

விசுவாசத்தின் தந்தை என்று புகழப்படும் ஆபிரகாமின் ஆசீர்வதிக்கப்பட்ட மகனாகிய ஈசாக்கின் இரண்டு மகன்களின் கதையைப் பார்த்து வருகிறோம். தந்தையிடமிருந்து மூத்த மகனுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை ஈசாக்கின் இளைய மகனாகிய யாக்கோபு பெற்றுக்கொண்டார்.
இதனால் மூத்த மகனாகிய ஏசா, தம்பியின் மீது கொடுஞ்சினம் கொண்டார். ஈசாக்கின் மறைவுக்குப் பிறகு தம்பியைக் கொன்றுவிடத் திட்டமிட்டார். இதை அறிந்த அந்த இருவரின் தாயான ரெபேக்காள், யாக்கோபுவைக் காப்பாற்றும் விதமாக ஆரான் தேசத்தில் வாழ்ந்துவந்த தன் சகோதரன் லாபான் வீட்டுக்கு ஈசாக்கின் அனுமதியோடும் ஆசீர்வாதத்தோடும் யாக்கோபுவை அனுப்பிவைத்தாள்.
கடவுளின் வீடு
நீண்ட பயணத்துக்குப் பிறகு லூஸ் என்ற நகரின் புறத்தே பயணித்துக்கொண்டிருந்தார் யாக்கோபு . அப்போது சூரியன் அஸ்தமித்தது. இருளில் பயணிக்க விரும்பாமல் ஒரு கல்லை எடுத்து தலையணைபோல் தலைக்கு வைத்துப் படுத்தார். ஆழ்ந்த உறக்கத்தில் யாக்கோபு ஒரு கனவு கண்டார்.
கனவில் கடவுள் தோன்றினார். “நானே உன் கடவுள். உன் தாத்தாவான ஆபிரகாமுக்கும் உன் தந்தையாகிய ஈசாக்கிற்கும் நானே கடவுள். இப்போது நீ படுத்துறங்கும் இந்தப் பூமியையே உனக்குக் கொடுப்பேன். இது உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் உரியதாகும். உன் வழியே ஏராளமான சந்ததிகள் பிறப்பார்கள்.
அவர்கள் பூமியின் நான்கு திசைகளிலும் பரவிப் பெருகுவார்கள். உன்னாலும் உன் சந்ததிகளாலும் உலகிலுள்ள குடும்பங்கள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடு இருக்கிறேன். நீ போகிற ஒவ்வொரு இடத்திலும் உன்னைக் காப்பாற்றுவேன். நான் மீண்டும் உன்னை இங்கே கொண்டுவருவேன். எனது வாக்குறுதியை முடிக்கும்வரை உன்னை விட்டு விலக மாட்டேன்” என்றார்.
கனவு முடிந்ததும் தூக்கம் கலைந்து எழுந்த யாக்கோபு “இது கடவுளுடைய வீடு, பரலோகத்தின் வாசல்” என்றார்.
பொழுது புலர்ந்ததும் தலைக்கு வைத்துப்படுத்த கல்லை நிமிர்த்தி அதை நடுகல்லாக்கினார். அதன்மேல் எண்ணெய் ஊற்றினார். இவ்வாறு அவர் அந்தக் கல்லை நினைவுச் சின்னமாக ஆக்கினார். லூஸ் என்ற அந்த நகரத்துக்கு யாக்கோபு ‘பெத்தேல்’ என்று பெயரிட்டார். பிறகுஆரானை நோக்கிப் பயணம் செய்தார்.
வாக்குத் தவறிய லாபான்
ஆரானை அடைந்ததும் தனது மாமன் லாபானின் மகள் ராகேலைக் கண்டு காதல் கொண்டார் யாக்கோபு. அவளைத் திருமணம் செய்துதருமாறு லாபானிடம் கோரினார். ஏழு ஆண்டுகள் தனக்காக வேலை செய்தால் மட்டுமே ராக்கேலைத் திருமணம் செய்து தர முடியும் என்று சொன்ன லாபானின் வார்த்தைகளை நம்பி, ராக்கேல் மீதிருந்த காதலால் உழைத்துவந்தார். ஏழு ஆண்டுகளும் முடிந்தன.
