Published : 30 Mar 2017 10:25 am

Updated : 16 Jun 2017 14:09 pm

 

Published : 30 Mar 2017 10:25 AM
Last Updated : 16 Jun 2017 02:09 PM

ஆன்மிக நாடகம்: ஜெயதேவரின் வாழ்க்கை

தமிழ் நாடகங்கள் , ஏதோ ஒரு சில குழுவினரைத் தவிர, முன் போல் நடத்தப்படுவதில்லை.இதற்குப் பல காரணங்களை முன் வைத்தாலும், முக்கியக் காரணம், மாற்று ஊடகங்களின் வரவால் ரசிகர்கள் திரளாக நாடக அரங்கிற்கு வருவது குறைந்துவிட்டது என்பதுதான்.நகைச்சுவை நாடகங்களுக்கு புராண நாடகங்களை ஆர்.எஸ்.மனோகருக்குப் பின் காண்பதே அரிதாகிவிட்ட வேளையில் பாம்பே ஞானம் அவரகளின் மஹாலக்ஷ்மி பெண்கள் நாடகக் குழுவின் புதிய வெளியீடான பக்த ஜெயதேவரைப் பற்றிய நாடகம் பாலைவனச்சோலை எனக் கூறலாம்.

நீண்ட ஆராய்ச்சி மேற்கொண்டு, ஜெயதேவர் வாழ்ந்த ஒடிஷா மாநிலத்திற்குச் சென்றும், பல பண்டிதர்களின் ஆலோசனைகளையும் பின்பற்றியே இந்நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் பாம்பே ஞானம். இந்நாடகம் நடைபெற்ற இடங்களில் எல்லாம் அரங்கம் நிரம்பி வழிந்ததே அதன் சிறப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு. 12-ம் நூற்றாண்டில் கிருஷ்ண பக்தியில் தோய்ந்து வாழ்ந்த மகான் ஜெயதேவர். அவர் இயற்றிய 24 அஷ்டபதிகள் இன்றளவும் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகளின் பத்ததியில் தவறாது இடம் பெற்று வருகின்றன்.


எட்டுப் பத்திகளைக் கொண்ட இப்பாடல்கள் அஷ்டபதி என்று பிரபலமாகத் திகழ்ந்து வருகின்றன. பாம்பே ஞானம் நாடகமாக்கதிலும், வசனங்களிலும், நடிகர்களின் தேர்வுகளிலும், இயக்கத்திலும் தன் சிறப்பான முத்திரையைப் பதித்துள்ளார். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வசனங்களுக்கேற்ப நடிகர்கள் தங்கள் வாயசைப்பினாலும் அங்க அசைவுகளினாலும் மெருகேற்றியிருப்பதில் ஞானத்தின் ஆற்றல் தெரிகிறது.

நாடகத்தில் அனைத்துப் பாத்திரங்களையும் பெண்களே ஏற்று நடிப்பதும் பாம்பே ஞானம் பல ஆண்டுகளாகச் செய்துவரும் ஒரு புதுமை. இந்நாடகத்திற்குப் பெரிய பக்கபலமாகத் திகழ்வது கிரிதரனின் இசையமைப்பு. பின்னணி இசையாகட்டும், அஷ்டபதிக்கான இசையாகட்டும், கிரிதரன் தன் பங்கை நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.ஜெயதேவராக ஆர்த்தி ரவிச்சந்திரனும் அவரின் மனைவியான பத்மாவதியாக சுஷ்மிதாவும், நம் கண் முன்னே வாழ்ந்து காட்டி உள்ளார்கள்.

பரஸ்பரம் அவர்களுடைய பறிமாற்றங்கள் அன்பை ஒட்டியே இருப்பதால் அது நம்முள்ளே ஒரு நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் பால் பொறாமை கொண்டு தீங்கினையே விளைவிக்கும் கிரவுளஞ்ச தேசத்து ராணியாக புவனா சிறப்புறச் செய்திருக்கிறார். இறுதிக் காட்சியில் உணர்ச்சிப் பொங்க ஆடி நம்மை ஆட்கொள்கிறார் சைதன்ய மகாப் பிரபுவாக நடித்த வர்ஷா. மோஹன் பாபுவின் அரங்க அமைப்பும், மனோவின் ஒலி அமைப்பும்,கண்ணனின் ஒப்பனையும் நாடகத்திற்கு மேலும் மெருகு ஏற்றுகின்றன.

ஜெயதேவரைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கும், அவர் இயற்றிய அஷ்டபதிகளின் சிறப்புக்களைத் தெரிந்து கொள்வதற்கும் இந்நாடகம் உதவி புரிகிறது. இந்நாடகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2,3 மற்றும் 4ஆம் தேதிகளில் சென்னை மயிலையிலுள்ள பாரதீய வித்யா பவனத்தில் நடைபெற உள்ளது.


ஆன்மிக நாடகம்பக்தி நாடகம்மேடை நாடகம்ஜெயதேவர் நாடகம்ஜெயதேவர் கதைஜெயதேவர் வாழ்க்கைதமிழ் நாடகங்கள்தமிழ் ஆன்மிக நாடகம்பாம்பே ஞானம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author