Published : 09 Mar 2017 09:43 AM
Last Updated : 09 Mar 2017 09:43 AM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 20: முழுமுதலான கடவுள்

முழுமுதற் கடவுளாம், விநாயகப் பெருமானுக்கு முப்பத்தியிரண்டு பெயர்களைச் சூட்டி அழகு பார்க்கிறது ஆன்மிக உலகம். அதில் ஒரு திருநாமம் நர்த்தன விநாயகர். அவர் கற்பக மரத்தின் கீழ், ஆனந்த நர்த்தன விநாயகராகக் காட்சி தந்து, ஆனந்தமாய் வரங்களை அள்ளி வழங்கி அருள்வதாக கூறப்படுகிறது. எதைக் கேட்டாலும் தரும் கற்பக மரம், தனக்காக எதையாவது கேட்டுப் பெற்றிருக்குமானால் அது, இந்த நர்த்தன விநாயகரின் ஆனந்த நடனத்தை நித்தம் காணும் பாக்கியமாகத்தான் இருக்கக்கூடும்.

இங்கே விநாயகருக்கு மட்டும்தான் முழுமுதற் கடவுள் என்று பெயர். முழுமுதல் - மூலம் என்பதே விநாயகப் பெருமான்தானாம். ப்ரணவ மந்திரமே அனைத்திற்கும் மூலம். இந்தப் ப்ரணவ மந்திரத்தில் இருந்துதான் பிரபஞ்ச உருவாக்கம் நிகழ்கிறது. அதனால்தான் அந்த ஓம்காரத்திற்கு உருவமும், கணங்களுக்கெல்லாம் அதிபதி என்ற வகையில் கணபதி என்ற பெயரும் கொடுத்து, எல்லோருக்கும் மூத்தவர் என்பதால் ‘ஜ்யேஷ்டராஜர்’ என்றும் ரிஷிகள் போற்றுகிறார்கள். இந்த மூலமே சிவமாகவும், சக்தியாகவும் இன்ன பிறவாகவும் தோற்றம்கொண்டு இந்தப் பிரபஞ்சத்தைப் பரிபாலனம் பண்ணுகிறது. அதாவது ஒரே நடிகரே, அப்பாவாக, அம்மாவாக, பிள்ளையாக, பேரனாக நடிப்பது போன்றதே இது. அப்படியாயின் ஆட்டத்திற்கு மூலமே இந்த கணபதிதானே. அவர் ஆடாமல், பின் யார் ஆடுவார்? இதுதான் அத்வைதம் சொல்லும் ஒன்றிலிருந்தே எல்லாம், ஒன்றே எல்லாம்.

யானையைப் பாருங்கள்

உலகத்தில் பார்க்கப் பார்க்க அலுக்காத விஷயங்கள் என்று கூறப்படுபவை மூன்று - நிலவு, கடல், யானை. அந்த யானையை நன்கு உற்று நோக்கிப் பாருங்கள். நடனமே உருவான வடிவம் அது. தும்பிக்கையை மேலும் கீழும் பக்கங்களிலுமாக அசைத்தபடியே இருக்கும். முன்னங்காலையும், பின்னங்காலையும் தூக்கி ஆட்டியபடியே இருக்கும். முறம் போன்ற காதுகளை விசிறியபடியே இருக்கும். இவை போதாதென்று உடம்பை வேறு மெல்ல இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாய் அசைத்தபடியே நிற்கும். அந்த அழகே அழகுதான். அதனால்தான் முழு முதல், தன் படைப்பில் பெரியதும், அழகியதும் ஆடுவதுமான படைப்பையே தன் உருவத்தில் சேர்த்துக்கொண்டது போலும்.

தந்தையாக ஆடும்போது பிரபஞ்ச இயக்கம். தனயனாக ஆடும்போது மகிழ்வான உலகம். இதுதான் அந்த முழுமுதலின் விளையாட்டு.

பூவுலகைச் செழிக்கச் செய்யும் ஓங்காரம்

தந்தையாக நடராஜர் ஆடும்போது, உடுக்கையில் இருந்து ஓம்கார ஒலி எழுப்பி அது பிரபஞ்சத்தை இயக்குகிறது. பிள்ளையான, பிள்ளையார் ஆடும்போதோ, காது அசைவிலேயே, ஓங்கார ஒலி எழுந்து பலப்பல நல்ல அதிர்வுகளை அலையலையாய் பரவச் செய்து பூவுலகைச் செழிக்கச்

செய்கிறது. பிரணவ வடிவமே ஆடும்போது கேட்கவா வேண்டும்! பிள்ளையார் நடனமாடுவதைப் பார்ப்பதற்கே கோடிப்புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனந்த நடராஜமூர்த்தி பதஞ்சலி, வியாக்ரபாதர் உள்ளிட்ட ரிஷிகளுக்கு தில்லைவனத்தில் நடனக்காட்சி கொடுத்தபோது மற்றவர்களெல்லாம் வாத்தியங்கள் வாசிக்கவும் - கானமிசைக்கவும் என இருந்தபோது பிள்ளையார் மட்டும் தானும் துள்ளிக்குதித்து ஆடியது தெளிவாகிறது. நன்கு கவனித்தோமாயின், நடராஜருக்கும், விநாயகருக்கும் மட்டுமே உரியது இந்த நடனத்தோற்றம். மற்றவையெல்லாம் ஏதோ ஒரு காரணத்தால் உருவானவை (காளிங்கன்-கிருஷ்ணர்-நர்த்தனம், ஆஞ்சநேயர்-பரவசம் இதுபோன்று அமையும்)

