Last Updated : 02 Jun, 2016 04:51 PM

 

Published : 02 Jun 2016 04:51 PM
Last Updated : 02 Jun 2016 04:51 PM

மனம் மாறச் செய்த மணக்கால் நம்பி - ஆன்மிக நூலகம்

மணக்கால் நம்பி வைஷ்ணவ ஆசிரிய பாரம்பரியத்தில் உய்யக்கொண்டாருக்குப் பிறகு வந்தவர். மணக்கால் என்ற கிராமத்தில் தோன்றியதால் மணக்கால் நம்பி எனப்பட்டார்.

நாதமுனி சுவாமிகளின் பேரரான யமுனாச்சாரியார் ஆளவந்தார் என்ற பெயரில் அரசராக வீற்றிருந்தபோது, அவருக்கு வைணவத்தின் சிறப்பை எடுத்துக் கூறி வைஷ்ணவ மார்க்கத்தை ஏற்கச் செய்தவர்.

இவரது பாடலாகத் தனிப்பாடல் களஞ்சியத்தில் ஒரே ஒரு பாடல் இடம் பெற்றிருக்கிறது. அது குலசேகராழ்வாரைப் பற்றிப் பாடப்பட்ட பாடலாகும்.

அந்தப் பாடலைப் பார்ப்பதற்கு முன் குலசேகராழ்வாரின் வரலாற்றை நாம் காண வேண்டும். அப்போதுதான் பாடலின் பொருளைப் புரிந்துகொள்ள முடியும்.

சேரநாட்டை திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட மன்னர் குலசேகரர். இவர் வைணவ அடியார்களிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததைக் கண்டு அமைச்சர் முதலானோர் சங்கடப்பட்டனர். பகவத் கைங்கரியத்தைவிட பாகவத கைங்கரியமே சிறந்ததென அவர்களுக்குத் தொண்டு செய்ததைக் கண்டு அசூயை கொண்ட அவர்கள், அரண்மனையில் உள்ள நகைகளை மறைத்து வைத்துவிட்டு அடியார்கள்தான் களவாடிவிட்டார்கள் என்று அவர்கள் மீது பழி போட்டார்கள். அப்படி எடுக்கவில்லை யென்றால் இந்தக் குடத்தில் பாம்பை இட்டிருக்கிறோம். இதில் கைவிட்டு நாங்கள் எடுக்கவில்லை என்று சத்தியம் செய்யுங்கள் என்றார்கள்.

ஆனால் அவர்கள் அதைச் செய்வதற்கு முன், மன்னரே முன் வந்து `எமது அடியார்கள் அது செய்யார்` என்று தாமே கையை விட்டு எடுத்தார். அதைக் கண்ட அமைச்சர் முதலானோர் திருந்தினர்.

இத்தகைய பக்திகொண்ட இந்த மன்னன் பகைவர் என வரும்போது அவர்கள் வீரத்தைக் கெடுத்து செங்கோலை நிலைநிறுத்தியவர். கொல்லிக் காவலன், வில்லவர்கோன் என்றெல்லாம் புகழ் பெற்றவர்.

இவ்வளவையும் இந்தப் பாடல் அருமையாகச் சொல்கிறது பாருங்கள்.

ஆரம் கெடப்பரன் அன்பர்கொள்

ளாரென்று அவர்களுக்கே

வாரம் கொடுகுடப் பாம்பின்கை

இட்டவன் மாற்றலரை

வீரம் கெடுத்துசெங் கோற்கொல்லி

காவலன் வில்லவர்கோன்

சேரன் குலசேக ரன்முடி

வேந்தர் சிகாமணியே!

புத்தகம்:

தனிப்பாடல் திரட்டில் திருமால்

ஆசிரியர்: டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன்

விலை: ரூ. 70.

வெளியீடு: ஆழ்வார்கள் ஆய்வு மையம்

தொடர்பு: 29, திலக் தெரு, தியாகராய நகர். சென்னை 600 017

தொலைபேசி: 044 2834 6505

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x