

இந்து சமய நாட்காட்டியின் மாக மாதத்தின் வளர்பிறையில் வரும் 5, 7, 8-ம் நாட்கள் ஆன்மிகக் கலாச்சாரத்துடன் தொடர்புடையவை. இதில் 5-ம் நாள் வசந்த பஞ்சமியென்றும் 7-ம் நாள் ரதசப்தமி என்றும் 8ம் நாள் பீஷ்மாஷ்டமி என்றும் அழைக்கப்படுகின்றன. தமிழ் நாட்காட்டியில் தை-மாசி மாதத்தில் இவை அமைகின்றன. கல்விக்கும் கலைகளுக்கும் தலைவியாகவும் தாயாகவும் விளங்கும் அன்னை கலைவாணியின் பிறந்தநாளாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது.
கலைமகளை நினைத்து விழா எடுக்கும் இத்திருநாள் வட இந்தியாவில் மிகவும் பிரசித்திபெற்றது. ஏனோ தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நவராத்திரி ஆயுத பூஜையைத் தவிரக் கலைமகளுக்கென்று வேறு உகந்த திருநாட்களில்லை. இவ்வருடம் வசந்த பஞ்சமி தை மாதம் 19-ம் தேதி (1-2-2017) புதன்கிழமையன்று வந்தது.
வசந்த பஞ்சமியைப் பற்றிப் பல்வேறு புராண வரலாற்றுக் கதைகளும் செவிவழிச் செய்திகளும் வழங்கிவருகின்றன. பிரம்ம வைவர்த்த புராணத்தில் துவாபர யுகத்தில் கண்ணபெருமான் கலைவாணிக்கு வரமளித்தாகவும் அதன்படி வசந்த பஞ்சமியன்று உலகோர் அவளைப் பூசித்து வழிபடுவார்களெனவும் கூறப்பட்டுள்ளது.
பாமரனைக் கவிஞனாக்கிய வாணி
இன்னொரு கதைப்படி, கல்விச் செருக்கால் ஆணவம் கொண்ட ஒரு அரசகுமாரிக்கு அவளால் அவமானமுற்ற சில புலவர்கள் அவளைப் பழிதீர்க்கும் நோக்கில் வடமொழிப் புலவனான காளிதாசனை அவன் அடிமுட்டாளாக இருக்கும்போது வஞ்சகமாகத் திருமணம் முடித்துவைத்தனர். மணமான அன்றிரவே காளிதாசன் படித்தவனல்லன் எனத் தெரிந்து அரண்மனையை விட்டே விரட்டிவிட்டாள் அந்த அரசகுமாரி. காளிதாசனும் மனம் வெறுத்து சரசுவதி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயலும்போது கலைவாணி அவன்முன் தோன்றி பீஜ மந்திரத்தை அவன் நாவிலெழுதி மறைந்தாள். ஆற்றில் முழுகியெழுந்தவன் மகாகவி காளிதாசனாக மாறிய அந்நாளே வசந்த பஞ்சமி எனவும் கூறப்படுகிறது.
முனிவரின் கோபம்
மற்றுமொரு செய்திப்படி, முன்பொரு சமயம் பிரம்ம ரிஷியாகிய வசிட்டருடன் ஏற்பட்ட பகையில் ராஜரிஷியாகிய விசுவாமித்திரர் தான் உருவாக்கிய காயத்ரீ என்ற சாவித்ரியை அழைத்து நதியாகப் பெருவெள்ளமாக மாறி வசிட்டரை அடித்துச் சென்றுவிடும்படி சொல்ல அவள் அதனைச் செய்யாது விட்டாள். அதனால் கோபமுற்ற கௌசிகன் அந்த நதியை இரத்த ஆறாக மாற்றினார். பின்னர் சிவபெருமான் தலையிட்டு இரு முனிவர்களையும் சமாதானம் செய்ய கௌசிகரும் மீண்டும் ஆற்றில் நன்னீர் பெருக்கிப் புதுப்பித்ததன்றி சரசுவதீ என்றும் புதுப்பெயரிட்டார். சரஸ் என்ற வடமொழிச் சொல்லுக்கு நல்ல நீர்நிலை என்பது பொருளாகும். அந்நாளே வசந்த பஞ்சமி எனவும் வழக்குண்டு.
இங்ஙனம் அன்னை கலைவாணியுடன் தொடர்புடைய திருநாளாம் வசந்தபஞ்சமி என்பது உள்ளங்கை நெல்லியென விளங்கும். அது மட்டுமல்லாது வசந்த பஞ்சமியன்று காமதேவனாகிய மன்மதனுக்கு விழாயெடுக்கும் நாளாகவும் இந்தியாவின் சிலபகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
நம் ஆண்டாள்கூட தனது நாச்சியார் திருமொழியில்
தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐயநுண்மணற் கொண்டு தெருவணிந்து அழகினுக்கலங்கரித்து அனங்கதேவா !
உய்யவுமாங்கொலோ என்றுசொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே !
