Last Updated : 07 Nov, 2013 03:53 PM

 

Published : 07 Nov 2013 03:53 PM
Last Updated : 07 Nov 2013 03:53 PM

நினைக் காணக் கண் கோடி வேண்டும்

ஆதி கைலாசம் என்று சொல்லக்கூடிய ஓம் பர்வதம் ஆண்டின் நான்கு மாதங்கள் தவிர பிற மாதங்களில் பனியால் முழுவதுமாக மூடப்பட்டுவிடும். இந்தக் குறிப்பிட்ட நான்கு மாதங்களில் பனிப் பொழிவானது சமஸ்க்ருத மொழியில் உள்ள ஓம் என்ற எழுத்துபோல இம்மலை மீது விரவி இருக்கும். எனவே இது ஓம் பர்வதம் (மலை) என்று அழைக்கப்படுகிறது. காட்மாண்டுவில் இருந்து மானசரோவர் ஆயிரம் கி.மீ. தூரம். மலைப்பாங்கான பகுதியாக இருப்பதால் இதனைக் கடக்க நான்கு நாட்கள் ஆகும். நான்கு நாட்கள் என்று சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், உயரம் ஏற ஏறப் பலருக்கும் உடல் நிலை ஒத்துழைக்காது. பயணத்தின் முதல் பகுதியான இதனைக் கடக்கவே மனத் திண்மையும், உடல் திண்மையும் வேண்டும். இறை அனுபவத்தில் மிக முக்கியமான கட்டத்தை அடையப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் மிக முக்கியம். இந்த ஆர்வமே கைலாச மலையை அடையும் வழி. அதையும் மீறிக் கைலாச ஈசனை காண மன உறுதி வேண்டும். மனதில் வெறித்தனமான பக்தியே இதற்கு முக்கியம். இது மலையேற்றம் மட்டுமல்ல, மனமேற்றமும்கூட.

இங்கிருந்து கிளம்பி முதலில் சென்றடைவது மானசரோவர் ஏரி. இது இயற்கையாகவே அமைந்தது. இமயமலை உட்பட அருகில் உள்ள பல மலைகளில் இருந்து வரும் நீர், இந்த ஏரியை வந்தடைகிறது. கடும் குளிர் காரணமாக ஏரி நீர் சில்லென்று இருக்கும். பக்தர்கள் இங்கு ஸ்நானம் முடித்துப் பூசைகள் செய்வார்கள். கைலாசமலையில் மட்டுமல்ல இந்த ஏரிக்கரையிலும் சிவ மூர்த்தங்கள் கிடைக்கும்.

பால், காப்பி, டீ, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள சசோகா சாங் சப்ஜி (கடுகு கீரையில் செய்யப்படும் ஓர் உணவு) என எல்லாமே நாம் கேட்டால் உடனடியாகச் சுடச் சுட செய்து தருவார்கள். சுவை ரொம்ப ரொம்ப சுமாராகத்தான் இருக்கும். ஆனால் அவர்களின் அன்பும் கவனிப்பும் அருமையாக இருக்கும். நாம் ஆறு மணிக்குக் கிளம்புகிறோம் என்றால் உணவு தயாரிப்பவர்கள் மூன்று மணிக்கே இந்தக் கடுங்குளிரில் எழுந்து நமக்காகச் சமைக்கிறார்கள். எனவே, கிடைத்ததைச் சாப்பிட்டு நடப்பதைப் பார்க்க வேண்டும்.

ஆயிரம் கி.மீ. தூரம் கடந்தால் மானசரோவரை அடையலாம். இதற்கு மூன்று நாட்கள் ஆகும். தற்போது சீன அரசு நல்ல சாலைகளை அமைத்திருக்கிறது. நல்ல தங்குமிடங்களைக் கட்டியிருக்கிறது. இந்த மானஸரோவரை ஜீப்பிலேயே சுற்றிக் காட்டிவிடுகிறார்கள். இங்கிருந்து தீர்த்தபுரி மலைக்குச் சிறப்பு அனுமதி பெற்றுச் செல்லலாம். இந்த இடத்தில் தளதள எனக் கொதிக்கும் சுடு நீர் தடாகமும் இருக்கும்.

