Last Updated : 06 Mar, 2014 12:00 AM

 

Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM

செட்டிப் புண்ணியம் யோக ஹயக்ரீவர்: தேர்வில் வெற்றிபெற

கல்வி, ஞானம், கலை, பேச்சுத் திறமை, புத்திக்கூர்மை, செயற்கரிய செய்கை இவை அனைத்திற்கும் அதிபதி திருமாலின் பதினெட்டாவது அவதாரமான ஸ்ரீஹயக்ரீவர். உள்ளன்போடு அவரை வழிபட்டுவருப வர்களுக்கு சிரமம் ஏதுமின்றி சகல சாஸ்திர ஞானமும் உண்டாகமும் என்பது நம்பிக்கை.

ஹயக்ரீவர் என்றால் குதிரை முகம் உடையவர் என்று பொருள். குதிரை முகம் கொண்ட அரசன் ஒருவன் ஹயக்ரீவன் என்ற பெயரில் ஒரு காலத்தில் ஆட்சி செய்துவந்தான். அவன் தேவி பராசக்தியிடம், ‘ஹயக்ரீவனுக்கு, ஹயக்ரீவனைத் தவிர வேறு யாராலும் மரணம் ஏற்படக் கூடாது’ என்று வரம் பெற்றான்.

அந்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பூவுலகில் பெரும் அட்டகாசங்களில் ஈடுபட்ட அவனை வெல்வதற்கு யாராலும் முடியவில்லை. பகவான் ஸ்ரீநாராயணன் பரிமுகம் கொண்ட ஹயக்ரீவனாக அவதாரம் செய்து அவனைக் கொன்று, அவன் கவர்ந்து சென்ற வேதமறைகளை மீட்டுக் கொடுத்தார்.

ஸ்ரீஹயக்ரீவர் கோயில் கொண்டுள்ள தலங்களில் முதன்மையானது திருவஹீந்திரபுரம் என்னும் திருவயிந்தைத் தலமாகும். ஆதிசேஷன் தவமிருந்து பேறு பெற்ற தலமாதலால் திருவஹீந்திரபுரம் என்ற பெயர் உண்டாயிற்று. கடலூருக்கு மேற்கில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. ஆலயத்தில் தாயார் ஹேமாப்புஜ வல்லியுடன் அருள்மிகு தேவநாத சுவாமி சேவை சாதிக்கிறார். இத்தலத்தை ஒட்டிய குன்றுக்கு ஔஷத கிரி என்று (ஔஷதம் என்றால் மருந்து) பெயர். அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்துப் பறந்துவரும்போது அம்மலையிலிருந்து சிதறி விழுந்த ஒரு பகுதியே ஔஷத கிரியாக ஆனது என்பார்கள்.

திருவஹீந்திரபுரம் தேவநாதப் பெருமாள் கோயிலின் அபிமானத் தலமாக விளங்கும் செட்டிப் புண்ணியம் என்ற கிராமம் சிங்கப் பெருமாள் கோயிலுக்கு மேற்கில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் வரதராஜப் பெருமாள் சன்னிதி இங்கே நிர்மாணம் செய்யப்பட்டது. திருவஹீந்திரபுரம் தேவநாத சுவாமியின் உற்சவ விக்கிரகங்கள் 1848ஆம் ஆண்டு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பூஜையில் உள்ளன. திருவஹீந்திரபுரம் கோயிலில் பூஜையிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த யோக ஹயக்ரீவ மூர்த்தியும் செட்டிப் புண்ணியத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துவருகிறார்.

இந்த ஹயக்ரீவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். கல்லூரி, பள்ளிக்கூடத் தேர்வு நேரங்களின்போது, சென்னை மாநகரிலிருந்தும் இதர பகுதிகளிலிருந்தும் மாணவர்களும் பெற்றோர்களும் ஹயக்ரீவரைத் தரிசிக்க இங்கு கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். நெய்தீபம், ஏலக்காய் மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.

லலிதா சகஸ்ரநாமம் என்ற உயர்ந்த மந்திரத்தை அகத்திய முனிவருக்கு உபதேசம் செய்தவர் ஹயக்ரீவர். இந்து தர்ம சாஸ்திரங்களில் முக்கியமான நூல்களில் ஒன்றான ‘யாக்ஞவல்கிய ஸ்மிருதி’ என்ற நூலை ஹயக்ரீவரின் அருளாசி பெற்றே யாக்ஞவல்கிய முனிவர் இயற்றினார் என்று கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x