Last Updated : 20 Sep, 2013 03:19 PM

 

Published : 20 Sep 2013 03:19 PM
Last Updated : 20 Sep 2013 03:19 PM

முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்

புதுச்சேரி ரயில்வே நிலைய வாயில் அருகே உள்ள சாலைக்கு எதிரே கம்பீரமாக அமைந்துள்ளது கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில். அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலில் வள்ளி, தெய்வானை மற்றும் உடனுறை கௌசிக பாலசுப்பிரமணியருக்கு சந்நதிகள் உள்ளன. இக்கோயிலில் அனைத்து மதத்தி னரும் வழிபடுகின்றனர்.

இக்கோயிலைக் கட்டியவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முகமது கௌஸ். அவரது தம்பி முகம்மது அலியும், மகன் முகம்மது காதரும் தற்போது கோயில் நிர்வாகிகளாக உள்ளனர்.

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட முகமது கௌஸ் குடும்பத்தினர், 1940-களில் புதுச்சேரியில் குடியேறினர். சிறுவயது முதல், முகமது கௌஸ் முருகனை வழிபட்டு வந்தார்.

1969-ல் துளசி முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை அவர் நடத்தினார்.

அன்றைய தினம் அவரது தந்தை மரணமடைந்தாலும், திட்டமிட்டபடி கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நடத்தி முடித்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, தன் இறைப்பணியைத் தொடர்ந்தார்.

மாரியம்மன் கோயில் அருகிலேயே முருகன் கோயில் கட்ட விரும்பிய அவர், தனது சேமிப்பில் இருந்த ரூ.2 லட்சத்தை வைத்து கட்டுமான பணிகளை தொடங்கினார்.1970-ல் துணைநிலை ஆளுநராக இருந்த ஜாட்டி, மேயர் எதுவர் குபேர் ஆகியோர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினர்.

பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர், 1977ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஒருமுறை இக்கோயிலுக்கு வருகை தந்த காஞ்சி சாமிகள், கௌசிக முருகன் கோயில் என்று இக்கோயிலுக்கு பெயரிட்டார். கடந்த 2003ல் முகமது கௌஸ் மறைந்த பின், அவரது சகோதரர் மற்றும் மகன் ஆகியோர் இக்கோயிலை நிர்வகிக்கின்றனர்.

அனைத்து பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன. மதத்தின் பெயரால் மனிதர்களுக்கு இடையே பிளவு ஏற்படுவதைத் தடுப்பதுடன், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் விதமாக இக்கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x