

தன்வந்திரி திரயோதசி விரதம் - அக்டோபர் 21
உடல் நலம் காக்கவும், வாழ்நாளில் நோய் தாக்கம் ஏற்படாமல் இருக்கவும் ஆயுட்காலம் முழுவதும் இப்பூமியில் நீடித்திருக்கவும் விஷ்ணு புராணத்தில் ஒரு விரத வழிபாடு சொல்லப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் தேய்பிறை திரயோதசி நாளில் தன்வந்திரி திரயோதசி விரதம் மக்களுக்கான ஆயுட்காலம் பற்றிக் குறிப்பிட்டு நினைவூட்டவே வருகிறது.
தன்தேரஸ் என்று வடமாநிலங்களில் கோலாகல விழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் திருக்கதையைப் படித்து அவரை முறைப்படி வழிபட வேண்டும்.
தன்வந்திரி அவதாரம்
தீபாவளி அமாவாசைக்கு முன்தினம் வருகின்ற இந்த நாளில் தேவர்களும் அசுரப் படைகளும் பாற்கடலைக் கடைந்தபோது ஒரு கையில் அமிர்தகலசம் மற்றொரு கையில் மருத்துவ சாஸ்திரம் மற்றும் அதன் வழிமுறைகளோடு கூடிய ஓலைச் சுவடிகளோடு தன்வந்திரி வெளிவந்தார்.
ஆயுர்வேத சாஸ்திர முறைகளை உலகுக்கு உபதேசிக்க வந்த இவரை உலக மருத்துவர்கள் மானசீகக் குருவாகவும் கடவுளாகவும் ஏற்று வணங்கி வந்தால் உயர்நிலை பெறலாம் என்பது ஒரு தேவ ரகசியம்.
இதற்காக ஆயுள் ஸ்திர தந்திரம் என்கிற வழிபாட்டு விதிகளே தன்வந்திரி பகவானைப் பற்றி இருக்கிறது.
மகாவிஷ்ணுவின் அம்சமாக வெளிவந்த இவர் ஒரு பிறப்பில் காசிமன்னன் தன்வனது புதல்வன் எனப்பட்டார். அறுவை சிகிச்சை, ரணசிகிச்சைகளில் கைதேர்ந்தவர். தன்வந்திரியின் நான்காம் தலைமுறையின் பேரனாகிய காசி மன்னன் திவோதசனும் தேர்ச்சி உடைய மருத்துவன்.
மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டகம், குதிரை, யானை, பசுக்கள் மற்றும் தாவர இனங்களுக்கும் மருத்துவம் செய்யும் முறைகளை தன்வந்திரியும் அவரது வம்சாவழியினரும் கையாண்டனர் என்கிறது கால வரலாறு.
தன்தேரஸ் விழா
மருத்துவக் கடவுள் எனப்படும் தன்வந்திரியின் கருத்துப்படி இந்த உலகில் 121 வகையான மரணங்களும், ஆயிரத்து நூற்று முப்பதிரண்டு நோய்களும் ஏற்படுகின்றன. அவற்றில் அகால மரணம், சூன்ய மரணம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதைக் களைந்தெறியவே ‘தன்தேரஸ்' என்னும் விழா ஏற்பட்டு தன்வந்திரி திரயோதசி விரதம் கடைபிடிக்கப்பட்டது.
துலாமாசம் என்ற ஐப்பசியில் தங்கள் நோய்களைப் போக்க புனித தீர்த்தக்கட்டங்களுக்குச் சென்று ஸ்நானம் என்கின்ற புனித நீராடல் செய்யும்போது அங்குள்ள தெய்வங்களும் தீர்த்தம் அருள்வதைக் கண்டு தரிசிக்கிறோம்.
தன்வந்திரி திரயோதசி மகிமை
“ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்பாக வரும் தேய்பிறை திரயோதசி அன்று தன்வந்தரி பகவானைக் குறித்து விரதமிருந்து முறையாக வழிபட்டு பூஜை செய்து வீட்டில் தீபங்கள் ஏற்றிய பின் புனித தீர்த்தங்கள் நீர்நிலைகளுக்குச் சென்று தீபம் ஏற்றிவிட்டு தீப தானம், வஸ்திர தானம் செய்தாலும் யமனைக் குறித்து துதிக்கப்படுகிற யமாஷ்டகத் துதி படிப்பதாலும் துர்மரணங்களிலிருந்து மீண்டு தீர்க்கமான ஆயுளைப் பெறமுடியும்” என்று யமதர்மராஜா கூறியதாக வரலாறு உண்டு.
