Last Updated : 14 Jul, 2016 11:53 AM

 

Published : 14 Jul 2016 11:53 AM
Last Updated : 14 Jul 2016 11:53 AM

சௌந்தர்யலஹரி உருவான கதை

ஆதி சங்கரர் விஜய யாத்திரை செய்து கொண்டு வரும்பொழுது கயிலாயத்திற்கும் சென்றார். கயிலாயத்தில் அவர் மௌனமான நிலையில் தியானம் செய்து கொண்டிருந்த சமயம் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் தங்களுக்குள் “கீழே பூலோகத்திலிருந்து நமது கயிலாயத்திற்கு ஒரு குழந்தை வந்திருக்கிறது. இந்த இளம் வயது பாலகனைப் பார்த்தால் ஏதாவது நாம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்று பேசிக்கொண்டார்கள். இவர்கள் பேசிக்கொண்டிருந்தது ஆதி சங்கரருக்குத் தெரியாது. திடீரென்று இரண்டு சுவடிகளைப் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் மேலே இருந்து ஆதி சங்கரரிடம் தூக்கி எறிந்தனர்.

அவரது இரு கைகளிலும் சுவடிகள் பட்டன. ஆனால் ஒன்றைத்தான் அவர் பிடித்தார். மற்றொன்றை நந்தி பகவான் பிடுங்கி விட்டார். நந்தியின் ஸ்பரிசம் பட்டதும் சங்கரர் கண்ணைத் திறந்து பார்த்தார். கையில் ஒரு சுவடிதான் இருந்தது. இன்னொன்றைக் காணவில்லை. சங்கரர் மனம் நொந்து அழுது மேலே பார்த்தபோது, அங்கு பார்வதி, பரமேஸ்வரரின் தரிசனம் கிடைக்கப் பெற்றார்.

அம்பாளை நோக்கி “அம்மா! இது என்ன லீலை. ஒரு சுவடி மட்டுமே எனக்குக் கிடைத்தது. இன்னொன்றை நந்தி எடுத்துக் கொண்டுவிட்டார். எனக்குக் கிடைத்த பொக்கிஷத்தைத் தவற விட்டு விட்டேனே’' என்று அழுது புலம்பினார்.

அச்சமயம் அம்பாள், ‘‘சங்கரா! நீ அழாதே. என்னைப் பார்த்து தரிசனம் செய்து சிரம் முதல் பாதம் வரை நீ எழுது. நான் உனக்கு எல்லா இடங்களிலும் காட்சி கொடுப்பேன். அதனால் கவலையின்றி கிடைத்ததை வைத்துக்கொள்'’ என்றாள். இதுவே சௌந்தர்யலஹரி பிறந்த கதை.

சௌந்தர்யம் என்றால் அழகு. லஹரி என்றால் அலைகள் நூறு பாடல்களிலும் அன்னையின் அழகும், அருளும் அற்புதமாகத் தாண்டவமாடுகின்றன. சௌந்தர்யலஹரியின் 99-ம் ஸ்லோகத்தின்படி, இதனைப் பாராயணம் செய்பவர்களுக்கு பார்வதி தேவியின் எல்லையில்லா அருளோடு, சரஸ்வதி கடாக்ஷமும், லக்ஷ்மி கடாக்ஷமும் கிட்டும் என்பதை அறியலாம்.

ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நாமும் சௌந்தர்யலஹரியைச் சொல்லி தேவியின் அருள் பெற்று நலமாக வாழ்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x