பைபிள் கதைகள் 13: அண்ணன்களால் விற்கப்பட்ட தம்பி!

பைபிள் கதைகள் 13: அண்ணன்களால் விற்கப்பட்ட தம்பி!
Updated on
2 min read

தீனாளுக்கு ஏற்பட்ட இழிவுக்குப் பிறகு தன் வாழ்விடத்தை விட்டு வெளியேறிய யாக்கோபு மீண்டும் பெத்தேலுக்கு வந்தார். கடந்தகால நினைவுகள் அவ மனதில் ஓடின. லாபானின் மகள்களை மணந்து பெரிய குடும்பமாய் பெருகி நின்ற யாக்கோபு தனது தாய்மாமனின் வஞ்சனையால் அராமிலிருந்து தப்பித்துச் சொந்த மண்ணுக்குத் திரும்பி வந்தபோது கடவுள் மீண்டும் அவருக்குக் காட்சியளித்தார், அப்போது கடவுள் யாக்கோபுவிடம், “ உன் பெயர் இனி யாக்கோபு என அழைக்கப்பட மாட்டாது. இக்கணம் முதல் நீ இஸ்ரவேல் எனப்படுவாய். நீ நிறைய குழந்தைகளைப் பெற்று ஒரு நாட்டை உருவாக்குவாய். புறவினத்தாரின் மக்கள் திரளும், அரசர்களும் உன்னிடமிருந்து தோன்றுவார்கள். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் சிறந்த இடங்களைக் கொடுத்திருந்தேன். இப்போது அதனை இஸ்ரவேலின் குடும்பமாகிய உனக்குக் கொடுக்கிறேன். உனக்குப் பின்னால் வரும் உன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன்” என்று கூறியிருந்தார். இதனால்தான் அந்த இடத்துக்கு யாக்கோபு ‘பெத்தேல்’ அதாவது ‘தேவனின் வீடு’ என்று பெயர் வைத்து அங்கொரு நடுகல்லையும் நிறுத்தியிருந்தார்.

பன்னிரெண்டாவது மகன்

இம்முறை தனது இரு மகன்களின் ஆணவச் செயலால் ஓடிவந்த யாக்கோபுவுக்குப் பாதுகாப்பான இடமாக பெத்தேல் இருந்தது. இங்கே ராகேல் தனது இரண்டாவது மகனைப் பெற்றெடுத்துவிட்டு அதற்கு ‘பெனோனி’ என்று பெயர் சூட்டிய பின் இறந்துபோனாள். யாக்கோபுவோ அவனைப் பென்யமீன் என்று அழைத்தார். பிற்காலத்தில் யாக்கோபுவின் இந்த 12 மகன்களுடைய பரம்பரையிலிருந்தே இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் வந்தார்கள். அது மட்டுமல்ல யாக்கோபின் 10 மகன்களுடைய பெயர்களும் யாக்கோபுவின் மகன்களில் ஒருவராகிய யோசேப்பின் இரண்டு மகன்களுடைய பெயர்களும் இஸ்ரவேல் மக்களின் 12 கோத்திரத்தாருக்கும் சூட்டப்பட்டன.

பொறாமைப்பட்ட அண்ணன்கள்

யாக்கோபு தனது எல்லா மகன்களின் மீதும் மிகுந்த பிரியம் வைத்திருந்தார். என்றாலும் அவரது கடைக்குட்டிகளில் ஒருவனாகிய யோசேப் மீது உயிரையே வைத்திருந்தார். அவன் மீது சற்று அதிகமாகவே பிரியம் காட்டினார். அவனுக்கு நீளமான, ஒட்டுப்போடாத அழகு மிளிரும் ஒரு அங்கியைப் பின்னி அவனுக்குக் கொடுத்தார்.

அந்த அங்கியை அணிந்துகொண்டு ஒரு இளம் ராஜகுமாரனைப்போல் வலம் வந்த யோசேப்பு தந்தையின் சொல்லைத் தட்டாதவனாகவும் அண்ணன்கள் கூறும் வார்த்தைக்கு அடிபணிந்து நடப்பவனாகவும் இருந்தான். யோசேப் இத்தனை பணிவுடன் நடந்துகொண்டாலும் யோசேப்பிடம் மட்டும் தங்களது தந்தை இந்தளவு பாசம் காட்டுவதை அந்த 10 அண்ணன்களாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் யோசேப்பு மீது பொறாமைப்பட்டு அவனை வெறுக்க ஆரம்பித்தார்கள்.