இந்த தன்வந்தரி திரயோதசி விரதத்தை இயலாமையால் கடைப்பிடிக்காமல் விட்டவர்கள் மகாவிஷ்ணுவுக்குரிய சனிக்கிழமையும் திரயோதசி திதியும் சேருகின்ற நாளில் காலை உதய காலத்திலிருந்து இரவு வரை ஒரு பொழுது விரதமிருந்து இரவு பாலும் துளசி தீர்த்தமும் அருந்தி விரத பூஜையைச்செய்து வரலாம்.
நமது உறுப்புகள் அனைத்திற்கும் களைப்பு தோன்றும்போது உடலுக்குள் உணவு மற்றும் ஆன்மிக சக்தியை ஏற்றுதல் அவசியமான ஒன்று. இதற்கு ஆன்மிக வழியில் உதவுவதே தன்வந்திரி திரயோதசி விரதம். அங்க இயக்கங்கள் முறையில் யோகாசனங்கள் ஓம்கார தியானம் போன்றவை செய்யலாம்.
விரதம் செய்யும் முறை
அதிகாலையில் எழுந்து மஞ்சள்தூள், துளசி இட்ட நீரில் குளித்துவிட்டு புதிய துடைப்பம், முறம் ஆகியவற்றை அலம்பி அதை வழிபட்டு வீடடுக்குத் தேவையான பொருட்களை பித்தளை பாத்திரம், தாமிரம் மற்ற பொருட்களை கடையில் வாங்கிவருவர். மாலைப்
பொழுது சாயும் முன் வீடு, நீர்நிலை தீர்த்தக் கட்டங்களுக்குச் சென்று தீபம் ஏற்றிவிட்டு தன்வந்திரியையும் யம தர்மராஜனையும் வழிபடுவார்கள். விளைநிலத்தில் சிறிது உழுத பிறகு மண் எடுத்துப் பசும்பாலில் கலந்து இலவம் பஞ்சு மரக் குச்சியைக் கொண்டு மறுபடியும் கலக்கித் தங்கள் உடல்மேல் தெளித்துக்கொள்வார்கள்.
இது வடஇந்தியாவில் நடைபெறும் தன்தேரஸ் (Than therus) என்னும் தன்வந்திரி திரயோதசி விரத முறை. இது இறந்தவரை வழிபடும் விரதமல்ல. உயிருடன் இருப்பவர்களது ஆயுளை நீட்டிக்க வழிபாடு செய்யும் விரதம்.
தமிழ்நாட்டில் விரத நாளன்று காலை தன்வந்திரி பகவானை நினைத்துத் துளசி நீர் விட்ட செப்பு அல்லது பித்தளை பாத்திரத்தில் மாவிலை துளசி வைத்து மகாவிஷ்ணு பூஜை, முறைப்படி கலசம் வைத்து, சுற்றிலும் 16 நெய்தீபங்களை ஏற்றி கலசத்தில் ஓம் கேசவா போற்றி, ஓம் நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா ஸ்ரீதரா, ரிஷிகேசா பத்மநாபா, தாமோதரா, தன்வந்திரியே போற்றி என்ற பன்னிரு நாமங்களைக் கூறி ஆத்ம பிரதட்சிணம் செய்து வழிபட்டு புளி, அன்னம், பால் பாயசம் படைத்து ஆரத்தி செய்ய வேண்டும்.
பகலில் சிறிதளவு உணவு எடுத்துக்கொண்டு உறக்கம் கொள்ளாது தன்வந்திரி காயத்ரி ஜெபித்த பின் தன்வந்திரி புராணக் கதையைப் படிக்க வேண்டும். மாலையில் அருகில் உள்ள நீர்நிலை, புஷ்கரணிகளுக்குச் சென்று தங்கள் வீட்டில் நோயுற்றவர்கள் இருந்தால் அவர் குறித்து வழிபட்டு யமதீபம், விஷ்ணு தீபம் ஏற்றிவர வேண்டும். இரவு வரை விரதம் காக்க வேண்டும்.