

ஒரு நாள் இயேசு கிறிஸ்து நைன் என்ற நகருக்கு வந்தார். அப்போது அங்கு ஒரு இறுதிச் சடங்கு நடப்பதைக் கண்டார். பிணம் அருகே ஒரு பெண் அழுதுகொண்டிருப்பதைக் கண்ட இயேசு, அந்தப் பெண்ணை அழைத்தார்.
“அழாதே, உன்னுடைய பிரச்சினை என்ன? அதை சொல்” என்றார் இயேசு.
“ நான் ஒரு விதவை. தற்போது என்னுடைய ஒரே மகனும் இறந்துவிட்டான்” என்று கூறித் தேம்பித் தேம்பி அழுது புலம்பினார் அந்தப் பெண்.
“கவலைப்படாதே” என்று அந்தப் பெண்ணைத் தேற்றிய இயேசு, பிணம் அருகே சென்றார்.
“இளைஞனே, நீ எழுந்து வா” என்றார் இயேசு.
அடுத்த வினாடியே பிணமாகக் கிடந்த இளைஞன் உயிர்த்தெழுந்தான். ஆமாம், அவனுக்கு மீண்டும் உயிர் வந்து விட்டது. இயேசு கிறிஸ்து சாவில் இருந்து அந்த இளைஞனை மீட்டுவிட்டார்.
இந்த அற்புதத்தைக் கண்ட இயேசுவின் சீடர்கள், “இதுபோன்ற ஒரு அற்புதத்தை இதற்கு முன்பு நாங்கள் கண்டதில்லை” என்று சிலிர்த்தார்கள்.
அப்போது இயேசு கிறிஸ்து, “நீங்கள் உண்மையாக இருந்தால், இதுபோன்ற அற்புதங்களை நிகழ்த்தலாம்” என்றார்.
இயேசு கிறிஸ்துவின் அற்புதத்தை அறிந்த நோய்வாய்ப்பட்டவர்கள், கெட்ட ஆவியால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழை எளியவர்கள் அவரைத் தேடிச் சாரை சாரையாக வந்தனர். அவர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் துன்பங்களை இயேசு கிறிஸ்து போக்கினார்.
அப்படி வந்த மக்களிடம், “பகைவர்களிடம் அன்பு காட்டுங்கள்” என்ற போதனைகளையும் வழங்க இயேசு கிறிஸ்து தவறவில்லை. இயேசு கிறிஸ்து இதுபோன்ற அற்புதங்கள் நிகழ்த்தப் பகைவர்களையும், பாவம் செய்தவர்களையும் அவர் ரட்சித்ததே காரணம்.