வெற்றி தரும் நாயகி

வெற்றி தரும் நாயகி
Updated on
2 min read

அக்டோபர் 2 - விஜயதசமி

தேவி ஆதிபராசக்தி ஒன்பது நாள் போற்றப்பட்ட பின், தசமியான பத்தாம் நாள் வெற்றி மங்கையாக, வீரலஷ்மியாக ஆராதிக்கப்படுகிறாள். அன்றைய தினமே ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் அனைத்து நாட்களில் மட்டுமல்ல ஆண்டு முழுவதும் தேவியைப் போற்றி அனைத்து நன்மைகளையும் வளங்களையும் பெறலாம். குறிப்பாக தேவியைப் போற்றும் செளந்தர்யலஹரி படிக்க வேண்டும். அந்த சுலோகங்களில் சிலவற்றைப் பொருள் அறிந்து விஜயதசமியான இன்று படித்தால், செளந்தர்யலஹரி சகல சித்திகளும் அளிக்கும் என்பது நம்பிக்கை.

“மங்கள மூர்த்தியான மகாதேவன் பராசக்தியுடன் இணைந்திருந்தால் மட்டும்தான் இந்தப் பிரபஞ்சத்தை உண்டாக்கும் வல்லமை பெறுகிறார். அப்படி இணையாவிட்டால் அசைவதற்குக்கூட சக்தி உடையவராக இருப்பதில்லையன்றோ? விஷ்ணு, ருத்ரன், பிரம்மா ஆகியோர் பூஜிக்கும் உன்னை தாயே, பூர்வ புண்ணியம் செய்தவனே பூஜிக்கத் தகுந்தவன் ஆவான்.”

செளந்தர்யலஹரியின் இந்த முதல் பாடலை மந்திரம் போல் தொடர்ந்து கூறினால் சகல காரிய சித்தி ஏற்படும் என்பது நம்பிக்கை. செளந்தர்ய வாழ்வு தரும் செளந்தர்யலஹரியை ஆயுத பூஜையன்று தியானித்தல் சிறந்த பலன்களைத் தரும்.

அன்றைய தினம் புத்தகங்களை அடுக்கி சந்தனம் குங்குமம் இட்டுப் பூ வைக்க வேண்டும். இல்லத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் ஜியாமிட்ரி பெட்டி, ஒரு அடி ஸ்கேல், பென்சில், பேனா, ரப்பர், புத்தகங்கள் மட்டுமல்லாமல், பெரியவர்கள் படிக்கும் புத்தகங்களையும் பூஜையில் வைக்க வேண்டும்.

கலைகளுக்கும் தேவியே அருளும் தெய்வமாக இருப்பதால், இல்லத்தில் இருக்கும் இசைக் கருவிகளையும் பூஜையில் வைக்கலாம். சுருதி பெட்டி, வீணை, கிடார், வயலின், மிருதங்கம், ஜால்ரா, கடம், மற்றும் தம்புரா ஆகியவற்றைத் துடைத்து, சந்தனம் குங்குமம் இட்டுப் பூஜையில் வைக்க வேண்டும்.

தேவியே வெற்றி தெய்வமாக இருப்ப தால், விளையாட்டுச் சாமான்களையும் அடுக்கலாம். செய்யும் தொழிலே தெய்வம் என்பதால் சுத்தி, கத்தி, ஸ்குரு டிரைவர், முதலான கருவிகளுக்கும் மஞ்சள் குங்குமம் இட்டுப் பூஜையில் வைக்க வேண்டும். இல்லத்தில் உள்ள பீரோ, கதவுகள் ஆகியவற்றையும் அலங்கரிக்க வேண்டும். பூஜை அறையைச் சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு மலரிட்டு அலங்கரிக்க வேண்டும். தீபம் ஏற்றி, விளக்கிற்குத் துளசியும் பூவும் வைக்கலாம்.

அனைத்திலும் இறைவனைக் காணும் பண்பாடு நம் சமூகத்தில் உள்ளதால் வாகனங்களுக்கும் பூஜை செய்யும் வழக்கம் இருக்கிறது. வாகனங்களை அலங்கரித்துக் கற்பூரம் ஏற்றி, சக்கரங்களுக்கு அடியில் எலுமிச்சம் பழம் வைத்து, அவை நசுங்குமாறு வண்டியை இயக்குவது நன்மை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிறுவனங்களிலும் ஆயுத பூஜை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

வாழ்வின் எல்லா அம்சங்களிலும் வளம் பெற, இந்த ஆயுத பூஜையன்று மக்கள் பூஜை செய்து வழிபடுகிறார்கள். கல்வி, திறமை, பொருள் ஈட்டுவதற்கான பொருள்கள் என எல்லாவற்றையும் ஆராதிப்பதன் பின்னால் உள்ள பார்வை இதுதான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in