Published : 16 Feb 2017 09:40 AM
Last Updated : 16 Feb 2017 09:40 AM

தெய்வத்தின் குரல்: வேதம் - ஒலியின் பயனும் பொருளின் பயனும்

எனக்கு வேடிக்கையாக ஒன்று தோன்றுவதைச் சொல்ல வேண்டும். ஸம்ஸ்கிருதத்தில் ஒன்றைச் சொல்லி, அதற்குப் பின்னால் தரம் என்று சேர்த்தால் முதலில் சொன்னதைவிட (comparitive degree) இது சிலாக்கியமாகிறது என்று அர்த்தம்.

‘வீர்யவத்' என்றால் ‘சக்தியுள்ள' என்று அர்த்தம். ‘வீர்யவத்தரம்' என்றால் ‘அந்த சக்தி மேலும் அதிகமான' என்று அர்த்தம். சாந்தோக்ய உபநிஷத்தில் (1.1.10) ஓம்காரத்தின் தத்துவத்தை அறிந்து உபாசிக்கிறவர்களுக்கே ‘வீர்யவத்தர'மான பலன் கிடைக்கிறது என்று சொல்லியிருக்கிறது.

இப்படித் ‘தரம்' போட்டு சொன்னதாலேயே அர்த்தம் தெரியாமல் ஓம்கார உபாசனை பண்ணுகிறவர்களுக்கும் ‘வீர்யவத்'தான பலன் கிடைக்கிறது என்று ஆகிறது. அறிந்து பண்ணுகிறவர்களின் அளவுக்கு இல்லாவிடினும் மற்றவர்களுக்கும் சக்தி வாய்ந்த பயன் ஏற்படுகிறது என்று ஆச்சார்யாளும் பாஷ்யத்தில் சொல்கிறார்.

ஏன் என்றால்,அர்த்தம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், ‘பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்', ‘நம் பூர்விகர்கள் பண்ணியிருக்கிறார்கள்' என்பதற்காகவே ஒரு கர்மாவை ஒருத்தர் பண்ணினாலும், அந்த மனோபாவத்துக்கே நல்ல பலன் உண்டுதான். மற்ற கர்மாக்களை விட மந்திர உபாசனையில் இதே விசேஷமாகச் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் மந்திரத்தில் சரியான அக்ஷர உச்சாரணத்தினால் ஏற்படுகிற சலனம்தான் முக்கியமாக க்ஷேமத்தைத் தருவது. சப்தம் உண்டாக்கும் பலன்தான் இங்கே விசேஷம். அர்த்தத்தின் விசேஷம் அதற்கப்புறம் வருவதுதான்.

இதைப் பற்றி யோசிக்கும்போது, எனக்கு அர்த்தம் தெரியாமல் செய்வதில்தான் “வீர்யவத்தர”மான பலன்; அர்த்தம் தெரிந்து பண்ணினால் வெறும் “வீர்யவத்”தான் என்றுகூட வேடிக்கையாகத் தோன்றுவதுண்டு. அர்த்தம் தெரிந்துகொள்ளாமல் மந்திர ஜபம் பண்ணினால் அதிகப் பிரயோஜனம் உண்டு; தெரிந்தால் அவ்வளவு இல்லை என்று தோன்றுகிறது. அது எப்படி?

ஒரு கலெக்டர் இருக்கிறார். அவருக்கு ஒரு படிப்பாளி வக்கீலை வைத்து மனு எழுதுகிறார். ஓரெழுத்துக்கூடத் தெரியாத ஒரு குடியானவன் யாராவது ஒருவரிடம் எழுதி கலெக்டரிடம் நேரில் கொடுக்கிறான். எப்படியாவது நல்லது பண்ணவேண்டும் என்று வேண்டிக்கொண்டு மனுவைக் கொடுக்கிறான். கலெக்டர் பார்த்தார், 'பாவம்! ஒன்றும் தெரியாது. நம்பிக்கை மாத்திரம் இருக்கிறது என்று எண்ணி நல்லது பண்ணுவார்.

அதைப் போன்றதுதான் மந்திரமும். மந்திரத்துக்கு அர்த்தம் ஈச்வரனுக்குத்தான் தெரியும். நாம் போக்கிரித்தனமாக இருக்கக் கூடாது. வக்கீல் வைத்துப் பேசினால், அதில் குற்றம் ஏற்படுமானால், கலெக்டர் கோபித்துக்கொள்வார். தெரிந்து தப்பாகப் பண்ணினால் அதிகக் கோபம் உண்டாகும். தெரியாமல் தப்பாக இருந்தால், தெரியாமல் பண்ணுகிறான் என்று மன்னிக்கிற எண்ணம் ஏற்படும். “என்ன ஸார்! அர்த்தம் தெரியவில்லை; அதைப் பண்ணி என்ன பிரயோஜனம்?” என்று சொல்வது தப்பு. அர்த்தம் தெரியாமல் பண்ணுவதுதான் வீர்யவத்தரமாக எனக்குத் தோன்றுகிறது.

இது வேடிக்கைக்குச் சொன்னது. தற்காலத்தில் புத்தியின் கர்வமும், கிருத்ரிமமும் ஜாஸ்தியாகிவிட்டதையும், இதில் பாமரர்களுக்குள்ள விநய சம்பத்து பறிபோய்விடுவதையும் பார்க்கிறபோது, புத்தியே இல்லாமல் வெறும் நம்பிக்கையின் பேரில் பண்ணினால் சிலாக்கியமாய் இருக்குமோ என்று பட்டதால் இப்படிச் சொன்னேன்.

வாஸ்தவத்தில் புத்தியும் இருந்து விநயமாகவும் இருக்க வேண்டும். மந்திரங்களுக்கு அர்த்தம் சப்தத்துக்கு அடுத்தபடிதான் முக்கியம் என்றாலும் மந்திரங்களே நமக்கு தர்ம சாஸ்திரச் சட்டமாகவும் இருப்பதால் அவற்றின் அர்த்தமும் தெரிந்தால்தான் அந்தச் சட்டப்படி நடக்க முடியும்...

வேத அப்யாஸத்தில் சொன்ன ஆறு தப்புகளில் கடைசியில் வரும் ‘அல்ப கண்டன்' என்றால், ‘மெல்லிய குரலில் வேதம் சொல்லுகிறவன்' என்று அர்த்தம். இவனும் அதமன்தான். Full-throated என்று சொல்லுகிற மாதிரி நன்றாக கம்பீரமாக, உரக்க, வாய்விட்டு வேத சப்தம் எவ்வளவு தூரம் வியாபிக்கும்படியாகச் சொல்ல முடியுமோ அப்படிச் சொல்ல வேண்டும்.

வேத மந்திர சப்தம் அதைச் சொல்கிறவனுக்குள்ளே நல்ல நாடி சலனங்களை உண்டு பண்ணுவதோடு, கேட்கிறவர்களுக்கும் அப்படிப்பட்ட சலனத்தை உண்டு பண்ணுவது. அட்மாஸ்ஃபியரில் அது பரவியிருப்பதாலேயே இகலோகத்துக்கும் பரலோகத்துக்கும் க்ஷேமமான பலன்கள் ஏற்படும். ஆகையால் அட்மாஸ்ஃபியரில் அது எவ்வளவு தூரம் வியாபிக்கும்படிப் பண்ண முடியுமோ அவ்வளவுக்கு பலமாகக் கோஷிக்க வேண்டும்.

மந்திரத்திலிருந்து முழுப் பிரயோஜனத்தை அடைய வேணடுமானால், இந்த ஆறு விதிகளைப் பின்பற்றினால் தான் முடியும்.

- தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x