Last Updated : 08 Jun, 2017 09:49 AM

 

Published : 08 Jun 2017 09:49 AM
Last Updated : 08 Jun 2017 09:49 AM

இறைமை இயற்கை 03: அன்பில் குறை வைக்காத நிலம்

வெளி, காற்று, வெப்பம், நீர், நிலம் என்ற ஐம்பூத வரிசையில் நிலம் கடைசியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்ணில் பிறந்த எதுவும் கடைசியாக நிலத்தை அடைந்தே தீர வேண்டும் என்பதன் அடையாளமாகவே நிலம் கடைசியாக வைக்கப்பட்டுள்ளது.

நிலத்தின் சிறப்புகளில் ஒன்று, காத்திருப்பது. நமது காலுக்குக் கீழே உள்ள நிலமானது இன்று நேற்றல்ல, பல கோடி ஆண்டுகளாக அங்கேயே காத்திருக்கிறது – நமக்காகவும், நம்மைப் போன்ற பிற உயிர்களுக்காகவும்.

நிலம் காத்திருக்கிறது என்றால், அது இயங்குகிறது என்று பொருள். கோடி கோடி ஆண்டுகளாக இயங்கிய நிலம், இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம் தேவையானவற்றைத் தனக்குள் புதைத்தபடியே இறுகிக் கிடக்கிறது.

இறைவனின் இயக்கத்தைக் காலம் என்றழைக்கலாம்; நிலத்தின் இயக்கத்தை வலிமை என்றழைக்கலாம். நிலம் எவ்வளவு இயங்குகிறதோ, அவ்வளவு வலிமை பெறும்.

வலிமை என்பது இறுகிக் கிடப்பது மட்டுமல்ல; அவ்வப்போது இளகி நிற்பதும்தான். இளகுதலும் இறுகுதலும் இறையின் மனம்; நிலத்தின் குணம்.

தழுவக் குழைந்த நாதர்

முன்னொரு காலத்தில், வட தமிழ்நாட்டைச் செழுமைப்படுத்திவந்த கம்பையாற்றின் கரையில் மண்ணால் செய்யப்பட்ட ஒரு சிவலிங்கம் இருந்தது. அதன் திருமேனி அழகைக் கண்டு வியந்த ஓர் இளம்பெண், நாள்தோறும் அந்தச் சிவலிங்கத்துக்குப் பூஜைகள் செய்துவந்தாள். அந்த லிங்கத்துக்கும் அவளது அழகைக் கண்டு மையல் உண்டாயிற்று. ஒருநாள் அவள் பூஜையில் ஈடுபட்டிருந்தபோது, சிவம் கண் அசைக்க, கம்பை மாநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அதைக் கண்டு அலறிய அவள், வெள்ளம் தன்னை இழுத்துச் சென்றிடாதவாறு பற்றிக்கொள்ள அருகில் எதுவும் இல்லாததால், அந்தச் சிவலிங்கத்தையே இறுகத் தழுவிக்கொண்டாள்.

வெள்ளம் குறைந்த பிறகு, அச்சம் தணிந்த பிறகு, அவள் கைகளை விலக்கினாள். அவள் இறுகத் தழுவியதால், மண்ணாலான அந்தச் சிவலிங்கத்தில் அவளது வளைத் தடமும் முலைத் தடமும் பதிந்திருக்கக் கண்டாள். நாணத்தால் குழைந்து, பின் மீண்டும் தழுவி இறைவனோடு ஒன்றுகலந்தாள். அவளே காஞ்சிபுரத்தின் ஏலவார்குழலி அம்மை. அந்தச் சிவலிங்கமே தழுவக் குழைந்த நாதர் எனப்படும் கச்சியேகம்ப நாதர். ஐம்பூதக் கோயில்களில் நிலத்துக்கான கோயிலாகிய காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் திருத்தல வரலாறு இது.

நிலம் எவ்வளவு திண்மையாக இருந்தாலும், மனித மனம் அன்பு செய்தால், அது குழைந்துவிடும் என்பதையே இந்த ‘தழுவக் குழைந்த நாதர்’ வரலாறு பறைசாற்றுகிறது.

தாங்கும் நிலம்

நிலமே பொறுமையின் எல்லை. ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல…’ என்றார் திருவள்ளுவர். இறையின் குணமும் அதுதான்.

