

மியூசிக் அகாடமியின் 90வது ஆண்டு இசை விழா நிகழ்ச்சிகளில், மாலையில் நடக்கும் இன்னிசை நிகழ்ச்சிகளுக்குச் சற்றும் குறைவில்லாத கவனத்தைப் பெறுபவை காலையில் நடக்கும் ஆய்வரங்க நிகழ்ச்சிகள். இந்த ஆண்டு பல்வேறு தலைப்புகளில் நடந்த கருத்தரங்குகளில், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் அரையர் சேவை குறித்து சொற்பொழிவாற்றிய மதுசூதனன் கலைச்செல்வன் சிறந்த கருத்தரங்க சொற்பொழிவாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
திவ்ய தேச யாத்ரீகர்
106 திவ்ய தேசங்களுக்கும், 200 பாடல் பெற்ற சைவத் தலங்களுக்கும் சென்று தரிசித்து வந்திருப்பவர் மதுசூதனன் கலைச்செல்வன். கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியில் இருப்பவர். சர்தம் யாத்ராவின் மூலம் அயோத்தியா, துவாரகா, வைஷ்ணவிதேவி கோயில்களுக்குச் சென்று வந்திருப்பவர்.
வைணவ சம்பிரதாயத்தின் அரையர் சேவையையும் நிகழ்த்துகிறார் மதுசூதனன். கட்டிடக் கலை இயல் வல்லுநரான மதுசூதனன் தற்போது சைவக் கோயில் நகரங்கள் என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வை நடத்திவருகிறார்.
அரையர் சேவை கலைஞர்
“கடந்த 2013-ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையில் அரையர் சேவை குறித்து முதன்முதலாகப் பேசினேன். கடந்த 2009-ல் அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தின் பமோனா நகரிலிருக்கும் ஒரு ஆலயத்தில் அரையர் சேவை நிகழ்ச்சியை நடத்தினேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே, ஸ்ரீ ரங்கம் கோயிலின் கட்டிடக் கலை நுட்பத்தை அணுஅணுவாக ரசிப்பதற்கு அடிக்கடி அங்கே போவேன். அப்போது அங்கு நடத்தப்படும் அரையர் சேவையின்பால் ஏற்பட்ட நெருக்கத்தினால் அந்தக் கலையைத் தெரிந்துகொண்டேன்” என்னும் மதுசூதனுக்கு, ஸ்ரீ வில்லிபுத்தூர் மற்றும் ஆழ்வார் திருநகரியில் நிகழ்த்தப்படும் அரையர் சேவை பாணிகளும் தெரியுமாம்.
சிதம்பரம் கோயில் வரைபடம்
தஞ்சாவூர் பெரிய கோயிலின் ராஜராஜ கோபுரத்தின் வரைபடம் தயாரிக்கும் பணியும், சாத்தன்சேரியிலிருக்கும் நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்ட விட்டல கிருஷ்ணன் கோயிலைப் புதுப்பிக்கும் பணியும் செய்தேன்.
சிதம்பரம் கோயிலுக்கு வரைபடம் இல்லாமல் இருந்தது. கடந்த ஆண்டு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்ட அந்தக் கோயிலின் வரைபடத்தைத் தயாரித்துக் கொடுத்தேன். சித்சபையிலும், 100 கால் மண்டபத்தைப் புதுப்பிக்கவும், பாதுகாக்கவும் சில யோசனைகளை அளித்துள்ளேன்.
ஆன்மிக நடைப்பயணம்
ஹெரிடேஜ் ரெஸ்டோரேஷன் டாகுமென்டேஷன் என்னும் திட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படவேண்டிய கட்டிடங்களை தெரிவு செய்யும் நடைப்பயணத்தையும் மேற்கொள்கிறோம். இந்தியாவில் 14 நகரங்கள் இந்த திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் காஞ்சி நகரமும் ஒன்று. காஞ்சியில் கட்டிடக் கலை படிக்கும் 25 மாணவர்களுடன் இந்த நடைப்பயணத்தை சமீபத்தில் நடத்தி, அங்கு பாதுகாக்கப்பட வேண்டிய கோயில்கள், மடங்கள், கட்டிடங்கள் குறித்த அறிக்கையை அளித்திருக்கிறேன். கல்வெட்டில் இருக்கும் எழுத்துகளை படிப்பதற்கும் பயிற்சி பெற்றிருக்கிறேன். ஃபிரஸ்கோ மற்றும் கோட்வானா பாணி ஓவியங்கள் வரைவதிலும் எனக்கு ஈடுபாடு உண்டு.
இஸ்லாம்களின் புனித நூலான குரான் படித்திருக்கிறேன். தொழுகை, ரமலான் மாதத்தில் நோன்புகூட இருப்பேன். எல்லா மதங்களும் சொல்வது ஒன்றுதான் என்கிறார் மதுசூதனன்.
ஆலய ரகசியங்கள்
சிதம்பரம் ஆகாய க்ஷேத்திரம். கோயிலில் 4 பிராகாரங்கள்தான் இருக்கும். ஆனால் 5-வதாக ஒரு பிராகாரம் இருக்கிறது. அதை மூடியே வைத்திருப்பார்கள். கோயிலின் ஒவ்வொரு பிராகாரத்திலும் ஐம்பெரும் பூதங்களின் துணை கொண்டே அமைக்கப்பட்டிருக்கும். தெருவிலிருந்து கோயிலுக்குள் நுழையும்போது மண் நிரப்பப்பட்டிருக்கும் (பூமி). 4வது பிராகாரத்தில் சிவகங்கா தீர்த்தக் குளம் (நீர்) இருக்கும். 3-வது பிராகாரத்தில் மடப்பள்ளி, யாகசாலை (அக்னி) இருக்கும். இதற்கு மேலாக உயர்த்தப்பட்டு சிற்சபை (காற்று) இருக்கும். இது மிகவும் விசேஷமான கட்டிட அமைப்பைக் கொண்டது.
சிதம்பரம் ரகசியம் போன்றே, திருவாரூர் தியாகராசர் சுவாமி கோயிலிலும் தியாகராஜ ரகசியம் இருக்கிறது. அதைக் குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறேன் என்கிறார் மதுசூதனன்.