Last Updated : 27 Apr, 2017 10:15 AM

 

Published : 27 Apr 2017 10:15 AM
Last Updated : 27 Apr 2017 10:15 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 26: நெஞ்சம் அன்பானால் நொடிப்பொழுதில் சிவனருள்!

உயிர் அழிவற்றது; தொடக்கமும் முடிவும் இல்லாதது என்னும் பொருளில் ‘ஆதம் இலி’ என்றார் மணிவாசகர். (ஆதம்=ஆதி+அந்தம்; ஆதி-தொடக்கம்; அந்தம்-முடிவு; இலி-இல்லாதது.) எனவே உயிர்களுக்குள் மூத்தது, இளையது என்று இல்லை. ‘காலம்’ என்னும் பரிமாணத்துக்கு உட்பட்ட உலகில், உயிர்கள் வாழும் உடல்பிறவியில்தான், தாய், தந்தை, அண்ணன்(மூத்தவன்), தம்பி(இளையவன்) போன்ற உறவுகளும், வயது வழக்குகளும் வருகின்றன. இதை விலங்குகள் அறிவதில்லை; இதை அறியாத மனிதர்கள் விலங்குகளுக்குச் சமம்; அத்தகையவர்களின் நிலையைத் தம் குற்றமாகப் பாவித்து ‘நாயேன்’ என்றார் மணிவாசகர்.

சாதி, குலம், பிறப்பு என்னும் சுழிப்பட்டு. . .

சாதி என்பது நால்வகை வருணம் மூலம் மனிதர்களுக்குள் தோன்றிய பல பிரிவுகள்; குலம், சாதியின் உட்பிரிவுகள்; பிறப்பு என்பது, தொன்று தொட்டு வரும் குடும்பப் பெருமை. சில சாதியுள் வரும் ‘குடி’ அல்லது 'கோத்திரம்’ என்பதும் இதுவே. இச்சுழலில் அகப்பட்ட உயிர், சாதியைத் தன் அடையாளமாக நினைத்துத் தடுமாறுகின்றது; சாதிச்சுழலில் சிக்கி, வீண்பெருமையில், கிடைத்தற்கு அரிய மனிதப்பிறவியை வீணாக்குகிறது. இதை, ‘சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்' என்றார் பெருமான். விலங்காகப் பிறந்த உயிர்களுக்குச் சாதி-குலம்-பிறப்பு என்ற தடுமாற்றமில்லை.

துன்பம் நீக்கி ஆட்கொண்ட இறைவன்!

உடல் தோன்றிய குடும்பத்தின் அடிப்படையில், உயிருக்குச் சாதி, குலம், பிறப்பு என்னும் அடையாளங்கள் ஏற்றப்படுகின்றன. பிறப்புக்குமுன்னும், பின்னும், உயிர்களுக்கு இவ்வடையாளங்கள் இல்லை; ‘சாதி-குலம்-பிறப்பு’ அடையாளமிட்ட உடல்களைவிட்டு உயிர்கள் நீங்கியதும், எல்லா உடல்களுக்கும் பெயர் ‘பிணம்’தான்; பின் அவை புதைக்கப்பட்டோ, எரிக்கப்பட்டோ அழிக்கப்படுகின்றன. இதை உணராமல், சாதி-குலம்-பிறப்பு, நான், எனது என்ற சுழியில் அகப்பட்டு மயங்கி நிற்கின்றனர். சாதி மயக்கம் தெளிவித்து, பிறவித்துன்பங்கள் நீக்கி, தம்மை ஆட்கொண்ட திருப்பெருந்துறை இறைவனையே, தில்லையில் கண்டுகொண்டேன் என்கின்றார் மணிவாசகர்.

சாதி! குலம்! பிறப்பு! என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்

ஆதம் இலி நாயேனை! அல்லல் அறுத்து ஆட்கொண்டு!

பேதைகுணம்! பிறர்உருவம்! யான்! எனது! என்னும் உரை மாய்த்துக்

கோதுஇல் அமுது ஆனானைக் குலாவுதில்லை கண்டேனே!

