Published : 25 Aug 2016 12:09 PM
Last Updated : 25 Aug 2016 12:09 PM

தெய்வத்தின் குரல்: உயிர் அனைத்துக்கும் திருப்தி

தேவதைகளை உத்தேசித்த யாகங்கள், பித்ருக்களை உத்தேசித்த தர்ப்பணம், இவற்றை விடாமல் செய்ய வேண்டும். இவற்றோடு தெய்வத்தை உத்தேசித்த பூஜை, அதிதிகளை உத்தேசித்து அன்னமிடுதல், சகல ஜீவராசிகளையும் உத்தேசித்து வைச்வதேயம் இவற்றையும் நம் முன்னோர்கள் செய்து வந்தனர்.

நீங்கள் இவற்றைச் செய்கிறீர்களோ இல்லையோ காதினாலாவது இவற்றைப் பற்றிக் கேட்டால் நல்லது. எத்தனையோ படித்திருக்கிறீர்கள். எந்தெந்த தேசத்து சரித்திரங்களையோ தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். நம் தேசத்தில் யுகாந்தரமாக இருந்து வந்த தர்மங்களையும், அவற்றின் பெயர்களையுமாவது, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே இதைச் சொல்கிறேன். ‘வைச்வதேவம்' என்பது இவற்றில் ஒன்று. அது என்ன என்று சொல்கிறேன்.

நமக்கு இந்த உடம்பு இருப்பதால் எத்தனை ஜீவராசிகளுக்கு எத்தனை உபத்திரவம் விளைவிக்கின்றோம்? நம் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதாக பெருமையாக எண்ணுகிறோம். ஆனால் யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு வீடும் ஒரு கசாப்புக் கடையாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. ‘ஒரு கசாப்புக் கடை அல்ல. ஐந்து கசாப்புக் கடைகள்' என்கிறது தர்ம சாஸ்திரம்.

அந்த ஐந்து என்ன?

அரிவாள்மனை (கண்டினீ) ஒரு கசாப்புக் கடை. அதில்தானே காய்கறிகளை நறுக்குகிறோம்? காய்கறிகளும் உயிருள்ளனவைதாம். அவற்றை வதைக்குமிடம் ஒரு கசாப்புக் கடை.

இரண்டாவது அம்மி, எந்திரம், உரல், நெல் மிஷின் - இத்யாதி (பேஷணீ). இவற்றில்தான் கருணையே இல்லாமல் தானியங்களை அரைக்கிறோம்.

இங்கே மாமிச போஜனக்காரர்கள் எழுப்புகிற ஒரு ஆட்சேபணைக்குப் பதில் சொல்ல வேண்டும். “நாங்கள் சாப்பிடுகிற ஆடு, மாடு, கோழிகள் மாதிரி நீங்கள் சாப்பிடுகிற காய்கறி, தான்யாதிகளுக்கும் உயிர் இருக்கத்தானே செய்கிறது” என்று இவர்கள் சைவ போஜனக்காரர்களைக் கேட்கிறார்கள்.

வாஸ்தவம். ஆனால் இந்த இரு உணவு முறைகளிடையே அடியோடு வித்தியாசமில்லாவிட்டாலும் (difference of kind) ஹிம்ஸை அம்ஸத்தில் வித்தியாசம் (difference in degree) இருக்கத்தான் செய்கிறது. தாவரங்களுக்கு உயிரும் உணர்ச்சியும் இருப்பது வாஸ்தவம்தான் என்றாலும், மனுஷ்யர்களுக்கும் மிருக பட்சிகளுக்கும் உள்ள அசைவுக்கு (degree) அவற்றுக்கு ‘வலி ’ (pain) என்ற உணர்ச்சி கிடையாது.

இதை சயன்ஸ்படி அளவு எடுத்துக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுவும் தவிர, அநேகமாக, கீரை மாதிரி சிலவற்றைத்தான் வேரோடு எடுத்துச் சாப்பிடுகிறோமே தவிர, மற்றச் செடிகளின் உயிரை வதைக்காமல்தான் அதிலிருந்து காய்கறிகளை மட்டும் பறித்துக் கொள்கிறோம். இப்படிப் பறிப்பது நமக்கு தலைமயிரை அல்லது நகத்தை கத்தரிக்கிற மாதிரி. அந்தச் செடிகளுக்கு ரொம்பக் குறைச்சலாகத்தான் வலியுண்டாகும்.

இற்றுப் போயிருக்கிற பழத்தை மட்டும் புசிப்பதாலோ, இந்த அளவுக்குக்கூட தாவர வர்க்கத்திற்கு துன்பம் இல்லை. பயிர்கள் நன்றாக முற்றிச் சாய்த்த பிற்பாடுதான் அவற்றை அடித்துத் தானியங்களை எடுத்துக் கொள்கிறோம்.

தாவர உணவு மாமிச போஜனத்தைவிட உயர்ந்தது என்று இன்னோர் விதத்திலும் மாம்ச போஜனக்கார்களுக்குப் புரிய வைத்துவிடலாம். இப்போது சில தினுஸான மாம்ஸாதிகளைத்தான் இவர்கள் சாப்பிடுகிறார்கள். மாட்டு மாம்ஸம் சாப்பிடலாமே தவிர, குதிரை மாம்ஸம் சாப்பிட்டால் நிஷித்தம் (இழுக்கு) என்கிறார்கள்.

