Last Updated : 27 Mar, 2014 09:16 AM

 

Published : 27 Mar 2014 09:16 AM
Last Updated : 27 Mar 2014 09:16 AM

ராமன் எத்தனை ராமன்

ராமபிரான் ஒருமுறை கங்கையில் குளிக்கச் செல்லும்போது தன் தோளில் இருந்த அம்பறாத் துணியைக் கழற்றி வைத்தார் . அதில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது . அதைப் படுக்க வைத்துச் செல்வது வீரனுக்கு அழகல்ல எனத் தரையில் குத்திவிட்டுச் சென்றார்.

குளித்து முடித்துவிட்டுத் திரும்ப அந்த அம்பைத் தரையிலிருந்து பிடுங்கியபோது ஒரு தவளை ரத்தம் வெளியேற உயிருக்குத் துடித்துக்கொண்டு அதன் நுனியில் ஒட்டி இருந்தது. அதைக் கண்ட ராமபிரான் நெஞ்சம் பதைபதைத்து.

“தவளையே! நான் உன்னை அம்பால் குத்தியபோது நீ குரல் கொடுத்திருக்கலாமே” என்று கலங்கினார் .

“எம்பெருமானே ! எனக்குப் பிறர் தீமை செய்தால் என்னைக் காப்பாற்றிக்கொள்ள ‘ராமா! ராமா!’ என அழைப்பேன் . ஆனால், ராமனாலேயே எனக்கு ஆபத்து என்னும்போது யாரைக் கூவி அழைப்பேன்?” என்றது தவளை.

மீனும் தேனும்

ராமன் காட்டுக்கு வந்ததும் முதலில் அவரைச் சந்தித்தது குகன். வேடனான குகனும், அரச குமாரரான ராமனும் முதல் சந்திப்பிலேயே ஆத்மார்த்தமான உறவு கொண்டார்கள். அந்தச் சந்திப்பின்போது குகன் தேனையும், மீனையும் ராமனுக்குக் கொடுத்தான் .

ராமன் கிளம்பிச் சென்ற பிறகு பிறர் குகனிடம் இதைப் பற்றி விசாரித்தார்கள்: “ராஜகுமாரனான ராமருக்கு நீ மீனையும், தேனையும் கொடுத்ததில் என்ன பெருமை? எத்தனையோ உயர்ந்த விருந்தை உண்டவராயிறே ராமர்?” என்று கேட்டார்கள்.

அதற்குக் குகன், “நான் கொடுத்த இந்தப் பொருட்களில் மற்றவர்களுக்குப் புரியாத உட்பொருள் உண்டு. அதைப் புரிந்து ஏற்றுக்கொண்டார் ராமர்” என்றான் .

“என்ன?” என்று மற்றவர்கள் கேட்க, “தேன் உயர்ந்த மலையில் உள்ள மரத்தின் உச்சியில் கிடைப்பது. மீன் கடலின் ஆழத்தில் கிடைப்பது. எங்கள் நட்பு கடலின் ஆழம் போன்று இதய ஆழத்தில் இடம் பெற்றால் அது மலையைப் போல் உயர்ந்ததாக இருக்கும் என்பதே உட்பொருள்” என்று குகன் கூறினான் .

இதைவிட ஆழமில்லை என்றும் இதைவிட உயர்ந்ததில்லை என்றும் போற்றும்படி அமைவது நட்பு என்பதைக் கம்பன் குகனையும் ராமனையும் வைத்துக் காட்டுகிறார்.

பேச்சில் தெரியும் பண்பு

ராமனைப் பற்றிக் கூறும்போது, பூர்வ பாஷிண:, மித பாஷிண:, ம்ருது பாஷிண: என்று சொல்கிறார்கள்.

பூர்வ பாஷிண என்றால் முதலில் வணக்கம் கூறுவது. யாரைச் சந்தித்தாலும் ராமன்தான் முதலில் வணக்கம் சொல்லுவான். தன்னைவிடக் கீழோராயினும் ராமனே முதலில் சென்று பேசுவான்.

மித பாஷிண என்றால் குறைவாகப் பேசுதல். ராமன் கொஞ்சம்தான் பேசுவான். மற்றவர்கள் பேசுவதை அதிகம் கேட்பான்.

ம்ருது பாஷிண என்றால் மென்மையாகப் பேசுதல். ராமன் எப்போது பேசினாலும் மிருதுவாகவே இனிமையாகவே பேசுவான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x