ஆனால் ராக்கேலுக்குப் பதிலாகத் தன் மூத்த மகள் லேயாளை யாக்கோபுக்குத் தந்திரமாகத் திருமணம் செய்துவைத்தார் லாபான். மனமுடைந்த யாக்கோபுவிடம் , “மூத்தவள் இருக்கும்போது இளையவளுக்கு மணம் முடிக்க எங்கள் நாட்டில் அனுமதிக்க மாட்டோம். ஆனால் முதல் திருமணச் சடங்குகளை முடித்த பின் நான் உங்களுக்கு ராக்கேலையும் திருமணம் செய்து வைப்பேன்.
ஆனால் இன்னும் ஏழு ஆண்டுகள் எனக்கு நீங்கள் பணியாற்ற வேண்டும்” என்றார் லாபான். ராக்கேலை மனதார நேசித்த யாக்கோபு, மேலும் ஏழு ஆண்டுகள் வேலை செய்ய சம்மதித்து ராக்கேலையும் மணந்துகொண்டார். அந்நாட்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஆண்கள் மணந்துகொள்வது வழக்கத்தில் இருந்தது.
பல்கிப் பெருகிய குடும்பம்
இரண்டு மனைவியரைப்பெற்ற யாக்கோபு, இருவரிடமும் பாரபட்சமற்ற அன்பைச் செலுத்தினார். ரூபன், சிமியோன், லேவி, யூதா ஆகிய மகன்களை லேயாள் பெற்றெடுத்தாள். ராக்கேலோ குழந்தைப் பேறு இல்லாதவளாக மனமுடைந்து காணப்பட்டாள். ராக்கேலின் மனவாட்டம் யாக்கோபுவையும் பாதித்தது.
தன் பணிப்பெண்ணைக் கணவனுக்கு மனைவியாக்கி அவள் மூலம் பிறக்கும் குழந்தையைத் தனது வாரிசாக ஏற்றுக்கொள்ளும் வழக்கம் அந்நாட்களில் கடைப்பிடிக்கப்பட்டது. எனவே தனக்காகத் தன் தந்தை லாபான் அனுப்பிவைத்த பணிப்பெண்ணான பில்காளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள் ராக்கேல். பில்காளுக்கு தாண், நப்தலி என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர்.
ராக்கேலைத் தொடந்து மூத்தவளாகிய லேயாள் தனக்கு மேலும் பல பிள்ளைகள் வேண்டும் என்று விரும்பினாள். இதற்காகத் தன் தந்தை தனக்காக அனுப்பிவைத்த பணிப்பெண் சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள். அவளுக்கு காத், ஆசேர் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். இதன் பிறகு இசக்கார், செபுலோன் ஆகிய இரண்டு மகன்கள் லேயாளுக்குப் பிறந்தனர். இவ்வாறு லேயாள் ஆறு மகன்களைப் பெற்று குதூகலித்தாள். மேலும் தீனாள் என்ற மகளையும் லேயாள் பெற்றாள்.
தன் சகோதரியாகிய லேயாளை கடவுள் தொடர்ந்து ஆசீர்வதித்து வருவதைக் கண்ட ராக்கேல், அவள் மீது பொறாமைப்படுவதை நிறுத்திக்கொண்டு கடவுளிடம் கெஞ்சி பிரார்த்தனை செய்தாள். அவளது குரலைக் கேட்ட கடவுள், கருணை கொண்டு ஆசீர்வதித்தார். ராக்கேல் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றாள். “தேவன் எனது அவமானத்தை அகற்றி ஒரு மகனைத் தந்துவிட்டார்” என்று மகிழ்ச்சியடைந்தாள். அவள் தன் மகனுக்கு யோசேப் என்று பெயரிட்டாள். இவ்வாறு யாக்கோபுவின் குடும்பம் பல்கிப் பெருகியது.
லாபானை விட்டுப்பிரிந்து தனது பெற்றோர் வாழ்ந்துவந்த கானான் தேசத்துக்குத் திரும்பிச் செல்லத் தீர்மானித்தார் யாக்கோபு. எனவே தனது பெரிய குடும்பத்தையும், ஆட்டு மந்தை, மாட்டு மந்தை, ஒட்டங்கள், கோவேறு கழுதைகள், காவல் நாய்கள் ஆகியவற்றையும் அழைத்துக் கொண்டு நீண்ட பயணத்தைத் தொடங்கினார்.
(அடுத்த கதையில் காண்போம்)