‘கொல்லையில் நின்று குதிகொள்ளுங் கூத்தனுக்

கெல்லையி லாத இலயமுண்டாம’ (திருமந்திரம் - பொறையுடைமை)

- என்று திருமூலர் இறைவனின் எல்லையில்லாத பொறுமையை வர்ணிக்கிறார். பொறுமை மட்டுமல்ல. நிலத்தின் ஒவ்வொரு இயல்பிலும் இறைமையைக் காண முடியும்.

நிலம் தன்னகத்தே கொட்டப்படும் எதையும் உட்கொண்டு செரித்து, ஒரு புதிய ஆற்றலாக வெளிப்படுத்தவல்லது. மண்ணுக்கடியில் விதையை வைத்தால் அது மரமாகும். குப்பைகளைக் கொட்டினால் அவை உரமாகும். மனிதர்களின் மீதான நிலத்தின் அன்பில் துளியும் குறைவில்லை. மனிதர்கள் இப்போது நிலத்தில் மிக அதிகமாக நெகிழியைக் கொட்டுகிறார்கள்.

பல கோடி ஆண்டுகளாகச் சேமிக்கப்பட்ட நிலத்தடி நீரை, சில பத்தாண்டுகளில் உறிஞ்சி தீர்த்துவிட்டார்கள். ஆனால், மனிதர்களின் மீதான நிலத்தின் அன்பினாலேயே நிலம் அவற்றை ஏற்றுக்கொள்கிறது; மனிதர்களால் தனக்கு ஏற்படும் துன்பங்களை அது பொறுத்துக்கொள்கிறது. எனவேதான், நிலத்தை அன்னை என்கிறோம்; திருமகளைப் பூமாதேவி என்கிறோம்.

பகல் முழுக்கத் தனக்குள் வாங்கிய கதிரவனின் வெப்பத்தை, ஒவ்வொரு அந்தியிலும் நிலம் தணித்துக்கொள்கிறது. நிலம் அப்படிச் செய்யாவிட்டால், மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் இரவில் இளைப்பாற முடியாது. நிலத்தின் இந்தப் பேரன்புக்கு நன்றி சொல்லிச் சிறப்பு செய்வதுதான், திருவாரூரின் தியாகராஜருக்குச் செய்யப்படும் திருவந்திக்காப்பு (மாலை 6 மணி) பூஜை. (ஐம்பூதத் தலங்களில் நிலத்துக்கான மற்றொரு தலம் திருவாரூர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது).

கழிவகற்றிப் புதுப்பிக்கும்

நிலத்தின் இறைமையைப் புரிந்துகொள்ள அண்டத்திலிருந்து பிண்டத்துக்குத் திரும்புவோம். உடலின் உள்ளுறுப்புகளில் மண்ணீரல் என்று ஒன்று உண்டு. மேலோட்டமாகப் பார்த்தால், முதிர்ந்த ரத்தச் சிவப்பணுக்களை அழித்து, புதிய அணுக்களையும் நிணநீரையும் உற்பத்தி செய்வதே மண்ணீரலின் பணி என்று பொருள் கொள்ளலாம். ஆனால், அண்டத்தில் நிலத்தின் பணி என்னவோ, அதைப் பிண்டத்தில் செய்வதே மண்ணீரல். எனவேதான், அதற்கு மண்ணீரல் (மண்+ஈரல்) என்று பெயர்.

மனிதர்களின் எண்ணங்களையும், செயல்களையும் உண்டாக்குவதிலும் வழிநடத்துவதிலும் மண்ணீரலுக்குப் பெரும்பங்கு உண்டு. பிரபஞ்சத்தின் செயல்பாடுகளை உண்டாக்குவதிலும் வழிநடத்துவதிலும் மண் பூதத்துக்குப் பெரும்பங்கு உண்டு.

திருமூலர் சொல்வதுபோல,

‘அக்குழி தூர்க்கையா வர்க்கும் அரியதே

அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்…’

வயிறும் நிலமும் மனிதர்களால் நிரப்பித் தீர்க்க முடியாத பள்ளங்கள். அவற்றை நிரப்பி தூர்க்கும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமானால், இறையிடம் சரணடைய வேண்டும்.

(அடுத்த வாரம்: ‘நீர்’ பூதம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x