

திருக்கழுக்குன்றம் அருகே வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள முருகன் ஆலயம் வயலூர் முருகன் ஆலயத்தை நினைவூட்டுகிறது. திருக்கழுக்குன்றம் அருகே வேதகிரீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும் மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் இரும்புலி கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் வேதகிரீஸ்வரர் மலைக் கோயிலில் இருந்து, மூன்று கிலோமீட்டர் தூரத்தில் ஈசானிய மூலையில் அருள்மிகு ஞானவேல் முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மேலும் இக்கோயிலில் துர்க்கை, நவக்கிரகம், குரு தட்சிணாமூர்த்தி, விநாயகர், மகாவிஷ்ணு ஆகியோருக்கும் தனிச் சிலைகள் உள்ளன. திருமணம் வரம் வேண்டி வருபவர்களுக்கு இந்த ஆலயம் சிறப்பு பெற்றது. இந்த ஆலயத்தின் அருகே இயற்கையாக வளர்ந்த பாம்பு புற்றின் அருகே அம்மன் குடி கொண்டிருக்கும் கோயில் ஒன்றும் உள்ளது.
இக்கோயில் முதலில் வெங்கடாஜலபதி சுவாமிகள் மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டது. முதலில் ராஜகோபுரம் மற்றும் கொடிமரம் ஆகியவை இக்கோயிலுக்கு இல்லை. மேலும் கோயில் குளமும் சுத்தம் செய்யப்படாமல் இருந்தன.
தற்போது உள்ளாட்சி நிர்வாகத்தின் உதவியுடன் கோயில் குளம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இக் கோயிலை தற்போது நிர்வகித்து வரும் வெ.முரளிதரன் சுவாமிகள் முயற்சியுடன் ராஜகோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொடி மரம் அமைக்கும் பணியும் தொடங்க உள்ளது. இந்த கோயில் குடமுழுக்கு விழா வரும் ஜூன் 4-ம் தேதி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.