(திருவாசகம்:31.5)

முன்பே செய்த வினைகளின் அடிப்படையில் உடல்பிறவிகள் கிடைக்கின்றன; மனிதப்பிறவியில், ‘நான் யார்? என்னைப் படைத்தவன் யார்?’ என்ற பகுத்தறிவால் இறைவனை உணரும் ஆற்றல் வருகிறது; இறைவனை அடையவிடாமல் சாதி தடுக்கிறது. மனிதன் சாதி-மத மயக்கத்தால் விலங்கினும் கீழ்நிலையடைகிறான்.

அறியாமையால் வரும் பேதைகுணம்!

‘ஆணவம்’ என்னும் ‘அறியாமை’யே உயிர்களின் உண்மையான குறைபாடு; உயிர்கள் தாமே அறிய இயலாதவை; ஆனால், சொல்லிக்கொடுத்தால் அறிந்துகொள்பவை; உயிருக்குச் சொல்லிக்கொடுக்கும் கருவி, இறைவன் தந்த உடல்; மனிதப்பிறவியில்தான், உயிர்கள் தன்னையும், தன் தலைவனையும் அறிந்து முழுமைபெறும். அதற்குத் தடையாக உள்ள பேதைகுணங்கள் ‘சாதி-குலம்-பிறப்பு-மதம்’ என்னும் சுழிகள் என்கிறார் பெருமான்.

குற்றமற்ற இன்பப்பொருள் இறைவன்!

தம் தவறுகளுக்குப் பிறரைக் குற்றம்கூறும் மனப்போக்கைப் 'பிறருருவம்' என்கிறார்; சில நற்செயல்களுக்குத் தாமே காரணமாக நினைக்கும் போக்கை ‘யான்’ என்றார்; அனைவரின் பயன்பாட்டுக்காக இறைவனால் கொடுக்கப்பட்டதை, ‘என்னுடையபொருள்’ என்று பறித்துக்கொள்வதை ‘எனது’ என்றார்; இவை அனைத்தையும் இறைவன் நீக்கியதை ‘யான், எனது என்னும் உரை மாய்த்து’ என்றார். இவ்வறியாமை நீங்கிய அனுபவ நிலையில், குற்றமற்ற இன்பப்பொருளாய் இறைவன் விளங்குதலால், ‘கோது இல் அமுது ஆனானை' என்றார்.

சாதி பேதம் சாடும் கவிஞர் கண்ணதாசன்

மனிதகுலத்தை வேறுபடுத்தும் பொய்நீதி, சாதிபேதங்களை வேதம் விதி என்று மதத்தின் பெயரால் புகுத்தும் போக்கைச் சாடும் கவியரசு கண்ணதாசனின் திரைக்கவிதை இங்கு குறிப்பிடத்தகுந்தது. அன்பும், இன்பமுமே இயற்கையின் நீதி என்கிறார் கவியரசு.

நிலை மாறினால் குணம் மாறுவான்! பொய்

நீதியும் நேர்மையும் பேசுவான்! தினம்

ஜாதியும் பேதமும் கூறுவான்! - அது

வேதம் விதி என்று ஓதுவான்!

மனிதன் மாறிவிட்டான்! மதத்தில் ஏறிவிட்டான்! . . .

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி!

ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி!

(கவியரசு கண்ணதாசன்)

சாதிக்கொள்கை தமிழ்மறைக்கு ஏற்புடையது அன்று. ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அனைத்து உயிர்களின் சமத்துவத்தையும், வாழும் உரிமையையும் முழங்கியது திருக்குறள்.

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

சாதியைச் சைவ அருளாளர்கள் தொடக்கமுதலே எதிர்த்து வந்துள்ளனர். “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்” என்பது திருமூலர் தந்த வாழ்வியல் கொள்கை. சைவத்திலும், உயர்ந்த சாதி, மிக உயர்ந்த சாதி, மிகமிக உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, மிகத் தாழ்ந்த சாதி, மிகமிகத் தாழ்ந்த சாதி எனச் சாதிப்புற்றுநோய் பரவியதைக் கண்டு, பொங்கிஎழுந்தார் அமைதியே வடிவான அப்பரடிகள்.

