுள்ளன.

தூண்களில் சிற்பங்கள் கண்களைக் கவருபவை. கல்வெட்டுகளும் உண்டு. கர்நாடகத்தில் பெலிகுலம் பாகுபலி சிலையை நிறுவிய சாமுண்டராயன் தங்கை புல்லப்பை இக்கோயிலில் வடக்கிருத்தல் மேற்கொண்டார்.

பணிப்பெண்ணுக்குச் சிலை

இக்கோயில் வளாகத்திலேயே அமைந்த அறம் புகன்ற ஆதிநாதர் கோயில் சிதலமடைந்துள்ளது. கோயிலின் முன் மண்டபத்தில் கொங்கு வேளிர் தமிழ்ச் சங்கத்திலிருந்த ஐந்து புலவர்கள் சுவடிகளோடு இருக்கும் சிலைகளை நிறுவியுள்ளார்.கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பதுபோல வேறொரு தமிழ்ச் சங்கப் புலவர்களைத் தன் அரண்மணைப் பணிப்பெண் மூலமாகத் தமிழால் வெற்றிபெறச் செய்து கொங்கு நாட்டவர் எத்தனை பெரிய சான்றோர்கள் என்பதைக் காட்டினார். அதற்காக அப்பெண்ணுக்கும் இக்கோயிலிலேயே சிலையெடுத்து சிறப்புச் செய்துள்ளார்.

இவ்வாறு இக்கோயில் ஆன்மிகத்தோடும், தமிழோடும், கொங்கு நாட்டின் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்துள்ளது. இந்தக் கோயிலைப் பற்றி ஆங்கிலேயர் மெக்சிகன், கோவைக்கிழார் சி.எம்.இராமச்சந்திரஞ்செட்டியார், அர.சம்பகலட்சுமி, மயிலை சீனி.வேங்கடசாமி, ஜீவபந்து பால், செ.இராசு போன்றோர் எழுதியுள்ளார்கள். தெய்வமாக்கவிஞர் தோ.ஜம்புகுமார் தன் பதிகத்தில்,

“தங்க மேவிளை கொங்கு நனாட்டில்

தண்ட மிழ்ப்பெருங் கதையைப் புனைந்த

கொங்கு வேளிராம் கோமகன் வாழ்ந்த

கோதில் நற்றவச் சந்திரநாதன்

வெங்க ணேயுற வீற்றுறை கின்றான்

விஜயமங்கலம் மேவிடு வீரே!” எனப் பாடுகிறார்.

2012-ம் ஆண்டு கோயிலிலிருந்த பகவான் சந்திரப்பிரபர் சிலை களவாடப்பட்டது. தமிழக இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இப்பொழுது கோயில் உள்ளது.


சமணம்சமண கோயில்ஜைன கோயில்பெருங்கதைசமண காப்பியம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author