Last Updated : 11 May, 2017 10:56 AM

 

Published : 11 May 2017 10:56 AM
Last Updated : 11 May 2017 10:56 AM

நீயே உனக்கு ஒளியாக இரு

புத்தர் தனது இறுதி நாட்களை உணரத் துவங்கினார். ஒரு மதிய வேளையில், புத்தரின் பிரதான சீடரான ஆனந்தர், புத்தரின் படுக்கை அருகே வந்து, வணங்கிக் காலடியில் அமர்ந்தார்.

“ஆனந்தா, நான் பலவீனமாய் இருக்கிறேன். எண்பது வயதாகிவிட்டது. என் வாழ்நாள் செலவழிந்துவிட்டது. பழைய வண்டியை சிரமப்பட்டு இழுத்துச் செல்வதைப் போல, இந்த ததாகதா)வின் (தத+ஆகத= அவ்வாறு சென்றவர் உடலும், பல ஆதரவுக் கரங்களால் நகர்கிறது. புறப்பொருள்களைப் புறக்கணித்து, உணர்வற்ற கருதுநிலையில் மனதை ஒருமுகப்படுத்துதல் இந்த உடம்பை இதமாக்குகிறது. நான் இவ்வுலகில் சில மணித்துளிகள் மட்டுமே இருப்பேன்” என்றார்.

ஆனந்தர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

“ஆனந்தா, ஒரு பிட்சு, தனக்கே ஒரு தீவாகவும், தானே அடைக்கலமாகவும், வெளியே வேறு சரணடைதலும் இல்லாமல், அறநெறியே தீவாக, அறநெறியே அடைக்கலமாக இருப்பார். இவ்வுலகத்தின் மீதான ஆசையையும் துக்கத்தையும் கடந்தார் என்றால், உண்மையிலேயே அவர் தன்னுள் தீவாகவும், அடைக்கலமாகாவும், வேறு சரண் அடைதல் இல்லாமாலுமிருப்பார். ”

“ஆனந்தா, நீயும் உன்னுள் தீவாய் இரு, உனக்குள் அடைக்கலமாகு.. எந்த விதமான சரணடைதலையும் வெளியில் கொள்ளாதே. அற நெறியே உனது தீவு, அற நெறியே உனது அடைக்கலம். அதுதான் நான் உனக்குக் சொல்லும் இறுதி வார்த்தைகள்.”

“கடந்த 40 வருடங்களாக நான் உங்களுக்கு விளக்காக இருந்தேன். அந்த வெளிச்சத்தில் நீங்கள் நடந்தீர்கள். உங்களுக்கென்று வெளிச்சத்தை உருவாக்கவில்லை. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் நான் இருந்தாலும் அதுதான் நிலைமை. நீங்கள் சுய ஒளியை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ”

நீயே உனக்கு ஒளியாக இரு என்னும் அர்த்தத்தைத் தரும் ‘அப்போ தீபோ பவ’ என்ற வாசகத்தைக் கூறிவிட்டு புத்தர் தனது இறுதி மூச்சை நிறுத்தினார்.

அடுத்த நாள் ஆனந்தர் புதியவராக விழித்தார். அவரே புத்தராகிவிட்டார். அவருக்கு வேறொரு விளக்கு இனி தேவை இல்லை. அவரே, அவருக்கான விளக்காகிவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x