இந்த ஒன்றே எல்லாச் செய்தியையும் நமக்குக் கூறிவிடும். ஆனந்த நடராஜ மூர்த்தியாக ஆடும்போது, நடனத்தில், நாம் நம்மையே மறந்து, பரவச நிலையில் நிற்போம். ஆனால் இன்னும் எத்தனையோ ஜென்மங்களை எடுக்க வேண்டிய நிலையில் உள்ள நாம், விநாயகர் ஆடுவதை, மெய்மறந்து பார்க்கவே முடியாது. அவரது நர்த்தன தரிசனம் நம்மை இந்த உலகத்தில், வாழ்வாங்கு வாழ்ந்து சிறக்கவும், புண்ணியங்களைப் பெருக்கிப் பாவங்களைக் குறைக்கவும் வைத்துவிடும்.

ஆனந்தம் கொடுக்கும் விநாயக உருவம்

அவரது சின்னக் கண்களை உருட்டும்போதும், பெரிய காதுகளை அசைக்கும்போதும் தும்பிக்கையைத் தூக்கிச் சுழற்றும் போதும் வயிறு குலுங்கும்போதும் மனம் களிப்படைந்து, மகிழ்ச்சியில் திளைத்து எழுகிறது.

அவர் நினைவு ஆனந்தத்தைக் கொடுத்தபடியே இருக்கிறது. பொறாமை, கோபம், கள்ளம் விலகியோட, காரியங்களை நன்றே செய்கிறோம். பாவங்கள் குறைய, பிறவித் துயரும் குறைகிறது. முக்தியும் சீக்கிரம் வாய்க்க வழி கிடைக்கிறது. அதுதானே நமக்கும் வேண்டியது. பக்தியும், அன்பும் கொண்டு, நர்த்தன கணபதியின் திருவுருவைப் பார்க்கும்போது நம் மனக்கண்ணில் இவை அத்தனையையும் கண்டுவிட முடியும். உணர்ந்து கொள்ள முடியும்!

கறுப்பு, வெள்ளையில் காட்டப்பட்டுள்ள நர்த்தன கணபதியின் திருவுருவம், ஆடல் அரசனின் கோயிலான சிதம்பரத்தில் உள்ளது. நடராஜரைத் தரிசனம் பண்ணிவிட்டு, இடப்பக்கமாக இறங்கினால் அந்த உள் பிரகாரத்திலேயே நேரே தரிசனம் தருபவர் இவரே! பூஜையுடன் கூடியவர். இவர் ஆடும் அழகே அழகுதான். இங்கு, நடராஜர் ஆடுவதைக் கண்டு பரவசமடையும் முனிவர்களும் தேவர்களும் இவரின் நடனத்தையும் கண்டு குதூகலிப்பதை மேலே முகிற் கூட்டங்கள் நடுவில் காட்டி இருப்பது கவனிக்கத்தக்கது. பூத கணங்கள் சூழ இவர் ஆறு கரங்களோடும் (தும்பிக்கையோடு ஏழு) ஆடுவதைப் பார்க்கையில் ஒன்றை உற்றுநோக்க வேண்டும். பாச, அங்குசத்தோடு சிவனுக்கே உரிய மழுவும் கையில் இருக்கிறது. இது குறிப்பால் உணர்த்துவது வேறென்ன நானே முழு முதல் என்பதுதான்.

மற்றைய வண்ணப்படம் மேலைச் சிதம்பரம். அதுதான்! கோவைக்குப் பெருமை சேர்க்கும் பேரூரில் உள்ள ஒரே கல்லினால் ஆன எட்டு அற்புதங்களில் முதலாவதாக இருக்கும் நர்த்தன விநாயகர். இதுவும் கனகசபை. இங்கும் சபைக்குள், நடராஜரும், சிவகாமியும் அங்கிருந்தபடியே இவரைப் பார்க்க, இவர் இங்கிருந்தபடி அங்கும் எங்கும் பார்த்தபடி ஆடுகிறார்.

இங்கும் கையில் மழு இருக்கிறது. சாதாரணமாக எலி மீதமர்ந்தோ தாமரையிலோ இருந்தபடி, விநாயகரைக் காட்டாமல், நடனக் கோலத்தில் காண்பித்ததில் இந்தச் சிற்பிகள் தாங்கள் இறையருள், பெற்றவர்கள் என்பதை நிரூபித்து விடுகிறார்கள். எங்கு யாரை எப்படிக் காண்பிக்க வேண்டும் என்ற குறிப்புகளையெல்லாம், அந்த முழுமுதற் கடவுளிடமிருந்து பெற்ற சிற்பிகளால் மட்டுமே இப்படிப்பட்ட பரம ரகசியங்களைக்கூட சூசகமாகச் சொல்லும் அற்புத சிற்பங்களை வடிக்க முடியும்.

(சிற்பங்கள் பேசும்…)

ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x