

தெய்வம் என்று கொண்டாடினாலும், இயற்கை என்று கொண்டாடினாலும் சூரியன் உலக வாழ்வை இடையறாமல் அருளுவதற்குத் தயங்குவதில்லை. இச்சூரியனை ஞாயிறு போற்றுதும் என்று சிலப்பதிகாரத்தில் போற்றியவர் இளங்கோ அடிகள்.
சூரியனின் சூடு தாங்க முடியவில்லை என்று கூறி இவரது மனைவி சம்ஞா, தன்னுடைய நிழலை, தனக்கு பதிலாக சூரியனுடன் இருக்குமாறு செய்துவிட்டு சிறிது காலம் விலகி இருந்தாள். இப்புது பெண் உருவத்தின் பெயர் சாயா. ஆனால் சூரியனின் தாய் அதிதி இவரைத் தன் கர்ப்பத்தில் தாங்கிப் பெற்றெடுத்தாள் என்கிறது புராணம். ஆதித்தியனைத் தொழுதால் சகல சக்திகளும் பெறலாம் என்கிறது அகத்திய மகாமுனியின் `ஆதித்திய ஹிருதயம் புண்யம்` .என்று தொடங்கும் சுலோகம்.
ராம ராவண யுத்தத்தைக் காண முப்பது முக்கோடி தேவர்களும் கூடுகிறார்கள். இவர்களுடன் சுமார் நாற்பதாயிரம் முனிவர்களும் யுத்தத்தைக் காண வருகிறார்கள். அப்போது அங்கு வந்த அகத்திய முனி, சூரிய குலத்தில் தோன்றிய ராமருக்கு, சூரியனின் புகழையும் சக்தியைப் பற்றியும் கூறி, அவரை வணங்கினால் போரில் வெல்லலாம் என்று கூறுகிறார். இவர் கூறியதை வால்மீகி தனது ராமாயணத்தில் எடுத்துக்காட்டுகிறார். இதில் சூரியனின் புகழ் கூறப்படுகிறது. அதிலிருந்து சில வரிகள்...
சூரியனின் பெருமை
ஆயிரக்கணக்கான கதிர்களை உடைய சூரியன் உலகெங்கும் பசுமை வளரப் பச்சை நிறக் குதிரைகளைக் கொண்டுள்ளான். அனைத்து வகையான நிறங்களும் இந்தக் கதிர்களில் உண்டு என்றாலும், புறக் கண்ணுக்குப் புலப்படும் ஏழு வகையான வண்ணங்களே வானவில் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஏழு நிறங்களே அவனது தேருக்கான ஏழு குதிரைகள் என்பர்.
மரீசிமான் என்ற பெயரும் கொண்ட சூரியன் தன்னுடைய கதிர்களால் உலகனைத்தையும் நடத்துபவன். அதனால் உலக இயக்கங்களுக்கெல்லாம் ஆதாரமானவன். அறியாமை இருளை நீக்குபவன். இதனால் உயிர்கள் அறிவு பெறுகின்றன. மகிழ்ச்சி பொங்கிப் பிரவகிக்கிறது.
சூரியன் மிகுந்த வலிமை உடையவன். இவனது கிரணங்களால் உயிர்கள், உயிர்ச்சத்து பெறுகின்றன. எங்கும் பரவியிருக்கின்ற கதிர்களை உடையவன் என்பதால் அம்சுமான் என அழைக்கப்படுகிறான் சூரியன். பொன்மயமான கருப்பையை உடையவன். இதனால் பொன்னான இவ்வுலகத்தை உண்டாக்குகிறான். பாஸ்கரன் என்பதால் ஓளி வீசித் திகழும் இவன் சந்திரனுக்கு ஒளி தந்து, அவன் மூலம் குளிர்ச்சியையும் தருபவனாக இருக்கிறான்.
இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற சூரியனை அனைத்து மக்களும் போற்றுகிறார்கள். சூரிய நமஸ்காரம் அனைத்து மக்களாலும் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியன் தன் வடதிசைப் பயணத்தைத் தொடங்கும் நாளே ரதசப்தமி. இந்த வடதிசைப் பயணத்தின்போது பகல் பொழுது அதிகரிக்கும். இருள் குறையும். இதையே உத்தராயண புண்ணிய காலம் என்று சொல்வார்கள். இதைக் குறிக்கும் நாள் என்பதால் ரத சப்தமி நாள் புனிதமானதாகக் கருதப்படுகிறது.