

க்ரேதா யுகத்தில் ஒளிப்பிழம்பான நெருப்பாகவும், த்ரேதா யுகத்தில் ரத்தினமாகவும், த்வாபர யுகத்தில் தங்கமாகவும் கலியுகத்தில் பச்சைக்கல் மரகதமாகவும் திகழ்வதாக இந்த இடம் சொல்லப்படுகிறது. இது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று. திருவண்ணாமலையின் நடு நாயகமாக வீற்றிருக்கும் அபீத குசலாம்பாள் உடனுறை அருணாசலேஸ்வரர் ஆலயம் ஒரு குறிப்பிட்ட மன்னர் பரம்பரையினாலோ ஒரே மன்னராலோ உருவாக்கப்பட்ட கோவில் அல்ல. இந்தக் கோவிலின் பரப்பளவு 25 ஏக்கர். இங்குள்ள ராஜகோபுரம் 11 அடுக்குகளைக் கொண்டது, உயரம் 217 அடி. அருணாசல மலை இந்தக் கோபுரத்தின் பின்னணியாக விளங்குகிறது.
கோவிலின் காலம்
ஒரு கட்டுமானம் உள்ள இடத்தில் கண்டெடுக்கப்படும் கல்வெட்டுக்களில் உள்ள விவரங்களைக் கொண்டு அது உருவான காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் நிர்ணயிப்பார்கள். அந்த வகையில் இந்தக் கோவில் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. ஆனால் சைவப் பெருந்தகைகளான அப்பராலும், திருஞான சம்பந்தராலும் இந்த புண்ணிய ஸ்தலம் பாடப்பெற்றுள்ளது என்பதை ஆதாரமாக வைத்து நோக்கினால், இநதக் கோவில் 7ஆம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கக்கூடும் என்றும் கணிக்கலாம்.
கோயிலும் கலையும்
சோழ, பாண்டிய, பல்லவ, ஹோய்சால, விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் இந்தக் கோவிலுக்குத் தங்களின் பாரம்பரியத்தின் காணிக்கையை, சிலைகளை வடிப்பதின் மூலமாகவும், கோபுரங்களை அமைக்கும் முறை யிலும், அர்ப்பணித்துள்ளனர். வான் நோக்கிச் செல்லும் தூண்க ளில் தென்படும் ஓவியங்கள், கணக்கி லடங்காத நாட்டிய முத்திரைகள், நாட்டியமாடும் விநாயகர், பெரும் கண்களுடன் காணும் வீரபத்திரர், ‘ஓசைப்படாமல் செதுக்கப்பட்ட’ விஜயநகர சாம்ராஜ்யத்தின் குறியீடு, சிவபெருமான் ரிஷபத்தின் மீது ஏற முயற்சிக்கும் சிலை, பிரம்மாவின் சிலை, ஏராளமான நந்திகள், பிக்ஷாடனமூர்த்தி, ராமரோ என்று சந்தேகிக்கும் விதம் அமைக்கப்பட்டுள்ள சிவபிரான், எண்ணிலடங்கா சிவகணங்கள் என நேர்த்தி மிகுந்த கலை வடிவங்கள் இங்கு நிரம்பிக் கிடக்கின்றன. அங்குள்ள பேரழகு வடிவங்களைக் காணக் காண, உள்ளே இருக்கும் கடவுளே இங்கெல்லாம் வியாபித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
நாட்டியச் சிற்பங்கள்
நாட்டியத்தைச் சிதம்பரத்துடனேயே இணத்துப் பார்க்கும் நமக்கு, திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள நாட்டிய முத்திரைகள் ஆச்சரியம் தரலாம். பரத நாட்டியத்தின் 108 கரணங்களும் அசரவைக்கும் விதத்தில் இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளன. பரத ரிஷி நாட்டிய சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள கரணங்கள் இவை. கோபுரத்தின் மேற்புறம் கஜலக்ஷ்மி அமர்ந்திருக்கிறார். குத்து விளக்கும், சாமரம் வீசும் தாரிணியும் இன்னும் பல நுண்ணிய வேலைப்பாடுகளும் அங்கே காணக் கிடைக்கின்றன. இவற்றை எல்லாம் திறம்பட அமைத்த சிற்பி, இவ்வடிவங்களை உருவாக்கியபொழுது என்ன பாடுபட்டிருப்பார்? அவரது கண்களிலும் முகத்திலும் அல்லவா புழுதி வந்து விழுந்திருக்கும். அந்த பெயர் தெரியாத கலைஞர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
(டாக்டர் சித்ரா மாதவன் சரித்திர ஆய்வாளர். இவர் சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள அருணா சலேஸ்வரர் கோவில் குறித்து சென்னை தத்வலோகா அரங்கில் ஆற்றிய உரை. கேட்டு எழுதியவர்: எஸ்.சிவகுமார்)