என்ற பாடலில் தைமாதம் முழுவதும் தரை கூட்டி விளக்கித் துடைத்தெடுத்து மண்டலமென்ற தெய்வ வரைபட இயந்திரத்தில் மன்மதனை ஆவாகனம் செய்து நுண்மணலாலான கோல மாவினால் தெருவெங்கும் திருக்கோலமிட்டு நோன்பிருந்து அழகுக்குத் தெய்வமான அனங்கன் என்னும் பெயர்பெற்ற மன்மதனை மாசி முதன்னாளில் தொழுவதாகப் பாடுகின்றாள்! தென்பாண்டி நாட்டிலும் பின்பற்றிய ஒரு திருவிழா தை-மாசி மாத வசந்தபஞ்சமி என்பதற்கு ஆண்டாளாகிய கோதை நாச்சியாரே சான்றாகிறார்!
வசந்த பஞ்சமி சிருங்காரத்துடன் தொடர்புடைய தென்பதால் ரதியும் மன்மதனும் வரப்போகும் வசந்த காலத்தை ஒரு தோழனாய் உருவகம் செய்து மூவராக உலாவரும் காலம் என்றூம் கருதப்படுகிறது.
இத்திருநாளின் கொண்டாட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அம்சங்கள் இணைந்திருக்கின்றன. வடஇந்தியாவில் கலைமகளுக்கு வெளிர்மஞ்சள் பட்டுடுத்தி மஞ்சள் நிறக் கடுகுப் பூக்களைக்கொண்டு புஷ்ப அலங்காரம் செய்து உலாக் கொண்டுசெல்கின்றனர். ஒரு கலசத்தில் கலைவாணியை ஆவாகனம் செய்து கணபதி, சூரியன், விஷ்ணு மற்றும் சிவனை ஆராதனை செய்கிறார்கள். பல்வேறு மஞ்சள் வண்ண உடையுடுத்தி ஆண்களும் பெண்களும் அணிவகுத்து ஆடுகிறார்கள். அதன் பின்னர் மஞ்சள் வர்ணப் பொடியைக் காற்றில் தூவி விளையாடி மகிழ்வார்கள். அன்னை கலைவாணிக்குப் பூசை மட்டுமின்றி ஒரு கலாச்சாரத் திருவிழாவாகவும் பரிணமிப்பதே இதன் சிறப்பு. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலைவாணி மீது பக்திப் பாடல்களும் இசைக்கப்படுகின்றன.
நேபாளத்தில், சரசுவதி தேவியின் ஆலயங்களில் நிறைய உணவு படைத்து பக்தர்களுக்கு (அன்னதானம் போல்) பரிமாறும்போது கலைவாணியும் உடனமர்ந்து உண்ணுவதாகக் கொள்கின்றனர். பல்வேறு உணவு வகைகள் ஒரே இடத்தில் சேருவதும் பல தரப்பட்டோர் அவற்றை ஒரே இடத்தில் அமர்ந்து உண்பதும் முக்கியமான சமூக நிகழ்வாக அமைகிறது. மேலும், எழுத்தறிவித்தல் என்ற அட்சராப்பியாசமும் சங்கீதம் பயிலும் புது மாணவர்க்கு முதல்பாடமும் தானியத்தில் எழுத்துக்களை எழுதும் நிகழ்வும் இந்த நாளில் நடத்தப்படுகின்றன. பழைய மாணவர்கள் தங்கள் எழுதுகோல்களைத் துடைத்துச் சுத்தம் செய்து மை நிரப்புவதுமுண்டு. ஆனால் அன்று யாரும் புத்தகத்தைப் புரட்டிப் படிப்பதில்லை! மஞ்சளாடையணிந்து குங்குமப்பூ சேர்த்த சர்க்கரைப் பொங்கலை உண்டும் மஞ்சள் நிற இனிப்பு வகைகள் பரிமாறியும் மகிழ்கின்றனர்.
வங்காளத்தில் எழுத்தறிவித்தல், அலங்கார ஆராதனை ஆகியவை முடிந்ததும் கலைவாணி சிலைகள் திருவீதி உலாக் கொண்டுசெல்லப்பட்டுக் கங்கையில் முழுக்காட்டப்பெறுகின்றன. வசந்த பஞ்சமிக்கென்று மஞ்சள், காவி வண்ணத்தில் இடையிடையே அடர்சிவப்பு வட்டம் அல்லது சதுரம் கொண்ட பிரத்யேக ஆடைகளும் தயாராகின்றன. காதல் ஜோடிகளும் மிகுந்த சுவாரசியத்துடன் இதில் கலந்துகொண்டு கொண்டாடுவதுண்டு. பஞ்சாப் மாநிலத்தில் வசந்த பஞ்சமியன்று வெள்ளை, மஞ்சள் வண்ணக் காற்றாடிகளை வானில் பறக்கவிட்டு விளையாடுவது வழக்கம்.
இப்படி இந்தியா முழுவதும் கொண்டாடும் வசந்த பஞ்சமியின் சிறப்பினை ஆண்டாள் பாடியிருந்தும் தமிழகம் மறந்ததேனோ?