

ஹழ்ரத் லுக்மானுல் ஹக்கீம் என்ற பெரியாரிடம் அவரின் மகன் அன்உம், “ஒருவரும் பாராது, அறியாது, தெரியாது ரகசியமாகச் செய்யும் குற்றத்தை அல்லாஹ் எப்படி அறிவான்” என்று கேட்டார்.
லுக்மான் மகனுக்குப் புகன்ற நீதியை திருக்குர்ஆனின் 31-16 ஆவது ஆயத்தில் காணலாம். “மகனே! நிச்சயமாக அது கடுகினும் சிறிதாயினும் ஒரு பாறைக்குள்ளோ அல்லது வானங்களிலோ அல்லது பூமியிலோ மறைந்திருந்தாலும் அதனையும் அல்லாஹ் வெளிக்கொண்டு வந்துவிடுவான். நிச்சயமாக, அல்லாஹ் அறிந்தவன்; உணர்ந்தவன்”
கற்பாறைக்குள், வானத்தில், பூமியின் பாதாளத்தில் கடுகினும் சிறிய தவறைச் செய்தாலும் நுட்பமானதை அறியும் திட்பமுடை அல்லாஹ் அம்பலத்திற்குக் கொண்டு வந்துவிடுவான். இதயங்களில் உள்ள ரகசியங்களையும் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களையும் அறியும் நுண்ணறிவுடையவன் அல்லாஹ் என்பதை உணர்ந்தால் மறைவாகக் குற்றம் செய்து இறைவனிடமிருந்து தப்பிக்கலாம் என்று எந்த மனிதனும் நினைக்க மாட்டான்; குற்றத்தில் திளைக்க மாட்டான்; குறையின்றி நிறைவாக வாழ்வான் என்று மகனுக்கு நல்லுரை புகன்றார் லுக்மான்.