உலக யுத்தத்தின்போது ஒரு சந்தர்ப்பத்தில் சேனா வீரர்களுக்கு குதிரை மாமிஸம் தரலாமா என்ற கேள்வி வந்தபோது, அதை நான்வெஜிடேரியன்காரர்களே ரொம்பக் கேவலம் என்று எதிர்த்தார்கள். இதே மாதிரி இவர்கள் மிருக, பட்சிகள், மத்ஸ்யம் முதலானதுகளை சாப்பிடுவது நாகரீகம்தான் என்று சொல்கிறபோதே ஆப்பிரிக்காவில் ஏதோ காட்டு ஜனங்கள் நர மாமிஸம் சாப்பிடுகிறார்கள் என்றால், இவர்கள் அதை அநாகரீகம், காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லி நரமாம்ஸ பக்ஷிணிகள் (cannibals) என்று திட்டுகிறார்கள்.

‘நாங்கள் சாப்பிடும் வஸ்துக்களைப் போல நீங்கள் சாப்பிடும் தான்யங்களுக்கு உயிர் இருக்கத்தானே செய்கிறது?' என்று இவர்கள் நம்மிடம் (சைவ போஜனக்காரர்களிடம்) கேட்கிறபோது, நாம் பதிலுக்கு, “ஆமாம்! ஆனால் அதே மாதிரி ஜீவஹிம்ஸை என்று வருகிறபோது எல்லா உயிர்களும் ஒன்றுதானே; நீங்கள் ஏன் மநுஷ்யர்களைப் பிடித்துத் தின்னாமல், மனித வர்கத்துக்கும் மிருக வர்கத்துக்கும் வித்தியாசம் பாராட்டுகிறீர்கள்? அதே மாதிரி தான்; நாங்கள் மிருக வர்கத்துக்கும் தாவரங்களுக்கும் வித்தியாசம் பாராட்டுகிறோம்.

மாம்ஸாதிகளைச் சாப்பிடாமல், சாக போஜனமே பண்ணுவது ஸத்வ குண அபிவிருத்திக்கும் அநுகூலமாக இருக்கிறது” என்று சொல்ல வேண்டும். தவிர்க்க முடியாமல் நாம் உயிர் வாழ்வதற்காக இப்படி கண்டிணீ பேஷணீ என்ற கசாப்பு யந்திரங்களை வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மூன்றாவது கசாப்புக்கடை அடுப்பு (சுள்ளி). நெருப்பிலே பல பூச்சிகள் விழுந்து சாகின்றன. ஓர் இடத்தில் நெருப்பைப் போடுகிறோம். அங்கே ஓர் எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும். நெருப்புப் பட்டவுடன் அது பொசுங்கிப் போகிறது. இப்படியே குடத்தை ஓரிடத்தில் வைக்கிறோம். கீழே எறும்போ வேறு ஏதாவது பூச்சியோ இருந்தால் நசுங்கிப் போகிறது.

குடம் முதலிய பாத்திரங்களில் ஈரம் இருப்பதால் வெயில் காலத்தில் எறும்பு முதலியன அதை மொய்த்துக் கொள்கின்றன. அவற்றை நாம் கொல்ல நேருகிறது. இதனால் ‘ஜலகும்ப'த்தையும் ஒரு கசாப்புக் கடையாக வைத்தார்கள். கடைசியில் ‘உபஸ்கரம்' என்பது ஒரு கசாப்புக் கடை. ‘உபஸ்கரம்' என்றால் துடைப்பக்கட்டை. பெருக்கும்போது எத்தனை ஜீவராசிகளை வதைக்கிறோம்? இப்படி ஐந்து கசாப்பு மெஷின்கள் நம் வீடுகளில் இருக்கின்றன.

ஆனால் இதெல்லாம் நம்மால் தவிர்க்க முடியாத விஷயங்கள். நாம் வேண்டுமென்று இவற்றைக் கொல்லவில்லை. எனவே நம்மை மீறிச் செய்கிற இந்தத் தோஷங்களுக்குப் பிராயச்சித்தம் உண்டு. அப்படிச் செய்கிற பிராயச்சித்தமே ‘வைசுவதேவம்' என்பது.

‘நம்மால் ஹிம்சைக்கு ஆளான ஜீவராசிகளுக்கெல்லாம் நல்ல கதி கிடைக்க வேண்டும்; நம்மை பகவான் மன்னிக்க வேண்டும்' என்ற எண்ணத்துடன் எல்லா உயிர்களின் திருப்திக்காகவும் பலி கொடுக்கப்படுகிறது. இந்த விசுவத்தில் எவ்வளவு பிராணிகள் உண்டோ, நாய், காக்கை, சமூகப்பிரஷ்டன் உள்பட எல்லார்க்கும் எல்லாவற்றுக்கும் வைசுவதேவத்தில் பலி உண்டு. வைசுவதேவம் செய்தால் நாம் செய்கிற பல தோஷங்கள் விலகும். பல உயிர்களுக்கு ஆகாரம் கிடைக்கும்.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x