Published : 08 Jun 2017 09:50 AM
Last Updated : 08 Jun 2017 09:50 AM

சமணம்: எழில் திரும்பிய இளவரசன்

சம்பாநகரை சிங்ரத் எனும் அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு கமல்பிரபா என்கிற மனைவியும் ஸ்ரீபால் எனும் அழகான மகனும் இருந்தார்கள். ஸ்ரீபாலன் ஐந்து வயதில் தந்தையை இழந்தான். அரசனின் தம்பி அஜித்சென் நாட்டைக் கவர்வதற்குத் திட்டமிட்டான். அதனை அறிந்த அரசி தன் மகனைப் பாதுகாக்க நாட்டிலிருந்து வெளியேறினாள். அஜித்சென் வீரர்களை அனுப்பி கமல்பிரபாவை அழைத்து வருமாறு கூறினான். வீரர்கள் தேடுவதை உணர்ந்த அரசி, தன் மகனைப் பாதுகாக்க விரும்பினாள். அதனால் தொழுநோயாளிகளைப் பார்த்த அவள், தன் மகனைப் பாதுகாக்க, அவர்களிடம் ஸ்ரீபாலனை ஒப்படைத்தாள்.

அவர்கள் ஸ்ரீபாலனை கண்ணும் கருத்துமாக வளர்த்தனர். நாளடைவில் இளைஞன் ஸ்ரீபாலனைத் தொழு நோய் தாக்கியது. அவர்கள் ஒரு நாள் உஜ்ஜயனி நகரத்திற்கு சென்றார்கள்.

அந்நாட்டின் அரசன் பிரஜபாலுக்கு ரூப்சுந்தரி என்கிற அரசி. அவர்களுக்கு அழகும் அறிவுமுடைய சுர்சுந்தரி, மயனசுந்தரி எனும் மகள்கள் இருந்தனர். அரசன் பிரஜிபால் மகள்களுக்கு நல்ல கல்வி அறிவு புகட்டினான்.

ஒரு நாள் பிரஜிபால் தன் மகள்களை அரசவைக்கு அழைத்தான். சுர்சுந்தரியிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டான். அனைத்துக் கேள்விகளுக்கும் அவள் பதிலளித்தாள்.அரசன் மிகவும் மகிழ்ந்து இத்திறமைக்கு என்ன காரணம் என்றான். அதற்கு சுர்சுந்தரி, “என் எல்லா புகழுக்கும் தந்தையே” என்றாள். மன்னன் மகிழ்ந்தான்.

பின் பிரஜிபால் மயனசுந்தரியை அழைத்தான்.தந்தையின் வினாக்களுக்கு அவளும் விடையளித்தாள். இறுதியாக இத்திறனுக்கு என்ன காரணம் என வினவினான். மயன சுந்தரி சமணத் தத்துவங்களை ஆழ்ந்து படித்தவள் அதனால்,“தந்தையே,அவையில் முந்தி இருக்க, தங்களின் உதவி என் புண்ணிய வினைகளால் ஏற்பட்டது.நான் தங்களின் மகளாகப் பிறந்ததும் அவ்வினையே” என்றாள்.

மகளைத் தண்டித்த தந்தை

ஆனால் தந்தைதான் காரணம் என்று மகள் கூறவில்லையே எனக் கோபம் அடைந்தான். எனவே மகளுக்குப் பாடம் புகட்ட எண்ணினான். அரசன் தன் ஆட்களை அழைத்து மோசமான ஒரு குரூபியைக் கொண்டுவர ஆணையிட்டான். அவர்கள் ஸ்ரீபாலனைக் கூட்டி வந்தார்கள். அரசன் மயனசுந்தரியை ஸ்ரீபாலனுக்கு திருமணம் செய்து, “வினைப் பயனை அனுபவி” என்றான். சுர்சுந்தரியை ஒரு இளவரசனுக்குத் திருமணம் செய்வித்தான்.

மயனசுந்தரி கணவனை நன்கு கவனித்துக் கொண்டாள். இருவரும் கோயிலுக்குச் சென்று வருவார்கள். ஒருநாள் அவர்கள் முனிசந்திர ஆச்சாரியர் எனும் சமண முனிவரிடம் சென்றார்கள். தங்களின் இன்னல்களைப் பற்றி அவரிடம் கூறினார்கள்.முனிவர் அவர்களை ‘அயம்பில்’தவத்தை ஏற்க கூறினார். அதன்படி ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒன்பது நாட்கள் சாத்வீக உணவு உண்டு தவமும் தியானமும் செய்தனர். அதுபோல ஒன்பது முறை செய்தனர்.

ஸ்ரீபாலனின் நோய் நீங்கி முன்போல் அழகனாக ஆனான். அரசி கோயிலில் மகளையும் மருமகனையும் கண்டு உண்மை அறிந்து பூரித்தாள். கணவனிடம் சென்று கூறினாள். அரசனும் தவறை உணர்ந்து, அவர்களை அழைத்துக் கொண்டான்.

பின்னர் ஸ்ரீபாலன், பெரும் படையை திரட்டி சென்று தன் சம்பாநகரை கைப்பற்றி அதன் மன்னன் ஆனான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x