Published : 08 Sep 2016 10:22 AM
Last Updated : 08 Sep 2016 10:22 AM

உண்மையான துறவி யார்?

சுவாமி விவேகானந்தரின் நேரடிச் சீடர் சுவாமி கல்யாணானந்தர். அவருக்கு 1900-ல் துறவு தீட்சை வழங்கியபோது, “கல்யாண், எனக்குக் குருதட்சிணையாகத் தர உன்னிடம் என்ன வைத்திருக்கிறாய்? என்றார். அவரோ “இதோ என்னையே தருகிறேன். நான் தங்கள் அடிமை. தங்களின் கட்டளைப்படி எதைவேண்டுமானாலும் செய்கிறேன்” என்றார்.

சுவாமிஜியோ, “இதுதான் எனக்கு வேண்டும். கொஞ்சம் பணம் தருகிறேன். ஹரித்துவாருக்குப் போ. நிலத்தை வாங்கு. குடிசைகளைக் கட்டு. மருத்துவ உதவியின்றிப் பலர் இறந்து போகிறார்கள். சாலையோரங்களில் எவராவது நோயுற்றுக் கிடந்தால் அவர்களைக் குடிசைக்குத் தூக்கிவந்து அவர்களுக்குப் பணிவிடைசெய். தொண்டுபுரி” என்றார்.

தன் குருவின் கட்டளைப்படி கல்யாணானந்தர் ஹரித்துவாருக்கு அருகில் கன்கல் என்ற இடத்தில் குடிசைகளை எழுப்பினார். ஏழை எளிய நோயாளிகளுக்குப் பணிவிடை செய்துவந்தார். 1904-ல் சுவாமி நிச்சயானந்தர் அங்குவந்து சேர்ந்தார். இவர்கள் இருவரும் பிச்சையேற்று வாழ்ந்து தொண்டு புரிந்தார்கள். உள்ளுர் துறவிகளோ இருவரையும் தீண்டத்தகாதவர்களாகத் தோட்டி சுவாமிகள் என்று ஏளனம் செய்தார்கள்.

கைலாஷ் ஆசிரமத்தின் தலைவரும் மிகப்பெரும் ஞானியுமான சுவாமி தனராஜ்கிரி ஒருமுறை அந்த ஊருக்கு வந்தார். அவரைத் துறவிகளெல்லாம் வரவேற்று விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். அவரோ “விவேகானந்தரின் சீடர்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டேனே. உங்களுக்கு அவர்களைத் தெரியுமா?” என்று கேட்டார். அவர்கள் “ஆமாம் சுவாமி. பக்கத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தோட்டிச் சாமியார்கள்” என்றார்கள்.

“அப்படி என்ன செய்கிறார்கள்?” என்றார் கிரிமஹராஜ். “எல்லா எடுபிடி வேலைகளையும் செய்கிறார்கள்” என்றார்கள் சுற்றியிருந்த சாதுக்கள். “எடுபிடி வேலைகளா? உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் அவர்களின் மருத்துவமனைக்குப் போவதில்லையா?” என்று கேட்டார். போகிறோம் சுவாமி என்றார்கள். அங்கே போய் மருத்துவம் பார்த்துக் கொள்கிறீர்கள். ஆனால் அவர்களைத் தோட்டிச் சாமியார்கள் என்கிறீர்கள். முதலில் நேரில் சென்று அவர்களை விருந்துக்கு அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார் சுவாமிகள்.

துறவிகளில் ஒருவர் ஓடோடிப் போய் இருவரையும் விருந்துக்கு அழைத்தார். கல்யாணானந்தர் புறப்படச் சம்மதித்தார். ஆனால் நிச்சயானந்தர் மறுத்துவிட்டார். கிரி மஹராஜிடம் அவர்கள் வர மறுத்துவிட்டதைச் சொன்னார் அந்தத் துறவி. அவர்கள் இருவரும் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று போய்ச் சொல் என்றார் சுவாமிகள். மீண்டும் ஓடினார் அந்தத் துறவி. கல்யாணானந்தர், “சுவாமி தன்ராஜ்கிரி மஹராஜைப் புண்படுத்த வேண்டாம். நாம் அங்கு போவோம்” என்று நிச்சயானந்தரிடம் சொன்னார். ஆனால் அவரோ எதற்காக அங்கே நாம் போக வேண்டும்? அவர்களை நம்பி நாமில்லை. இன்றைக்குப் பெரிய விருந்து தருவார்கள். நாளை அதே காய்ந்த ரொட்டியைத்தான் நாம் உண்போம் என்று தடாலடியாகச் சொல்லிவிட்டார்.

ஏமாற்றத்தோடு திரும்பிய துறவி நடந்ததை கிரி மஹராஜிடம் தெரிவித்தார். இப்பொழுது சுவாமிகள் தன் சீடரிடம் அவர்கள் வராவிட்டால் இங்கு விழாவும் கிடையாது விருந்தும் கிடையாது என்று போய்ச் சொல்லி எப்படியாவது அழைத்துவா என்றார். சீடர் ஓடிப்போய் நிலைமையை எடுத்துச் சொன்னார். நிச்சயானந்தர் இப்பொழுதும் மறுத்தார். ஆனால் கல்யாணானந்தரோ “சுவாமி தன்ராஜ்கிரி மகராஜ் மிகப் பெரிய ஞானி. அவருடைய அழைப்பை நாம் ஏற்காமல் இருக்க வேண்டாம். அவருக்காகவாவது விருந்துக்குப் போவோம்” என்றார். இருவரும் விருந்துக்குச் சென்றார்கள்.

மனம் மாறியது

கிரி மஹராஜ் வாசலுக்கே வந்து இருவரையும் வணங்கி வரவேற்றார். தன் இருபுறத்திலும் அவர்களை அமரவைத்தார். சுற்றியிருந்தவர்கள் திகைத்துப் போனார்கள். பின் அனைவரையும் பார்த்துச் சொன்னார்: “நீங்களெல்லாம் பெரிய துறவிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையான துறவிகள் என்றால் இவர்கள்தான். சுவாமி விவேகானந்தரின் கொள்கைப்படி மாற்றுக் குறையாத வாழ்க்கை வாழ்ந்து எளிய மக்களுக்குத் தொண்டு புரிகிறார்கள்.

நீங்களெல்லாம் நோயால் வதைபட்டபோது உங்களுக்குப் பணிவிடை செய்த இவர்களைப் பார்த்துத் தோட்டிச் சாமியார்கள் என்கிறீர்கள். வெட்கமாக இல்லையா? குழந்தையாக இருந்தபோது உங்களின் மலத்தைக் கழுவியது யார்? தாய்தானே? அவரைத் தீண்டத்தகாதவளாகச் சொல்வீர்களா ஒதுக்குவீர்களா?” என்று கடுமையாக வசைபொழிந்தார். அதோடு, இவர்கள் செய்த அவமானங்களுக்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று வேண்டினார். உடனே இருவரும் “தயவுசெய்து அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் சுவாமி. எந்த அவமானத்திற்கும் மனதிற்குள் இடமளிக்கவில்லை” என்றார்கள்.

தூற்றியவர்கள் மனம் மாறியது. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை அன்றே உணர்ந்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x