

மகாவிஷ்ணு, சிவன், சக்தி ஆகிய தெய்வத் திருவுருவங்களை மேடையில் பஞ்ச நடையில் தோன்றச் செய்தார் குமாரி சி. சக்திஸ்ரீ. புத்தாண்டின் புது விருந்தாக இந்நடன நிகழ்ச்சி அமைந்திருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள பர்கிட் சாலையில் `டேக்` ஆடிட்டோரியத்தில். கடந்த வியாழனன்று மாலை நடைபெற்றது. கானமுகுந்தப்ரியா அமைப்பினர் இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.
நடன மணி சக்திஸ்ரீ பச்சை நிறத்தில் வயலெட் நிற பார்டர் அமைந்த அழகிய புடவையை அணிந்திருந்தார். இந்த ஆடை வடிவமைப்பானது “ஆகார்ய அபிநயம்” என்று நடன மேதைகளால் கூறப்படும் வகையில், நடன சாஸ்திர முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முதலில் பஞ்ச நடையில் அமைந்த நாட்டிய அஞ்சலி, மிஸ்ரம், கண்டம், திஸ்ரம், சதுஸ்ரம், சங்கீர்ணம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் மஹாவிஷ்ணு, சிவன், சரஸ்வதி ஆகிய தெய்வங்களையும் குருவையும் வணங்கித் தொடங்கியபோது, கலாக்ஷேத்ரா பாணி எனப் பாத அசைவுகள் வெளிப்படுத்தின. தேர்ந்த நடனக் கலைஞரால்தான் இத்தகைய நிருத்தத்தினைச் செய்ய இயலும்.
அடுத்து வந்த ராகமாலிகா சப்தத்திற்கான நடனத்தில் கிருஷ்ணரும் கோபியரும் புரியும் லீலைகளைக் காட்சிப்படுத்திய விதம் திருத்தமாக இருந்தது. புல்லாங்குழலுடன் அந்த கிருஷ்ணனே நேரில் வந்துவிட்டானோ என்று தோன்றும் வண்ணம் அவரது அபிநயம் சிறப்பாக அமைந்திருந்தது. சப்தத்தினை அடுத்து அருமையான பதவர்ணத்தை சக்திஸ்ரீ எடுத்துக்கொண்டார். இதுவும் ராகமாலிகையாக அமைந்தது. பதவர்ணம் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி ஆகிய முப்பெரும் தேவியரைப் பற்றியதாக அமைந்தது. இந்தப் பதவர்ணத்தில் சப்த ஸ்வரங்களை சக்திஸ்ரீ அபிநயித்துக் காட்டியது மிகவும் வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.
சக்திஸ்ரீ யின் குரு சுருதி ஷோபியின் துல்லியமான காலப் பிரமாணத்தில் அமைந்த ஜதிகளுக்கு ஏற்றாற்போல் நிருத்தம் அமைந்திருந்தது. ‘நடனம் ஆடினார்’ என்ற மிகவும் பிரபலமான வசந்தா ராகப் பாடலுக்கு அவர் நடனம் ஆடிய விதம் அவரது அபாரமான பயிற்சியைக் காட்டியது. குரலிசைத்த ரந்தினி, நிரவலாக, ஒவ்வொரு முறையும் ‘நடனம் ஆடினார்’ என்று பாடும்போது விதவிதமாக அபிநயத்த விதம் வியப்பைத் தந்தது.
மோகன கல்யாணி ராகத்தில் அமைந்த பாடலுடன் நிகழ்ச்சியினை நிறைவு செய்தபோது, இன்னும் கொஞ்ச நேரம் நடனம் ஆட மாட்டாரா என்று பார்வையாளர்களை ஏங்க வைத்தார். இனிமையாக வாய் பாட்டு பாடினார் ரந்தினி. மென்மையாக வயலின் இசைத்தார் ஜினப்பா. நந்திகேஸ்வரராக மிருதங்கம் இசைத்தது ஆற்காடு பாலாஜி.
சந்திரமோகன் சவுந்திரம் தம்பதியின் புதல்வியான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சக்திஸ்ரீ, நாட்டியக் கலைக்கு அதிமுக்கியமாகக் கருதப்படும் உடல் வாகினைப் பெற்றுள்ளார். எதிர்காலத்தில் இவர் சிறந்த நாட்டியப் திறமையாகத் திகழ்வார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி கட்டியம் கூறியது.