சாதிக்கெதிரான நாவுக்கரசரின் சீற்றம்!

சமய உண்மைகளைப் பேசும் சாத்திரங்களைக் கடைப்பிடிக்கவே ஒழுக்கவிதிகளும், சடங்குகளும் தோன்றின. காலப்போக்கில், போலிச் சாத்திரங்கள் தோன்றி, போலி விதிகளும், போலிச் சடங்குகளும் பெருகி, சாதிகள் உருவாயின. சாதிப்பாகுபாடு பார்க்கும் குற்றத்தால் தாம் இறைநீதி என்னும் சட்டகத்துள் இல்லை; எனவே, இறைவனை அடைய முடியவில்லை என்றார் மணிவாசகர்.

“சட்டம் நேர்பட வந்திலாத சழக்கனேன்! உனைச் சார்ந்திலேன்!

(திருவாசகம்:30:2.2)

மனிதர்களின் குற்றத்துக்காக, தம்மையே ‘சழக்கன்' என்றழைத்து வேதனையுற்றார் மணிவாசகர். அறிவுநூல், சாத்திரங்களைப் பேச்சளவில் பேசிக்கொண்டு, அறிவுக்குப் பொருந்தாத சாத்திரம் பேசி, சாதிப்பாகுபாட்டைத் தூக்கிப்பிடிப்பவரைச் “சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்” எனக் கடுமையாகக் கண்டித்தார் அப்பரடிகள்.

சழக்கு என்னும் சொல்லுக்கு அறியாமை, பொய், பயனின்மை, குற்றம், தீமை எனப் பலபொருள் உண்டு. சாதிப்பாகுபாடு என்பது அறியாமையின் விளைவு, உண்மைக்குப் புறம்பானது, பயன் இல்லாதது, குற்றம் மிகுந்தது, தீமை விளைவிப்பது என இத்துணைத் தீமைகளையும் ஒருசேரக் கண்டிக்கும் பொருட்டே `சழக்கர்’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார்; ‘நாவுக்கு அரசர்’ என்று இறைவனால் அழைக்கப்பட்டவர் அல்லவா அப்பர் பெருமான்.

“சாத்திரம் பேசும் சழக்கர்களே! கோத்திரத்தையும், குலத்தையும் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று சினம் கொண்டு வினவுகின்றார் நாவுக்கரசர். சமயத்தையும், சமுதாயத்தையும், தம்மையும் கெடுத்துக்கொள்ளலாம் என்பதைத் தவிர கோத்திரம், குலம் கொண்டு வேறு பயனில்லை.

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!

கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?

பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்!

மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே!

(தேவாரம் 5.60.3)

“அன்பே சிவம்” என்ற திருமூலர் தமிழும், “பாத்திரம் சிவம்” என்ற நாவுக்கரசர் தமிழும் சொல்லும் செய்தி இதுதான்: மனிதகுலம் கொள்ளவேண்டுவது அன்பு; தள்ளவேண்டுவது சாதி என்பதே!

“சாதி உணர்வை விடுத்து, அன்பால் நெஞ்சை நிறைத்துப் பணிவீர்!! நொடிப்பொழுதில் சிவனருள் கிட்டும்” என்கிறார் நாவுக்கரசர். சாதிஉணர்வின் தீமையையும், அன்பின் ஆற்றலையும் உணர்த்தவே “மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே” எனச் சைவநெறி, அன்புநெறி என்று அப்பர் நம்மை நெறிப்படுத்துகின்றார்.

மலை பள்ளத்தாக்கு, அருவி கடல் என இவ்வுலகையே ஏற்றத்தாழ்வுடன் படைத்திருக்கிறான் இறைவன்; எனவே, ஏற்றத்தாழ்வுகளே இறைநீதி என்று ஏன் கொள்ளக்கூடாது என்று வினவும் கேள்விகளுக்கு விடைதந்து உங்கள் சிந்தனையை இனிமையாக்கும் திருவாசகத் தேன் அடுத்தவாரம் துளிர்க்கும்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x