இந்தத் தீர்த்தபுரி என்பது சாம்பல் மலை. பஸ்மாசுரன் சிவனிடம் வரம் பெற்ற பின் வரத்தைச் சோதித்துப் பார்க்க யார் தலையில் கை வைப்பது என்று அலைகிறான். விஷ்ணுவின் மாய வலையில் சிக்கி சாம்பலாகிறான். இவன் சாம்பலானதே மலையாகத் தோன்றுகிறது. இங்கே சிறிதளவு சாம்பலை யாத்ரிகர்கள் எடுத்துக்கொள்வார்கள். இந்த மலைக்குள் விலை மதிப்புமிக்க கற்கள் உள்ளதாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தக் கற்கள் விற்பனைக்கும் கிடைக்கின்றன. பெண்கள் இவற்றை மிகவும் விரும்பி வாங்கிவருகிறார்கள். இக்கற்கள் மிகத் தரமானதாக இருப்பதாக இங்குள்ள பொற்கொல்லர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தத் தீர்த்தபுரியை அடுத்து சீனப்பகுதியில் தங்கச் சுரங்கம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இங்கு எல்லைப் பாதுகாப்புக் கெடுபிடிகள் உள்ளன. பத்தடிக்கு ஒரு முறை பாஸ்போர்ட், சீன விசா ஆகியவற்றைப் பரிசோதிக்கிறார்கள். பிறகு நாங்கள் கோல்மாலா சென்றோம். இது சக்தி பீடம். இங்குதான் பார்வதியின் கை விழுந்ததாகச் சொல்கிறார்கள். இந்தப் பகுதி பதினெட்டாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. செங்குத்தான இந்தப் பகுதியைக் கடக்க போனி என்ற மட்டக்குதிரைகளும், யாக் என்ற மலைப் பிரதேச மாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் பாதி தூரமாவது நடந்துதான் கடக்க வேண்டும். ஆரம்பத்திலேயே கைத்தடி ஒன்றைக் கொடுத்துவிடுகிறார்கள். இங்கே மூச்சுத் திணறும். இதனைச் சமாளிக்கப் பூண்டு, கற்பூரம் கலந்த சின்னஞ்சிறிய பையைக் கழுத்திலே தொங்க விட்டுக்கொள்ள வேண்டும். மூச்சுத் திணறும்பொழுது இதை முகர்ந்தால் சுவாசம் எளிதாகும்.

அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் பார்வதி குண்டம். பின்னர் நாம் சுற்றி வரும்பொழுது காணக் கிடைப்பது நந்தி மலை. கைலாசமலை யோகி முகம் போன்ற அமைப்பில் சிலிர்க்க வைக்கும் சிவனாய்த் தோன்றுவதும் இத்தென்பகுதியில் இருந்துதான். அன்னை பார்வதியாய் அவள் ஸ்நானம் செய்த குண்டத்தைத் தரிசித்து, இத்தரிசனமும் பெறுதல் பாக்கியம். மலையின் ஒரு பகுதி சிவபெருமானின் சடை போன்ற அமைப்பில் தோன்றும். இத்தனை உடல் துன்பங்களையும் தாண்டி கைலாயநாதனை மலையாய்க் கண்டதும் கண்கள் பக்தியில் விரிகின்றன. திரண்ட ஆனந்தக் கண்ணீர் இனிப்புக் கடலாகிறது. இத்துடன் திருப்தியடைந்து திரும்பிவிடக் கூடாது.

இனிமேல்தான் உள்சுற்று கிரிவலம் தொடங்கப் போகிறோம். மூச்சை இழுத்து விட்டுக்கொள்ளுங்கள். சிவஸ்தலத்திலிருந்து ஜுகல் பந்த் வரை உள் நோக்கிச் செல்ல வேண்டும். வழுக்கும் பனிப் பாறைகள் அதிகமுள்ள பகுதி. நாம் இடப்புறமாகவும், திபெத்தியர்கள் வலப்புறமாகவும் உள்சுற்று கிரிவலம் செய்வார்கள். இதில் திபெத்தியர்கள் அஷ்டாங்க நமஸ்காரத்தின் மூலமே இந்த இருபது கி.மீ. தூரத்தையும் கிரிவலம் வருவார்கள். ஒரு நமஸ்காரம் செய்து, தங்கள் தலையின் உச்சி தரையில்படும் இடத்தை கோடு கிழித்துக் குறித்துக்கொண்டு, குறித்த கோட்டில் கால் வைத்து அடுத்த நமஸ்காரத்தைச் செய்வார்கள். இந்த அளவு பக்தியில் வெறி இருந்தால்தான், உள்சுற்று கிரிவலம் சாத்தியம்.

தலை நிமிர்ந்து பார்த்தால் சிவனின் சடாமுடித் தோற்றம். அதே இடத்திலிருந்து மலை வெடித்து சிவ பார்வதி மூர்த்தங்கள் பூச்சொரிதல் போல் கொட்டுகிறது.அவற்றைச் சட்டைப் பையில் எடுத்துப் போட்டுக்கொண்டால் ஆயிரம் யானை பலம் வருகிறது. காலை நாலரை மணிக்குக் கிளம்பினால் தங்கியிருக்கும் இடத்துக்குத் திரும்ப இரவு எட்டரை மணி ஆகிவிடுகிறது. நம் மனவெளியில் ஆனந்தக் கூத்தாடும் சிவனை இமயமாய்க் காணுதலை விட யார் தருவார் வேறு ஆனந்தம். விடியற்காலை சூரிய ஓளியில் கைலாச மலையின் தோற்றம் பொன்னைக் கொட்டி வைத்ததுபோல சிகப்பாகச் ஜொலிக்கிறது.

நினைக் காணக் கண் கோடி வேண்டும் கைலாச ஈசா...

கேட்டு எழுதியவர்: ராஜேஸ்வரி ஐயர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x