குருவுக்குப் பிடித்த திருடன்

குருவுக்குப் பிடித்த திருடன்
Updated on
1 min read

ஜென் குரு பாகியா, தனது சீடர்களுக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தார். அப்போது சீடர்களுடன் சேர்ந்து ஒரு திருடனும் மடாலயத்துக்குள் நுழைந்துவிட்டான். சீடர்கள் அனைவரும் போதனைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அங்கிருக்கும் பொருட்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டான் திருடன். அனைவரும் கலைந்து செல்லும்போது பொருட்கள் களவாடப்பட்டு இருப்பதைக் கண்டனர் சீடர்கள். உடனே அந்தத் திருடனைப் பிடிக்க வேண்டும் என்று குருவிடம் முறையிட்டார்கள். குருவோ அவனை மன்னித்ததுடன், தன் சீடர்களிடமும் அவனை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார். குருவின் சொல்படி சீடர்களும் திருடனை மன்னித்து, அவனைத் தேடுவதைக் கைவிட்டனர். அந்த மடாலயத்தில் உள்ள மாணவர்களுடன் திருடனும் தங்கிவிட்டான்.

ஆனால் அவன் திருந்தவில்லை. மடாலயத்தில், அடிக்கடி பொருட்கள் காணாமல் போனவண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில் திருடனின் செயலைப் பொறுக்க முடியாமல் சீடர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். குருவிடம் சென்று, ‘நீங்கள் திருடனை மன்னிக்கச் சொன்னீர்கள். நாங்களும் அப்படியே செய்தோம். ஆனால் இன்றுவரை பொருட்கள் திருடுபோய்க்கொண்டுதான் இருக்கின்றன.

ஒன்று இங்கே நாங்கள் இருக்க வேண்டும், இல்லையெனில் திருடன் இருக்க வேண்டும். நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்’ என்றனர். குரு அவர்களிடம் அமைதியாக, ‘அப்படியானால் நீங்கள் அனைவரும் வெளியேறுங்கள்’ என்றார். சீடர்கள் திகைத்துவிட்டனர். குருவோ, ‘திருடுவது தவறு என்ற தெளிவு உங்களுக்கு இருக்கிறது. அந்தத் தெளிவு இல்லாததால்தான் அவன் பொருட்களைத் திருடிச் செல்கிறான். அதனால் உங்களைவிட அவனுக்குத்தான் என் அன்பும் உபதேசமும் தேவை. அதனால் நீங்கள் வெளியேறுங்கள்’என்றார்.

குருவின் வார்த்தைகளைக் கேட்ட திருடன் கண்ணீருடன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டான். அன்றுமுதல் திருடுவதைக் கைவிட்டான், போதனைகள் எதுவும் இல்லாமலேயே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in