உண்மைக்குக் கிடைத்த பரிசு

யோசேப்புவை அவனது அண்ணன்கள் வெறுத்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. யோசேப்பு இரண்டு கனவுகளைக் கண்டான். அந்த இரண்டு கனவுகளிலும் அவனுடைய அண்ணன்கள் அவனுக்கு முன்பாகத் தலைகுனிந்து வணங்கினார்கள். இந்தக் கனவுகளை யோசேப்பு மறைக்காமல் தன்னுடைய அண்ணன்களிடம் சொன்னபோது வெறுப்புற்ற அவர்கள் “இவன், நமக்கெல்லாம் அரசனாகும் கனவுடன் இருக்கிறான்” என்று கூறி மேலும் அவனை வெறுக்கத் தொடங்கினார்கள்.

ஆட்டு மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்த தனது மூத்த மகன்களும் மந்தைகளும் நலமுடன் இருக்கிறார்களா என்று , பார்த்து வரும்படி யோசேப்புவை அனுப்பி வைக்கிறார் யாக்கோபு. தந்தைக்கு வணக்கம் செலுத்தி மந்தையை நோக்கிப்புறப்பட்டான்.

யோசேப்பு தூரத்தில் வருவதைப் பார்த்த அவனுடைய அண்ணன்களில் சிலர், “ இதுதான் நல்ல சமயம்; நாம் அவனை இங்கேயே கொன்று புதைத்து விடலாம்!’ என்றார்கள். ஆனால் மூத்த அண்ணனாகிய ரூபன், “வேண்டாம், அப்படிச் செய்யக் கூடாது” என்று தடுக்கிறான். எனவே யோசேப்புவை கொல்வதற்குப் பதிலாக அவனைப் பிடித்து ஒரு வறண்ட குழிக்குள் தள்ளி அதிலிருந்து வெளியே வர முடியாதவாறு செய்துவிடுகிறார்கள். பிறகு அவனை என்ன செய்யலாம் என்று பதைபதைப்புடன் யோசிக்கத் தொடங்குகிறார்கள்.

அந்தச் சமயத்தில் அந்த வழியே எகிப்து நாட்டுக்குச் சென்றுகொண்டிருந்த இஸ்மவேலர்கள் அங்கே வருகிறார்கள். மனித அடிமைகளை வாங்கிச்செல்வதில் அதிகம் விருப்பம் கொண்டவர்கள் அவர்கள். எனவே யூதா தன்னுடைய மற்ற சகோதரர்களிடம், “இந்த இஸ்மவேலருக்கு யோசேப்ப்பை நாம் விற்றுவிடலாம்” என்று சொல்கிறான்.

அதை மற்ற அண்ணன்மாரும் ஏற்றுக்கொள்ளச் சொன்னபடியே யோசேப்புவை அற்பமாக 20 வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிடுகிறார்கள். அவனை அனுப்பும் முன் ஒரு அடிமைக்கு எதற்கு ஆடம்பரமான உடை என்று கூறி அவன் அணிந்திருந்த விலையுயர்ந்த அங்கியைக் கழற்றிக்கொள்கிறார்கள். கண்ணீர் மல்கத் தன் அண்ணன்களைப் பிரிந்து செல்லும் யோசேப்பு இனி ஓர் அடிமையாக எகிப்து தேசத்தில் அவர்களுக்கு வேலை செய்ய வேண்டும்.

அங்கியில் அடையாளம்

வெறுத்து ஒதுக்கிவந்த தம்பி தங்கள் கண் பார்வையிலிருந்து மறைந்த பிறகு அண்ணன்களுக்குப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. யோசேப் பற்றி தந்தை யாக்கோவுக்கு என்ன பதில் சொல்வது?! மந்தையிலிருந்த ஒரு வெள்ளாட்டைக் கொல்கிறார்கள். அந்த வெள்ளாட்டின் இரத்தத்தில் யோசேப்பின் அழகிய அங்கியைத் தோய்த்து எடுக்கிறார்கள். பின்பு அந்த அங்கியைத் தங்கள் தந்தையிடம் காட்டிய அவர்கள் “அப்பா நாங்கள் இதைக் கண்டெடுத்தோம்.

இது யோசேப்பின் அங்கிதானா என்று கொஞ்சம் பாருங்கள்” என்று கேட்கிறார்கள். முதுமையிலிருந்த யாக்கோபு, யோசேப்புவுக்காக தாம் பின்னிய அங்கிதான் என்பதை அறிந்துகொண்டு கதறியழத் தொடங்குகிறார். “என் அன்பு மகனை ஒரு காட்டு விலங்கு கொன்றுவிட்டதே” என்று துடித்துத் துவண்டுபோகிறார். தந்தை இப்படி நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அண்ணன்களுடைய திட்டம். தம்பியை ஒழித்துக்கட்டியதில் அந்த அண்ணன்கள் வெற்றிபெற்றார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in